ஒடுக்கப் படும் தமிழ் மக்கள் நலன் சார் இணையங்கள் இணையவெளியில் தமது சேவையை ஆற்றி வருகின்றன. தமிழ் மக்களை முட்டாள்களாக நினைத்து செய்தி வெளியிடும் பல இணையவெளி செய்தி ஊடகங்களும் உண்டு. புலிகளும் பல பினாமி ஊடகங்களை தமது முகவரி அற்ற செயல் பாடுகளுக்கு வைத்திருந்தனர் அதே வித்தையை பார்த்து இலங்கை, இந்திய புலனாய்வுப் பிரிவுகளும் பல பினாமி இணையங்களை உருவாக்கி விட்டு உள்ளது. இதில் எவை ஒடுக்கப் படும் தமிழ் மக்கள் நலன் சார் இணையங்கள் என்பதை கண்டு அறிவது சாமானியர்களுக்கு சற்று கடினமாகவே உள்ளது.
இருப்பினும் தற்போது இணையவழி ஊடக வாசிப்போர் பலரிடம் எந்த எந்த இணையங்கள் எவர் நலன் சார்ந்து இயங்கு கின்றன என்பதை தெளிவாகவே உணரும் திறமை இருப்பதை அறிய முடிகிறது. இதில் இணையச் செய்திகளை வாசிக்கும் மிகச் சாமானிய மக்களே இதனை உய்த்து அறிந்து விடுகிறார்கள். இதற்கு காரணம் மக்கள் விரோத இணையங்கள் வெளியிடும் செய்திகளை பகுத்து ஆராயும் திறன் இலங்கையிலும் புலம் பெயர் பிரதேசங்களிலும் தமிழ் மக்கள் மத்தியில் காணப் படுகின்றமையே.
புலிகள் உச்சம் பெற்ற காலங்களில் புலிகளின் ஊக்கத்திலும், தன்னியல் பாகவும் பொது நிலை செய்திகளை, புலிசார் செய்திகளை வெளியிட்ட சில இணைய ஊடகங்கள் புலிகளை நெருங்கி வந்து அவர்களிடம் பணத்தையும் பெற்று அவர்கள் சார் சேதிகளையும் வெளியிட்டனர் இவற்றில் பல புலிகளின் நேரடி கண்காணிப்பிலும் சில பினாமிகளின் கண்காணிப்பிலும் செயல் பட்டன, இருப்பினும் இந்த இணையங்கள் இந்திய, இலங்கை புலனாய்வு வலையமைப்புகளுடன் நேரடி மறைமுக தொடர்புகளை பேணிவந்தன. இன்று, புலிகள் இல்லாத சூழல் அவற்றின் பொற்காலாமா தெரியவில்லை குறிப்பாக சில பல இணையங்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ இலங்கை புலனாய் வாளர்களினதும் இலங்கை கொள்கை வகுப்பாளர்களினதும் வழிநடத்தலில் தமிழ் இனச் சுத்தீகரிப்புக்கு சோரம் போகின்றன அல்லது படுகொலை பங்காளிகள் ஆகின்றனர்.
இதனைச் செய்யும் பலரும் வேறும் யாருமல்ல தமிழ் பேசும் தமிழர்கள் தான். இவர்கள் பலர் தமிழ் மக்கள் மீது கொண்ட கோபமோ அன்றி புலிகள் மீது கொண்ட கோபமோ எனக் கூற முடியாது. இதனை ஒரு தொழிலாக அல்லது தமது அறிவு சார் புலமையை சிங்களவர்களுக்கு வெளிபடுத்தும் முகமாக செய்கிறார்கள். அத்துடன் தாம் சார்ந்த மக்களின் நலன்கள் அவர்கள் மீது நிகழ்த்தப் படும் இனப் படுகொலை இனச் சுத்தீகரிப்பு என்பவற்றை மறை பொருளாக்கும் சிங்கள பெருந்தேசிய குறுஞ் சிந்தனையாளர்களின் கொள்கைவகுப்பாளர்களுக்கு மலிவான பண்டித் தீவனமாக பயன்படுகிறார்கள்.
இது இணைய வழியில் மாத்திரம் அல்ல அரசியலிலும் நடக்கின்றது. லச்மன் கதிர்காமர், நீலன் திருச்செல்வம் என்போரை கடந்து சுமந்திரன் என பட்டியல் நீளும், பொறுத்து இருந்து பார்ப்போம்!.
