பிரித்தானியா முழுவதும் வன்முறை பரவியுள்ளது. 15 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களும் யுவதிகளும் பிரித்தானிய நகரங்கள் முழுவதும் கடைகளை உடைத்துத் திருடுதல், வாகனங்களையும் கட்டடங்களையும் எரித்தல் போன்ற நடவடிக்கைகளில் இன்று ஈடுபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மன்செஸ்டர், செல்போர்ட், வூல்வஹம்ப்டன், பேர்மிங்ஹாம், நோதிங்ஹாம், லெஸ்டர் போன்ற நகரங்களுக்கு வன்முறை பரவியுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்தன. வன்முறை ஆரம்பித்த ரொட்டந் ஹாம் நகரப் பகுதியில் 70 வீதமான இளைஞர் சேவைக்கான பணக் கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டிருந்தமை பலராலும் சுட்டிக்காட்டப்பட்டது. பிரித்தானியாவில் சமூக உதவிகள் தொடர்ச்சியாக நிறுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் வேலையில்லாத் திண்டாட்டமும், வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பும் இவ்வாறான வன் முறைகளை அகிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகின்றது.