வெள்ளி, 8 ஆகஸ்ட் 2008
சீனத் தலைநகர் பீஜிங்கில் 29வது ஒலிம்பிக் போட்டிகள் இந்திய நேரப்படி இன்று வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கியது.
கண் கவர் கலை நிகழ்ச்சிகளுக்கு இடையே நடந்த வண்ணமிகு வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பரவசத்திலும், வியப்பிலும் ஆழ்த்தின. தாங்கள் காண்பது நிஜமா, கனவா என்னும் அளவுக்கு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கலைஞர்கள் தங்கள் திறமையை உலகிற்கு வெளிப்படுத்தினர்.
பாரம்பரிய நடனம், மத்தள இசை, சீனர்கள் பழங்காலத்தில் வணிகத்திற்காக பயன்படுத்திய பிரம்மாண்டக் கப்பலை உருவாக்கிக் காட்டி பார்வையாளர்களை பழங்காலத்திற்கே அழைத்துச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து சீன இசைக்கலைஞர் ஒருவரும், 5 வயது சிறுமியும் ஒரே பியானோவில் ஒருசேர இசையமைத்து ரசிகர்களையும், நிகழ்ச்சி நடைபெற்ற பறவைக்கூடு மைதானத்தையும் தாலாட்டினர்.
அப்போது பறவைக்கூடு மைதானத்தின் மாதிரித் தோற்றத்தை அச்சு அசலாக நடனக் கலைஞர்கள் உருவாக்கிக் காட்டினர். அந்த மைதானத்தின் நடுவே இசைக் கலைஞரும், சிறுமியும் தொடர்ந்து பியானோ வாசித்த வண்ணம் இருந்தனர்.
பின்னர் பஞ்ச பூதங்களான நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயத்தை குறிக்கும் நிகழ்ச்சியும், குழந்தைகள் உலக பசுமையை வலியுறுத்தி படம் வரைய, அவர்களைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கான சண்டைக் கலைஞர்கள் சீனாவின் பாரம்பரிய கலையை வெளிப்படுத்தும் நிச்சியும், அதைத் தொடர்ந்து பறவைக் கூடு மைதானத்தைச் சுற்றிலும் பறவைகள் பறப்பது போலவும், அதை குழந்தைகள் ஆரவாரமாக கையசைத்து வரவேற்பது போலவும் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
இதையடுத்து ஒலிம்பிக் வாசகமான “ஒரு உலகம் ஒரு இலக்கு” (One World One goal) என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் 75 அடி உயர உலக உருண்டை மைதானத்தின் நடுவே உருவாக்கப்பட்டு அதில் ஒளிவெள்ளம் மூலம் முழு உலக வரைபடமும் உருவாக்கிக் காட்டப்பட்டது. அந்த உலக உருண்டையின் உச்சியில் சீனப் பாடகரும் பாடகியும் தங்கள் குரல் வளத்தால் ரசிகர்களின் மனதை கிறங்கடித்தனர்.
பாடலுக்கு இடையே உலக உருண்டையில் ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெறும் நீச்சல் உள்ளிட்ட போட்டிகள் வீடியோவாக பிரதிபலிக்கப்பட்டன. முடிவில் பறவைக்கூடு மைதானம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரம்மாண்டமான வாண வேடிக்கைகள் நடத்தப்பட்டன.
இதைத் தொடர்ந்த சீனாவில் உள்ள அனைத்து பாரம்பரிய இனத்தினரும் பங்கேற்ற மாபெரும் நடன, இசை நிகழ்ச்சிக்கு பின்னர் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர், வீராங்கனைகள் தங்கள் நாட்டு தேசியக் கொடியுடன் அரங்கை வலம் வந்த தங்கள் வருகையை ரசிகர்கள் மத்தியில் பதிவு செய்தனர்.