ஜெனிவாவிற்கு கூட்டமைப்பு செல்லாததற்குரிய காரணமாக, சம்மந்தர் கூறிய!, இனப் பதட்டம் ஒன்று ஏற்பட்டு தமிழ் மக்கள் அழிவு ஒன்றை மேலும் சந்திக்கும் சூழல் உருவாகும் எனும் சம்மந்தரின் விளக்கம் ஓரளவு ஏற்புடையதாக ஏற்றுக்கொண்டாலும், சுமந்திரனின் பிந்திய அறிக்கையை என்ன சொல்வது?
தமிழ் மக்களின் அழிவிலும், அறியாமையிலும் அரசியல் நடத்த எச்சில் வடிக்கும் இவர்களை நம்பியே தமிழர்களின் அழிவரசியல் தொடரவும் ஆரம்பிக்கவும் போகின்றதா? இந்நிலைமையை மாற்ற EPRLF , TELO , PLOTE என்பன கூட்டிணைந்து செயல் படும் நிலை உருவாகலாம்?! ஆனால், சுமந்திரனும் சுமந்திரனை சுற்றி இயங்கும் சில சக்திகள் இலங்கை அரசின் உதவியுடன் அதனை முறியடிக்கக் கூடும். உண்மையில் இதுவல்ல எனது பேசுபொருள் காலத்தின் தேவை கருதி இதனையும் தொட்டுச் செல்ல வேண்டியவனாகிறேன்.
இப்போது எனது விடயத்திற்கு வருவோம் சில தமிழ் வழி தமிழ் தேசியம் பேசும் இணையங்களின் செய்திகளில் அடிக்கடி வந்து போகும் பிரபாகரன் இருக்கின்றாரா இல்லையா என்ற செய்திகளில் அவர் இருக்கின்றார் என சில இணையங்களும் அவர் இல்லை என்று கூறும் சில இணையங்களும் இருப்பதை நாம் காணுகிறோம். உண்மையில் இவ் இணையங்களை கூர்ந்து அவதானிக்கும் எவரும் அவர்களின் மேற்படி செய்திகளில் விஷமமும், விசமும் இருப்பதை அவதானிக்க முடியும்.
பிரபாகரன் இல்லை எனக் கூறும் தமிழ் தேசியம் பேசும் இணையங்கள் பிரபாகரனுக்கு அஞ்சலி செய்ய மறுக்கின்றன அத்துடன் பிரபாகரனின் மரணத்தை மறைமுகமாக ஏளனப் படுத்தி தமிழ் மக்கள் மத்தியில் ஓர் சோர்வு நிலைமையை ஏற்படுத்துவதையும் அவரின் இழப்பின் பின்னர் தமிழ் தேசிய போராட்டம் அல்லது விடுதலை என்பது மீளவும் முன்னெடுக்கப் பட முடியாதது என்பதை தமிழ் மக்கள் மத்தியில் மறைமுகமாக திணிப்பது போன்றும் இருக்கும். அதாவது புலிகள், பிரபாகரன் என்போருக்கு பின்னர் அவர்கள் தவிர்ந்த மாற்று சக்திகள் அல்லது மாற்று சிந்தனையாளர்கள் ஒடுக்கப் படும் மக்கள் சார்பாக மேல் எழும் சூழல் இல்லை என்னும் உளவியல் கருத்து தமிழ் மக்கள் மீது எடுத்துச் செல்லப்படுகிறது. புலிகளை பொறுத்தவரையில் தமிழ் மக்களுக்கு தமிழரிடையே வேறு மாற்று சக்திகள் இல்லை என்ற, புலிகளின் மந்திரத்தையே இன்று சிங்கள கடுங்கோட்பாட்டு கொள்கை வகுப்பாளர்கள் தமிழர்களுக்கு எதிராக தமிழ் இணையவழி ஊடகங்கள் மூலம் பரப்புகிறார்கள். மொத்தத்தில் சிங்கள மேலாதிக்க இனச் சுத்திகரிப்புக்கு எதிராக எந்த கனமான ஒடுக்கப் படும் அமைப்புகளும் மேல் எழாமல் சிங்கள மேலாதிக்கம் பார்த்துக் கொள்ளுகின்றது.
மற்றையது அவர் இருக்கிறார் என்று சொல்லப் படும் இன்னொரு ஆபத்தான தமிழ் மக்களின் இன்றைய தேசிய, சர்வதேச சூழலை நாசப் படுத்தும் கருத்தியலும் பரப்பப் படுகிறது அதனை இப்போது பார்ப்போம்.
