14.08.2008.
பிரிந்துபோன தெற்கு அஸெட்டியா பிராந்தியத்தை மீண்டும் கைப்பற்றுவதற்காக ஜோர்ஜியா ஒரு முக்கிய இராணுவ நடவடிக்கையை நடத்திய ஒரு வார காலத்தின் பின்னர், ஜோர்ஜியாவின் ஆட்புல ஒருமைப்பாடு என்ற விடயம் பொருத்தமற்றது என்று ரஷ்யா நிராகரித்துள்ளது.
தெற்கு அஸெட்டியாவும் ஜோர்ஜியாவில் இருந்து பிரிந்துபோன மற்றுமொரு பிராந்தியமான அப்காசியாவும், ஜோர்ஜியாவின் மாநிலமாக மீண்டும் பலவந்தமாக மாற்றப்பட என்றும் உடன்படமாட்டார்கள் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரொவ் கூறியுள்ளார்.
ஆனால், பிரிந்துபோன அந்தப் பிராந்தியங்களில் மேலும் சர்வதேச கண்காணிப்பாளர்களை நியமிப்பதில் தமக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பு, அங்கு நூறு கண்காணிப்பாளர்களை அனுப்புவது குறித்து ஆராய்ந்துவருகிறது.
அதேவேளை, அண்மைய போர்நிறுத்தத்தை மத்தியஸ்தம் செய்த பிரான்ஸ் நாட்டின் அதிபர் சர்கோஸி அவர்களுடன் பேச்சு நடத்துவதற்காக அமெரிக்க அரசுத்துறைச் செயலர் கொண்டோலீஸா ரைஸ் அவர்கள் பி்ரான்ஸ் சென்றுள்ளார்.
தற்போது கோரி நகரினுள் ஜோர்ஜிய பொலிஸார் திரும்புவதற்கு ரஷ்ய படையினர் அனுமதியளிக்க ஆரம்பித்துள்ளனர்.
இதனிடையே, அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் ரொபர்ட் கேட்ஸ், ஜோர்ஜியா பிரச்சினை காரணமாக அமெரிக்க-ரஷ்ய உறவுகள் மோசமாகப் பாதிக்கப்படலாம் என்று எச்சரித்துள்ளார்
ஜோர்ஜியா நிலவரம் குறித்து சர்வதேச மனித உரிமை அமைப்பு கவலை!
—————————————————————————-
ஜோர்ஜியாவின் அனைத்து தரப்பினராலும் நடத்தப்படும் கண்மூடித்தனமான தாக்குதல்கள் என தான் கருதும் நடவடிக்கைகள் குறித்து சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.
ரஷ்ய, ஜோர்ஜிய மற்றும் தெற்கு அசெட்டியாவின் துருப்புக்கள்
பொதுமக்களை பாதுகாக்கும் தமது கடமையிலிருந்து தவறி விட்டது போல தோன்றுகிறது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
இதனிடையே மோதல்களை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்த பிறகும் மனிதநேயப் பணிகளை முன்னெடுக்கும் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றடைவதில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவிக்கிறது.
இதற்கு ரஷ்யப் படைகளை மட்டும் தாம் தனிமைப்படுத்தி குற்றம் கூறாவிட்டாலும், ஜார்ஜிய அதிகாரிகள் ஒத்துழைப்பை வழங்குகிறார்கள் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர் கூறியுள்ளார்.
BBC.