பிரித்தானியாவின் வேலையற்றோர் தொகை 2.52 மில்லியன்கள் என தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது. மொத்த சனத்தொகையில் 7.8 வீதமானோர் வேலையற்றோர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் மத்தியிலேயே வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மேலும் அறிக்கை தெரிவிக்கிறது. வேலையின்மையினால் இளைஞர்கள் மத்தியில் வறுமையும் விரக்தியும் அதிகரித்துள்ளது. புள்ளிவிபரங்களின் அடிப்படையில் 2011 ஆம் ஆண்டில் மட்டும் 6045 இளைஞர்கள் பிரித்தானியாவில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதேவேளை பிரித்தானிய பல்தேசிய நிறுவனங்களின் இலாபம் பல மடங்காக அதிகரித்துள்ளது. பல்தேசிய நிறுவனங்களுக்கான புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இரட்டை வரிவிதிப்பு முறை இந்த நிறுவனங்கள் வரிகட்டுவதிலிருந்து தப்பித்துக்கொள்ள வழிவகுத்திருக்கிறது.
நிதி மூலதனம் பிரித்தானியா உட்பட அனைத்து ஐரோப்பிய நாடுகளையும் அழித்து பல்தேசியக் கொள்ளையை அதிகரித்துள்ளது. சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்கள் முற்றாக அழிந்து வரும் நிலையில் குறைந்த கூலிக்கு உழைப்பை வழங்க்கூடிய அடிமைச் சமூகம் ஒன்றை உள்நாட்டிலேயே உருவாக்குவதை ஐரோப்பிய அமரிக்க பல்தேசிய நிறுவனங்களும் அதன் அடியாட்கள் போன்று செயற்படும் அரசுகளும் நோக்கமாகக் கொண்டுள்ளன.