சில தமிழ் இணையங்கள் கூறுவது என்னவெனில் தலைவர் கொல்லப்பட்டு விட்டார் எனக் கூறுவது, இன்று தமிழ் மக்கள் மத்தியில் உள்ள உணர்வு பூர்வமான எழுச்சியை மழுங்கடிக்கச் செய்யும் என்பதாகும். ஆக, இங்கு சொல்லப் படும் செய்தி ஆனது பிரபாகரன் இறந்துவிட்டார் ஆனால் அதனை மக்களுக்கு சொல்லக் கூடாது என்பது ஒன்று, இரண்டாவது பிரபாகரன் இறக்கவில்லை அவர் காலம் வரும் போது வருவார் என்பது.
இவ்வாறான நிலைமையை பேணுவதன் மூலம் மக்களின் போராட்ட உணர்வலைகளை பாதிக்காமல் பேணமுடியும் என்பது, ஒருவாதப் பொருளாக(?) மறை பொருள் விடயங்களுடன் உலா வருகின்றது. ஆனால் அவ் இணையங்களின் எண்ணக் கரு அல்லது மூலோபாயம் சொல்வது என்னவெனில் தமிழ் மக்களை மனநலம் குன்றியவர்களாக அல்லது தொடர்ச்சியாக மனநலம் குன்றியவர்களாக வைத்திருக்கவுமே விரும்புகின்றது என்பதாகும்.
முள்ளி வாய்க்காலில் என்ன நடந்தது? என்பதை இந்த மூன்று வருட காலத்தில் மக்கள் பல்வேறு தகவல் மூலமாக அறிந்தே வைத்திருக்கிறார்கள். ஏதோ சனல் 4 மூலமாக தான் தமிழ் மக்கள் அறியவேண்டும் என்றில்லை. சனல் 4 ஆனது தனது பணியை சர்வதேசத்திற்கே (தேவைப் படுவோரின் நிகழ்ச்சி நிரலிற்கு) கொண்டு செல்கிறது.
இதற்கிடையில் சனல் 4 பற்றியும் எனது கண்ணோட்டத்தை இங்கு சொல்லிவிடுகிறேன் சனல் 4 என்பது தமிழர்களுக்கு தொண்டு செய்ய வந்த தன்னார்வ தொண்டுச் செய்திச் சேவை நிறுவனம் அல்ல அது மேற்குலகின் இலங்கை குறித்த நகர்வுக்கு வன்னியின் அவலங்களை அவர்களின் நிகழ்ச்சி நிரலின் அடிப் படையில் வெளிப்படுத்துகிறது. இதற்குரிய பணம் அமெரிக்க, மேற்குலக சக்திகளால் ஒப்பந்த அடிப்படையில் சனல் 4 க்கு பகிரப் பட்டிருக்கும். சனல் 4 ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல தமிழர்களுக்கு படி அழக்க, அவர்கள் இலங்கையில் நடைபெற்ற முறையற்ற இன அழிப்பை காட்டி இலங்கையை அடிபணியவைக்கும் நிகழ்ச்சி நிரலை கனகச்சிதமாக செய்ய பணத்திற்கு உழைக்கும் மிகச் சிறந்த செய்தி நிறுவனம்.
இதற்கிடையில் மக்களிடம் வாரிச் சுருட்டிய பணம் எல்லாம் சனல் 4 நிகழ்ச்சிக்கு வாரி வழங்கினோம் என பணம் திரட்டியோர் கூற சனல் 4 வழி வகுத்துள்ளது. அத்துடன் வன்னியில் தமிழ் மக்களின் மரணங்கள், கூட்டுப் படுகொலைகள் என்பவை சர்வதேச அளவில் வெளிவருவது நொறுக்கப் பட்ட தமிழ் மக்களின் ஆன்மாக்களை ஓரளவு திருப்திப் படுத்தும் என்பதும் உண்மையாகும்.
இந்த இலங்கை தொடர்பான சனல் 4 நிகழ்ச்சிக்கு புலிகள் நிதிஉதவி செய்வதாக இலங்கை சர்வேதேச அளவில் பிரச்சாரம் செய்கிறது காரணம் அச்செய்தியின் நம்பகத் தன்மையை சர்வதேச அளவில் கேள்விக்குள்ளாக்க.
