இலங்கையில் பேரினவாதக் கட்சிகள் தேசிய இன ஒடுக்குமுறையைத் தொடர்வதன் ஊடாகவே தம்மைத் தக்கவைத்துக்கொள்ள முயல்கின்றன என எதிர்க்கட்சித் தலைவர் ரனில் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். சிங்கள மக்கள் மத்தியில் பேரினவாதக் கருத்துக்க்ளை விதைத்து பாசிச அதிகாரத்தை நிறுவ முயல்வதே இவர்கள் அனைவரதும் நோக்கம். இலங்கையின் இரண்டு முக்கிய கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியன மட்டுமல்ல, ஜே.வி.பி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, நவ சமசமாஜக் கட்சி, ஜேவிபி இலிருந்து பிரிந்து சிதைந்து போன முன்னிலை சோசலிசக் கட்சி போன்றனவும் பெருந்தேசிய ஒடுக்குமுறையின் ஊடாக பாசிசக் கருத்துக்களையே முன்வைக்கின்றன.
சிங்கள மக்கள் மத்தியில் திட்டமிட்டு சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான அச்சத்தை ஏற்படுத்தும் இக் கட்சிகள் அந்த அச்சத்தைப் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான வெறுப்பாக சிங்கள மக்கள் மத்தியில் விதைக்கின்றன. இதன் மறுபக்கத்தில் நாங்கள் சிங்களவர்களை அழிப்போம் என்று பெருந்தேசிய வாதிகளைப் பலப்படுத்தும் தமிழ் பிழைப்புவாத தேசியவாதிகள் காணப்படுகின்றனர்.
13 வது திருத்தச்சட்டத்திற்கு மேல் எதனையும் வழங்க முடியாது என ரனில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். ‘ஜனசெத பெரமுன’வின் தலைவர் வண.பத்தரமுல்ல சீல ரத்ன தேரரை தனது அலுவலகத்தில் ரணில் விக்கிரமசிங்க நேற்று சந்தித்தார். இதன்பின்னர் அங்கு இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே ரணில் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.
ஆக, தமிழ்ப் பேசும் மக்கள் போராட்டத்தின் ஊடாக மட்டுமே உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை மகிந்தவும் ரனிலும் கூட்டாகத் தெரிவிக்கின்றனர்.