மக்கள் கொந்தளிக்கும் போதெல்லாம் திடீரென அறிக்கைகள் விடுத்து மக்களை வீட்டுக்குள் முடக்கி ஒடுக்கும் அரசுகளைப் பாதுகாக்கும் ஐக்கிய நாடுகள் நிறுவனம் பிரித்தானிய மற்றும் அமரிக்க அரசுகளின் சித்திரவதைகள் குறித்த அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
மனிதகுலத்திற்கு விரோதமான முறையில் சித்திரவதைகளையும் தொடர்ச்சியான மனித உரிமை மீறல்களையும் மேற்கொண்ட பிரித்தானிய மற்றும் அமரிக்க அரசுகளின் இரகசிய நடவடிக்கைகள் குறித்த ஆவணங்களை வெளியிடுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அந்த நாடுகளைக் கோரியுள்ளது. ஐக்கிய நாடுகளின் சிறப்பு ஆணையாளர் பென் எம்மெர்சன் என்பவர் தயாரித்த அறிக்கையிலேயே இந்த இரண்டு நாடுகளை நோக்கியும் இக் கோரிக்கை முன்வைக்கபட்டுள்ளது.
இஸ்லாமிய தீவிரவாதிகள் எனச் சந்தேகத்தின் பேரில் இரகசியமாகக் கைது செய்யப்பட்டு சாட்சியின்றித் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தும் இந்த இரண்டு நாடுகளும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டன என குற்றம் சுமத்தியுள்ளார்.
அமரிக்காவின் சித்திரவதைக் கூடமான குவான்டனமோ விரிகுடாவில் சாட்சியின்றி பிரித்தானிய மற்றும் அமரிக்க அரசுகள் நடத்தும் சித்திரவதைகளுக்கு எதிராகவே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.