அதே நேரம் சில தமிழ் இணையங்கள் பிரபாகரன் மரணிக்கவில்லை அவர் மரணித்தார் என்பதே பொய் அப்படி இருக்கும் போது அவர் மரணித்தார் என சனல் 4 செய்திகளை வெளியிடுவது தமிழ் மக்களின் போராட்ட உணர்வுகளை மழுங்கடிக்கும் செயல் எனக் கூறுவதன் மூலம் சர்வதேச அளவில் தமிழ் மக்களை சனல் 4 க்கு எதிரான எதிர்ப்பு உணர்வுகளை தமிழ் மக்களிடம் ஏற்படுத்தலும் சனல் 4 இன் நம்பகத்தன்மையை கேள்விகுள்ளாக்குதலும் ஆகும். உண்மையில் இன்றைய சூழலில் இவ்வாறான செய்திகளில் நன்மை அடைவோர் இலங்கை அரசினர் மட்டுமே வேறு யாருமல்லர் எனவே இச்செய்திகளின் ஊற்று மூலங்கள் கூட அவர்களே என்பதை ஊகித்து அறிவதில் எந்த கஷ்டமும் இல்லை.
ஏனெனில் சில இணைய வழி செய்தி ஊடகங்களின் மறைமுக உத்தியின் படி இலங்கை சார்பான சில தமிழ் ஆர்வலர்களே பிரபாகரன் இறந்தார் என்ற செய்தியை வெளியிடும் படி சனல் 4 ஐ தூண்டுவது போன்றும், அவர்களே சனல் 4 நிகழ்ச்சிக்கு நிதி உதவி வழங்குகின்றனர் என்றும் கூற முற்படுகின்றனர். இதன் மூலம் சனல் 4 நிகழ்ச்சிக்கு எதிராக தமிழ் மக்களை கிளர்ந்து எழவைக்கும் உத்தி தென்படுகிறது.
இதன் மூலம் முள்ளி வாய்க்காலில் நடத்தப் பட்ட படுகொலைகள் பலவற்றை மறைக்கும் அல்லது மழுங்கடிக்கும் உத்தியும் தொக்கி நிற்பதை தெளிவாக உணர முடியும். சர்வதேச குற்றச் சாட்டுகள் அல்லது விசாரணைகள் என்று வரும் போது இலங்கை அரசுப் படைகளால் கொல்லப்பட்ட போராளிகள், ஏன் பொது மக்களை கூட தப்பிச் சென்று விட்டார்கள், நாட்டைவிட்டு ஓடி விட்டார்கள், மறைந்து வாழ்கிறார்கள் என்று பொய் உரைக்க வசதியாக இருக்கும். இது தமிழ் மக்களை கொண்டே சர்வதேச அளவில் பிரபாகரன் உட்பட இலங்கை அரசுப் படைகளால் நெறிப் படுத்தபட்ட படுகொலையில் கூட்டுப் படுகொலை செய்யப் பட்ட பலர் தப்பி மறைந்து வாழ்கிறார்கள் எனச் சொல்ல வைக்கும் ஒரு உத்தியாகவே நான் பார்கிறேன்.
எஸ்.ஜி .ராகவன்(கனடா)
நல்லதொரு கட்டுரை.. ஆய்வு…..நன்றி ராகவன்….
வணக்கம் ரகவன் !
ரெம்பத் தெளிவாகக் குழப்பி எழுதியுள்ளீர்கள். அடிப்படையில் நீங்கள் ஒரு புலி எதிர்ப்புவாதி. நீங்கள் ஒரு நடு நிலையாளர் என்றால் உங்கள் கருத்துக்களை ஏற்றுகொள்ள முடியும். ஆனால் நீங்கள் இங்கே குறிப்பிடும் மேட்டுக்குடிக் கருத்துக்கள் செல்லுபடியாவில்லை ஐயா ! தலைவர் இருக்கிறார் இல்லை இறந்துவிட்டார் என்பதனை ஒரு விவாதப் பொருளாக்கி அதில் சூடு காய நினைக்கவேண்டாம். இணையவெளியில் செய்திவாசிப்பவர்கள் எல்லோரும் பாமரர் அல்லவே ! அவர்களுக்கும் நடப்பது புரியும். நீங்கள் சொல்லவருவது என்ன என்று உங்களுக்கே தெரியாத ஒரு குழப்ப நிலை இக் கட்டுரைடில் காணப்படுவதை நான் உணர்கிறேன்.
