சுவிற்சர்லாந்து நாட்டில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட ஈழத் தமிழர்களைச் சிறி லங்காவிற்குத் திருப்பி அனுப்புவதற்கு எதிராக ஜெனீவா நகரில் ஐ.நா. முன்றலிலே ஆர்ப்பாட்ட நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை காலை முதல் மாலை வரை இந்தக் கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வு இடம்பெற உள்ளது. புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில் தற்போது ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 22 வது கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ள பிரதிநிதிகளும் பங்கு கொள்வார்கள் எனத் தெரிகின்றது.
ஆர்ப்பாட்ட நிகழ்வை ஒட்டி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கலாநிதி நவநீதம் பிள்ளையிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட உள்ளது. குறித்த மகஜரை மனித உரிமைகள் பேரவையின் சிவில் பாதுகாப்புப் பிரிவுத் தலைவி யூன் ரே அம்மையாரிடம் கையளிப்பதற்கான ஏற்பாடுகளை சுவிஸ் தமிழர் பேரவையின் செயலாளர் தம்பிப்பிள்ளை நமசிவாயம் மேற்கொண்டுள்ளார்.
2009 மே மாதத்தில் சிறி லங்கா அரச படைகளுக்கும் விடுதலைப் புலகிளுக்கும் இடையிலான யுத்தம் முடிவிற்கு வந்ததை அடுத்து, நாட்டில் மோதல் முடிவடைந்து விட்டதாகக் கருதும் சுவிஸ் அரசாங்கம் புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்களை நிராகரித்து வருவதுடன், அவர்களை நயத்தாலும் பயத்தாலும் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. ஆதாரங்களாக வழங்கும் தகவல்களை ஏறெடுத்தும் பாராமல் தங்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு வருவதாக புகலிடக் கோரிக்கையாளர்கள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றார்கள். தமது கோரிக்கைகளும், மேன் முறையீடுகளும் உதாசீனம் செய்யப்படும் நிலையில் விடயத்தை சர்வதேச மட்டத்தில் எடுத்துச் செல்ல அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதேவேளை, புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப் படுபவர்கள் சிறி லங்காவில் பாலியல் ரீதியாகவும் வேறு விதமாகவும் துன்புறுத்தப் படுவதாக அண்மையில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது 140 பக்க அறிக்கையில் சுட்டிக் காட்டியிருந்தது. மோதல் முடிவிற்கு வந்துள்ள நிலையிலும் சிறி லங்காவில் தமிழ் மக்கள் பாரபட்சம், இராணுவ அச்சுறுத்தல், கடத்தல், பாலியல் வல்லுறவு உட்படப் பல கொடுமைகளுக்கு இலக்காகுவதாக உலக மன்றங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்ற போதிலும் அவற்றைக் கவனத்தில் எடுக்காது தமிழர்களைத் திருப்பி அனுப்புவதில் சுவிஸ் அரசாங்கம் அக்கறையாகச் செயற்பட்டு வருகின்றது. சுமார் 3000 பேர் வரையான தமிழர்களைத் தாம் திருப்பி அனுப்ப உத்தேசித்துள்தாக 2011 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் சமஷ்டி அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத் தக்கது.
துன்புறுத்தப் படாது மறுவாழ்வளிக்கப் பட்டதாக இலங்கை ஆதாரத்தோடு வெளியிட்ட செய்திகளை பல நாட்டு அரசியல் வாதிகள் சுட்டிக் காட்டியிருந்த சம்பவங்களும் உண்டு.
புகலிடத்தில் தமிழர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களைக் குழப்புவதற்கு கோத்தபாயா கும்பலினால் அனுப்பிவைக்கப்பட்ட தமிழர்கள் இனம்காணப்பட்டு துன்புறுத்தலின்றி வெளியேறினரா எனக் கருதவும் இடமுண்டு. இருந்தும் புகலிடக் கோரிக்கையாளர்களைத் திருப்பி அனுப்புவது கண்டிக்கப்படல் வேண்டும்.
நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசிவதைத் தடுக்க இயலாது.