மூன்றைரை மில்லியன் மக்கள் ஸ்கொட்லாந்தில் நடைபெற்ற பொதுசன வாக்கெடுப்பில் வாக்களித்துள்ளார்கள். மொத்த சனத்தொகையில் 85 வீதமானவர்கள் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களித்துள்ளார்கள். இன்று வரைக்கும் உலகின் எல்லா மூலைகளிலும் ஆணவத்தோடு அழிவு ஆயுதங்களோடு அலையும் பிரித்தானிய அதிகாரவர்க்கத்தை ஸ்கொட்லாந்து மக்கள் அசைத்துப் பார்த்திருக்கிறார்கள். ஸ்கொட்லாந்து தேர்தல் முடிவுகளும் அது நடைபெற்ற முறைமையும் பிரித்தானியாவிம் அரசியல் காட்சியை புதிய வடிவில் வெளிப்படுத்தியிருக்கிறது.
பிரித்தானிய அதிகாரவர்க்கத்தாலும், பல்தேசிய வியாபார நிறுவனங்களாலும், வங்கிகளாலும் மிரட்டப்பட்ட மக்கள் பிரிவினைக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள். இந்த மிரட்டல்களின் மத்தியிலும் 45 வீதமான மக்கள் தமது வாழ்வின் பெறுமானத்தைப் பாதுகாப்பதற்காக பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள்.
ஸ்கொட்லாந்தின் மிகப்பெரும் நகரமான கிளாஸ்கோ பிரிவினைக்கு ஆதரவாக அதிகப்படியான வாக்குகளை வழங்கியுள்ளது.
தாம் விரும்பியவாறெல்லாம் மக்களின் அடிப்படை உரிமைகளை மாற்றியமைக்கும் பிரித்தானிய அதிகாரவர்க்கம், இப்போது நின்று நிதானமாகச் சிந்திக்கவேண்டிய சூழலை ஸ்கொட்லாந்து மக்கள் ஏற்படுத்தியுள்ளனர்.
முதலாளித்துவப் பொருளாதாரம் மீள முடியாத நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நிலையில் மக்கள் மாற்றங்களை எதிர்பார்க்கிறார்கள். ,மக்களைச் சுரண்டி ஊதிப்பெருத்த நிதி நிறுவனங்களும் வங்கிகளும் போதுமான இலாபம் கிடைக்கவில்லை என்று முனகிக்கொண்டாலே போதும், அவைகளுக்கு பிரித்தானிய அதிகாரவர்க்கம் பில்லியன்களை மக்களின் வரிப்பணத்திலிருந்து வாரி வழங்கும். மகளுக்குக் கிடைக்கும் உதவித்தொகைகளை சிக்கனம் என்ற பெயரில் வெட்டுக்களை ஏற்படுத்தி அவர்களை மேலும் வறியவர்களாக்கும்.
ஊதிய உயரவை பொருளாதார நெருக்கடி என்ற பெயரில் நிறுத்தியுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை என்றுமில்லாதவாறு உயர்வடைந்துள்ளது. இந்த நிலையில் மக்கள் மாற்றங்களை எதிர்பார்க்கிறார்கள்.
ஸ்கொட்லாந்து மக்கள் மாற்றங்களை எதிர்பார்த்த வேளையில்தான் பிரிவினைக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. ஆரம்பத்தில் பிரித்தானிய அதிகாரவர்க்கம் வாக்கெடுப்பில் வெற்றிபெற்றுவிடும் என்ற எதிர்பார்ப்பிலிருந்தது.
கடந்த மாதத்தின் இறுதிப்பகுதியில் நடைபெற்ற கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் பிரிவினைக்காகவே அதிகப்படியான ஆதரவு காணப்பட்டது. அதன் பின்னர் பதற்றமடைந்த பிரித்தானிய அதிகாரவர்க்கம் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியது. பல்தேசிய வியாபார நிறுவனங்கள் ஊடாகவும் வங்கிகள் ஊடாகவும் மக்களை மிரட்டியது. ஸ்கொட்லாந்து வங்கியான ரோயல் பாங் ஒப் ஸ்கொட்லாண்ட் தனது தலைமையகத்தை லண்டனுக்கு மாற்றுவதாக மிரட்டியது. மார்க்ஸ் அன்ட் ஸ்பென்சர் போன்ற நிறுவனங்கள் விலைகள் அதிகரிக்கும் எனப் பிரச்சாரம் மேற்கொண்டது. பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரன் பணப்பெறுமானம் குறைவடையும் என மிரட்டினார்.
இந்த மிரட்டல்களின் மத்தியில் ஸ்கொட்லாந்து மக்களின் அச்சம் அதிகரித்தது. பிரிவினைக்கு எதிரான வாக்குகளில் பெரும்பகுதி மக்களை மிரட்டியே பெறப்பட்டது.
இன்று முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடி உச்சமடைய ஆரம்பித்துள்ளது. மக்களின் வாழ்வாதரங்களை அரசு அழித்துவருகிறது. பல்தேசிய நிறுவனங்களுக்காக பிரித்தானியப் அரசு தனது சட்டங்களை மாற்றியமைக்கிறது.
இந்த நிலை தொடருமானால் ஸ்கொட்லாந்து உட்பட ஐக்கிய ராஜியத்திலுள்ள ஏனைய நாடுகளும் பிரிந்து போகக் கோரலாம். ஸ்கொட்லாந்தில் பிரிவினைக்கான ஆதரவு அதிகரிக்கும்.
ஆக, பிரித்தானிய அதிகாரவர்க்கம் இன்று மிகப்பெரும் நெருக்கடிக்க்கு உள்ளாகியிருக்கிறது. ஸ்கொட்லாந்தில் பிரிவினை கோரியவர்கள் இங்கிலாந்தின் உழைக்கும் வர்க்கத்தின் மீதான சுரண்டலை மட்டுப்படுத்தியுள்ளார்கள்.
ஈ.பி.டி.பி யும். நாடு கடந்த தமிழீழமும் ஏனையோரும் பிரித்தானிய அதிகாரவர்க்கத்தின் அடியாட்கள் போன்றே இப்பிரச்சனையை அணுக முற்படுகின்றனர். வாக்கெடுப்பு நடத்திய பிரித்தானிய அதிகார வர்க்கத்தைப் பாராட்டும் ஈ.பி.டி.பி இதெல்லாம் இலங்கையில் சாத்தியமில்லை என்கிறது. இதே போன்று பிரித்தானிய அதிகாரவர்க்கத்தின் அரவணைப்பின் சூட்ட்ல் வாழும் நாடுகடந்த தமிழீழம் குழு வாக்கெடுப்பு நடத்தியதற்காக பிரித்தானியாவைப் பாராட்டுகிறது.
தமக்கு எதிரான நெருக்கடிகள் தோன்றும் போது, முரண்பாடுகளை மறந்து பிரித்தானியக் கட்சிகள் ஒன்றிணைந்து பிரச்சாரம் மேற்கொண்டன. இவ்வாறே இனக்கொலைக் கட்சி ஈ.பி.டிபி உம் நாடுகடந்த தமிழீழமும் தாம் சார்ந்த அதிகார வர்க்கத்திற்கு ஆதரவாகச் செயற்படுகின்றன.
ஆக, இவர்கள் அனைவரும் அதிகார வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிற்போகுவாதக் கட்சிகளே. இவர்கள் வேறு அரசியல் மொழிகளைப் பேசுவது போன்ற தோற்றப்பட்டை ஏற்படுத்தினாலும் அதிகார வர்க்கம் சார்ந்து ஒரு மொழியை மட்டுமே புரிந்துகொள்வார்கள்.