போர்குற்ற ஆதாரங்களை வெளியிடும் சனல் 4, தேசிய தலைவர் இருப்பு அல்லது இறப்புக் குறித்து ஏன் பேசவேண்டும், இது என்ன பேசப்பொருள் நிகழ்வா என்ன ? தம்மை ஒரு நடு நிலைவாதியாகக் காட்டிக்கொள்ள ஒரு ஆயுதமாக தலைவர் பற்றிய சில செய்திகளை சனல் 4 வெளியிடுகிறது அவ்வளவுதான். இன்றும் லட்சக்கணக்கான தமிழர் மத்தியில் வாழ்பவர் தேசிய தலைவர். அவர் டக்ளசைப் போல அடிபணிவு அரசியல் நடத்தவில்லை. இல்லை தமிழ் தேசிய கூட்டமைப்பு போல பயந்து ஒதுங்கவில்லை. அவர் உயிரோடு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் நேசித்த மற்றும் சுவாசித்த தமிழீழக் கொள்கை மறையாது. மாவீரணுக்கு மரணம் கிடையாது ! அவன் அதனையும் தாண்டி வாழ்வான் !
ஒரு செய்தி அல்லது விடயம் குறித்து பல்வேறுபட்ட திரிபுகதைகளை பல்வேறு முனைகளில் வெகுஜனப் பரப்பில் கொண்டு செல்லும் உத்தியை இலங்கை அரசு சார்பானவர்கள் கொண்டு செல்கின்றனர். ஆனால் எம்மில் சிலர் ஒரே நேர்கோட்டில் சிந்திக்கப் பழகியவர்களாக அல்லது பழக்கப் பட்டவர்களாக இருப்பதனால், அவர்களால் தெளிவாக சிந்திக்க முடியாமல் உள்ளது.
பல்வேறு இணையவழி ஊடகங்களில் வந்த கீழ்வரும் செய்தியை வாசித்த பின்னே எனது கட்டுரையை எழுத வேண்டி வந்தது.
“தேசிய தலைவரின் இருப்பு அல்லது இறப்புக் குறித்து தமிழ் மக்கள் எக் கருத்தையும் தற்போது வெளிப்படுத்த விரும்பவில்லை என்பதாகும். இந் நிலையில் சனல் 4 தொலைக்காட்ச்சி இதனை தனது ஆவணப்படத்தில் புகுத்த காரணம் என்ன ? போர்குற்றச்சாட்டுகள் அடங்கிய ஆவணப்படத்தில் தேசிய தலைவர் இருப்புக் குறித்து ஆராயவேண்டிய கடைப்பாடு எதற்கு என்ற கேள்விகளும் பரவலாக எழுந்துள்ளது.”
என்ற மேற்படி விமர்சனத்தின் பின்னரே ஒவ்வொரு விடயங்களையும் மேலும் கீழும் தூக்கிப் போட்டு ஆராய வேண்டியிருந்தது.
புலி விரோதியா? புலி ஆதரவாளனா? என்பதை பார்ப்பதை விடுத்து விடயங்கள் மக்கள் நலன் சார்ந்ததா? இல்லையா? என்பதையும் அவ்விடயங்கள் குறித்த சமச்சீரான பார்வையும் விமர்சனங்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் ஆகும்.
கண்ணன் அவர்கள் எவ்விதத்திலும் குழம்பத் தேவையில்லை. எனது செய்தியின் சாராம்சமானது; சனல் 4 ஊடகம் மேற்குலகின் நிகழ்ச்சி நிரலின் அடிபடையில் செயல்படுகிறது, அது வேறு விடயம், அதனால் நாம் அதனை நிராகரிக்க வேண்டும் என்பதில்லை. சனல் 4 ஐ சந்தேகிக்கவோ முரண்படவோ வேண்டியதில்லை மேற்குலகின் இந்த நகர்வுகளை பயன்படுத்தி இன அழிப்பை அம்மபலப்படுத்த வேண்டும்.
வன்னியில் நடத்தப்பட்ட பாரிய இனப் படுகொலை சர்வதேச அரங்கிற்கு வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் பாதிக்கப் பட்ட தமிழர் தரப்பு உறுதியாக இருக்க வேண்டும் என்பதாகும். கொல்லப்பட்ட பொது மக்கள் போராளிகள் அனைவரினது மரணங்களும் மூடி மறைக்கப்படக் கூடாது. பிரபாகரன் இறந்தாரா இல்லையா எனப் பேசுவது மக்களின் தன்னியல்பான எழுச்சியை மழுங்கக் கடிக்கும் செயல் எனக் கூறுவதும் அவ்வாறு பேசுவோரை புலி விரோதிகள் எனவும் துரோகிகள் எனவும் , அவர்கள் மீது சந்தேகங்களை ஏற்படுத்த முனைவதும் தப்பிலிதனமானது, விவேகமற்றது.
நல்லதொரு கட்டுரை.. னன்றி,
ஆக! என்னதான் சொல்ல வருகிறீர்கள்?
அவா் சொல்லவருவது; எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பதாகும்.
மிகச் சரியானது நன்றி குமார்
ராகவனின் இவ்வாய்வு கடவுள் இருக்கின்றாரா? இல்லையா? என்பதைப் போன்ற ஒரு ஆய்வாகும்.கடவுள் இருந்தாலும் ஒருவரும் நம்பப்போவதில்லை. ஆனால் க்டவுள் ஒன்று எல்லாருக்கும் சும்மா தேவைப்படுகிறது. அப்படியொரு சும்மா தான் பிரபா? பிரபா இருந்தால் தானென்ன? இல்லாமால் போனால் தான் என்ன? அப்படியும் சொல்லமுடியாது வெளினாட்டுஅகதிகளை அங்கீகரிக்க வைத்த கடவுள் அவர்தானே??
வெளிநாட்டுக்கு நான் அகதியாக வரவில்லை. அகதியாக வந்தவர்களை தரம் தாழ்ந்தவர்களாகவும் நான் பார்க்கவில்லை. பிரபாகரனை கடவுளாக
பார்த்து எம்மை நாமே தரம் தாழ்த்துதலும் விருப்பத்துக்குரியதல்ல. பிரபாகரன் இங்கு பேசுபொருள் அல்ல ஏன் புலிகளை பற்றியும் நான் இங்கு பேசவில்லை, கட்டுரையின் ஆதங்கம் அவலங்கள் பற்றியது, அந்த அவலம் தொடராமல் இருக்க உண்மைகள் வெளிக்கொண்டு
வரப்பட்டு, அதன் மூலம் மக்கள் இனச் சுத்தீகரிப்பில் இருந்து பாதுகாக்கப் படவேண்டும் என்பதுதான். ஆரோக்கியமாக நல்ல விடயங்களை
பிடுங்கி விடுங்கள் இந்த இணைய வெளியில்…
இந்தக் கருத்துடையவர்கள்தான்(வெளிநாட்டுக்கு நான் அகதியாக வரவில்லை……..),வெளிநாடுகளில் புலிகளிலும்,எதிர்ப்பணிகளிலும் கலக்குகிறார்கள்.
வாழ்க வளமுடன்..!!!!!
மிகவும் நல்ல கட்டுரை பணி தொடரட்டும்
கண்ணணின் கருத்தில்///இங்கே குறிப்பிடும் மேட்டுக்குடிக் கருத்துக்கள் செல்லுபடியாவில்லை ஐயா//’ அ து என்ன மேட்டுக்குடிக் கருத்துகள் ?
அகத்தியா
30 வருட போரின் முடிவை எல்லோரும் அனுபவித்துவிட்டர்கள்.நிர்வான கோல படங்கள் இ சிறையில் போராளிகள் …………. இனி தலைவர் வந்தும் ஒண்டும் இல்லை .இவற்றை பார்த்து என்ன முகத்துடன் வரபோறார்.அதில வேற தலைவரின் இருப்பை அறிய முயற்சியாம் …… ..அமெரிக்காவுக்கு தெரியாத ஒன்றல்ல ……….
வணக்கம் ராகவன் பிரபாகரன் உயிருடன் வாழ்கிறார்.என்று தலைப்பைக் கொடுத்து விட்டு புலி, பினாமி என்றெல்லாம்நீட்டி முழங்கிவிட்டு நான் பிரபா பற்றியெல்லாம் ஆராயமாட்டேன், புலி பற்றியெல்லாம் கதைக்கவில்லை அவலத்தை மட்டுமே ஆராய்வேன் என்றால் எங்கிருந்து ஆய்வது????பின் ஏன் அந்தத் தலைப்பு??சரி நீங்கள் சனல்4 பற்றியதான விவாதத்தை முன் வைப்பவராக இருந்தால் சனல் 4 எதைக்காட்டபோகின்றதென அறியாமலேயே பல பக்க சாக்குபோக்குகளை எழுந்தமானமாக சொல்லிப்போகின்றீர்கள். இதில் எங்கே நீங்கள் தமிழ்மானிட அவலம் குறித்து ஆய்வு செய்துள்ளீர்கள். /வெளிநாட்டுக்கு நான் அகதியாக வரவில்லை. அகதியாக வந்தவர்களை தரம் தாழ்ந்தவர்களாகவும் நான் பார்க்கவில்லை/ என்கின்ற தங்களின் வாக்குமூலம் மிக வேடிக்கையானது. பிறநாட்டில் வாழ்பவன்,கதியற்றவன்,அடைகலம் புகுந்தவன் என்ற மூன்று பொருள்கள் அகதிக்கு உண்டு. இதில் எந்த அகதி நீங்கள் இல்லை. பிற தேசத்தில் வாழ்பவனை பரதேசி என்று வடமொழி சொல்கின்றது. எமதுமக்கள் அச்சொல்லை வேண்டாதவனுக்கு சொல்லுகின்ற சொல்லாக்கிவிட்டார்கள்.
சர்வதேச போர்க்குற்ற விசாரணையின் தவிர்க்க முடியாத அவசியத்தை வலியுறுத்தும் சனல்4 ஆதாரங்கள்!
ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் இலங்கைத் தீவு தொடர்பான அக்கறை கூர்மையடைந்துள்ள காலகட்டத்தில், அமெரிக்காவின் தலைமையில் இலங்கை தொடர்பான பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டுள்ளமை அனைவரும் அறிந்ததே.
இப்பிரேரணை கொண்டுவரப்படுவது தொடர்பான செய்திகள் வெளிவந்தபோது, தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் வாழும் தமிழ்மக்கள்;, பிரேரணை தொடர்பாக மிகுந்த நம்பிக்கையும், அக்கறையும் கொண்டவர்களாக காணப்பட்டனர்.
எனினும், அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இப்பிரேரணை, இலங்கை அரசினால் ஏற்கனவே உருவாக்கப்பட்ட கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் பரிந்துரை செய்யப்பட்ட விடயங்களை அமுல்படுத்தக் கோருவதாகவே அமைந்துள்ளது.
அதுமட்டுமல்லாது, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில், போர்க்குற்றங்கள் தொடர்பாக பொறுப்புக் கூறும் விடயங்கள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டிருக்கும் நிலையில், பொறுப்புக் கூறல் தொடர்பாக ஓரு உள்ளகப் பொறிமுறையை உருவாக்கி ஐ.நாவின் ஆலோசனைகளைப் பெறும் வகையில் இலங்கை அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இன்னொரு வகையில் கூறுவதாயின், இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரில், போர்க் குற்றம் மேற்கொண்ட குற்றவாளிகளாக ஐ.நாவின் நிபுணர் குழு அறிக்கையில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் இலங்கை அரசு, தான் செய்த குற்றங்கள் தொடர்பாக தானாகவே ஓர் விசாரணை நடாத்தி, தானே அதில் நீதிபதியாகவும் இருந்து தீர்ப்புக்கூறும் வேடிக்கையான நிலைக்கு அங்கீகாரமளிப்பதாக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட மேற்படி பிரேரணை அமைந்துள்ளமை துரதிஸ்டவசமானது.
பாரதூரமான போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களிடமே, நீதி விசாரணையை மேற்கொள்ளச் கோரும் இச் செயலானது, நீதியை குழிதோண்டிப் புதைக்கும் செயலுக்கு ஒப்பானது.
இச்செயற்பாடுகள், தமிழ்மக்களுக்கு ஆழமான ஏமாற்றத்தையும், மிகுந்த கவலையும் ஏற்படுத்தியுள்ள சூழலில், பிரித்தானியாவிலிருந்து ஒளிபரப்பாகும் சனல் 4 தொலைக்காட்சி ஊடாக 14-03-2012 அன்று ஒளிபரப்புச் செய்யப்பட்ட இலங்கையின் போர்க்குற்றம் 2: தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் என்னும் தலைப்பில் தமிழ்மக்கள் மீதான படுகொலை சம்பவங்கள் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
ஊடக நெறிமுறையை பின்பற்றி தயாரிக்கப்பட்ட இந்த ஆவணப்படம் இலங்கை அரசு மேற்கொண்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்களில் நான்கை வெளிக்கொண்டுள்ளது.
• இலங்கையில் தமிழர்களுடைய பிரதேசத்தில், “பாதுகாப்பு வலயம்” என இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த பொதுமக்களையும், மருத்துவமனைகளையும் திட்டமிட்டு இலக்கு வைத்து ஆட்டிலறி மற்றும் ஏனைய கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குதலை மேற்கொண்டு படுகொலைசெய்தது.
• பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, சட்டத்துக்கு முரணான வகையில் உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் கிடைக்காமல் அரசு தடைசெய்தது.
• காயமடைந்தவர்களை மீட்கும் பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த பகுதிகளை இலக்கு வைத்து, தாக்குதல் நடாத்தி மக்களை படுகொலைசெய்தது.
• சரணடைந்த கைதிகளை சர்வதேச சட்டங்களுக்கு மாறாக காட்டுமிராண்டித் தனமாக சுட்டுக்கொன்றமை.
போன்ற குற்றங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.
இதற்கு முன்னர் சனல் 4 தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட இலங்கையின் கொலைக்களங்கள் – 01 ஆவணப்படத்தில காண்பிக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரிக்காது அவற்றை நிராகரிக்கும் வகையிலேயே இலங்கை அரசின் செயற்பாடுகள் அமைந்திருந்து. அந்த வகையில், பொறுப்புக் கூறும் விடயத்தில் இலங்கை அரசாங்கம் மீது எத்தகைய நம்பிக்கையும் வைத்திருக்க முடியாதென்பதை சனல் 4 வெளிப்படுத்தியுள்ளது.
மேலும், சனல் 4 ன் இலங்கை கொலைக்களங்கள் ஆவணப்படம் பாகம் ஒன்றில் காண்பிக்கப்பட்ட விடயங்கள் உண்மையானவை என்று ஐ.நா நிபுணர் குழு ஏற்றுக்கொண்டிருந்தது. அவ்வாறான நிலையிலும் கூட, அதனை இலங்கை அரசாங்கம் உடனடியாகவே நிராகரித்தது. இச்செயற்பாடு, இலங்கை அரசு தனக்கு பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கோ, குற்றவாளிகளை தண்டிப்பதற்கோ ஒரு போதும் தயாராக இல்லை என்பதனை இக்காணொளி வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது.
இவ்வாறான பின்னணியிலேயே, சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தக் கோருவதனை மையப்படுத்திய பிரேரணை அமெரிக்காவினால் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில், சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இலங்கை கொலைக்களங்கள் 2- தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் என்னும் ஆவணப்படமானது, முள்ளிவாய்க்காலிலும் அதற்குப் பின்னரும் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை நடவடிக்கைகளை ஆதரபூர்வமாக வெளிக்கொண்டுவருவதாக அமைந்துள்ளது.
தமிழ்மக்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்ட படுகொலைகள் பற்றிய மேலதிக ஆதாரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள சூழலில், ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணையை, ஓர் முழுமையான சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணையாக வலியுறுத்தும் வகையிலான பிரேரணையாக மாற்றியமைத்து, அதனை நிறைவேற்றுவதற்கு தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட சகல தரப்புக்களையும் வேண்டிக்கொள்வதாகவே அமைந்துள்ளது.
சனல்- 4 தொலைக்காட்சியின் நிர்வாக பணிப்பாளரின் மனைவி இலங்கை தமிழ்ப் பெண்?
சனல் 4 வீடியோ தொலைக்காட்சி நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளரின் மனைவி, இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழ்ப் பெண் என அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சிராணி சுப்பிரமணியம் என்ற பெயருடைய இந்தப் பெண்மணி, சனல் 4 தொலைக்காட்சியின் நிர்வாகப் பணிப்பாளரை மணந்து லண்டனில் வசித்து வருவதாகவும், இவர் சனல் 4 தொலைக்காட்சியில் முன்னர் வர்த்தகப் பணிப்பாளராக பணிபுரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் புலம்பெயர் தமிழர்களுடனும், விடுதலைப் புலிகள் அமைப்புகளுடனும் சேர்ந்து செயற்பட்டு வருவதற்கும், இலங்கைக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்களை வெளிடுவதற்கும் இந்தப் பின்னணியே காரணமாக இருப்பதாக அரசாங்க ஊடகம் வெளியிட்டுள்ள அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
good said kannan!!! i agree with u.
வணக்கம் அண்ணா
அண்ணன் மட்டும் தான் தமிழீழ பபோராட்டத்தை நடத்த வேுண்டுமா நாமும் செயல்படலாமே அண்ணன் இறந்து விட்டார் என்று சில ஊடகங்கள் சொன்னாலும் சில ஊடகங்கள் இறக்கவில்லை என்று சொகன்னாலும் அவற்றை படித்து கொண்டு நாம் என்ன செய்கின்றோம் நாமும் போராட்டத்தில் ஈடுபடலாமே நம்மால் முடியாதா நாம் என்றைக்கு பேசுவதை நிறுத்தி விட்டு அண்ணன் பிரபாகரன் போல் செயல்படபோகிறோம் நம் விடுதலையை நாம் போராடாமல் வேறு யார் போராடுவது சொல்லுங்கள் நணபர்களை