சுன்னாகம் மின்உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவுப் எண்ணெய் தாக்கத்தால் யாழ்க்குடாநாட்டின் ஒரு பகுதி தனது சுகாதாரமான நீர்வளத்தை இழந்துவிட்டது என்ற குற்றச்சாட்டு நீண்டநாட்களாக உள்ளது. தற்போதுதான் இந்தப்பிரச்சனையை எல்லோரது வாய்களும் உச்சரிக்கின்றன. எனினும், கடந்த ஐந்து வருடங்களின் முன்னரே இந்தப்பிரச்சனை ஆரம்பித்துவிட்டது. ஐந்து வருடங்களாக மக்கள் தமக்குள் குமுறிக் கொண்டிருந்ததை செவியுள்ளவர்களெல்லோரும் இப்பொழுதுதான் கேட்கிறார்கள்.
இப்பொழுது தமிழ் தெரிந்த எல்லோரும் அது பற்றி அறிந்து வைத்திருக்கிறார்கள். பேஸ்புக் வைத்திருந்தவர்கள் ஒன்றில் அதுபற்றிய செய்திகளை பகிர்ந்திருந்தார்கள் அல்லது “புரபைல் பிக்சராக” நீர்வளத்தை பாதுகாப்பது பற்றிய கோசத்துடன் படமொன்றை வைத்திருந்தார்கள்.
நீர்மாசால் பாதிக்கப்பட்ட மக்களும், தன்னெழுச்சியாக உருவான இளைஞர் அணியொன்றும் தூயநீருக்கான உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடத்தியிருந்தார்கள். இரண்டுநாள் உண்ணாவிரதப் போராட்டத்தின் பின்னர் கடந்த புதன்கிழமை மாலை அவர்களது போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. வடக்கு ஆளுனர் மற்றும் அரசாங்க அதிபர் இணைந்து கொடுத்த வாய்மூல உறுதிமொழியையடுத்து அவர்கள் இந்தப் போராட்டத்தை இடைநிறுத்தியுள்ளார்கள்.
ஆளுனர் கொடுத்த ஏழுநாள் அவகாசத்தின் பின்னர் அவர்கள் மீண்டும் போராடுவார்கள் என்றுதான் நினைக்கிறேன். எனெனில், இந்தப் போராட்டம் தன்னெழுச்சியான ஒன்று. அரசியல் பின்புலத்திலிருந்து அல்லது அந்த நோக்கத்துடன் நடத்தப்படுபவைதான் ஒப்புக்கு நடத்தப்பட்டு கைவிடப்படும்.
நானறிந்தவரையில், அண்மைக்காலத்தில் வடக்கில் நடந்த தன்னெழுச்சியான முதலாவது போராட்டம் இதுவென்று அறுதியிட்டு கூற முடியும். வடக்கில் சமீபகாலமாக நடத்தப்படும் போராட்டங்கள் அனைத்துமே திட்டமிட்டு, யாரே சிலரது ஒழுங்கமைப்பில் நடத்தப்படுபவைதான். ஒன்றில் காணாமல் போனவர்களது தாய்மாரை கொண்டுவந்து அழ வைக்கிறார்கள். அல்லது முன்னாள் போராளிகளை அழைத்துவந்து கொச்சைத்தமிழில் எழுதப்பட்ட சுலோகஅட்டைகளை கொடுத்தனுப்புகிறார்கள். இப்படியான போராட்ட பின்னணியுடைய வடக்கில், மிக தன்னெழுச்சியாக நடந்த முதலாவது போராட்டமாக இதனை கொள்ளலாம்.
இந்தப் போராட்டம் பற்றியும், அதன் முடிவு பற்றியும் பல்வேறு தரப்பினரும் வைக்கும் நோக்கங்களுடனான விமர்சனங்களை கடந்து, அதனை ஆதரிக்க வேண்டிய கடப்பாடு உள்ள ஒரே காரணம் இதன் தன்னெழுச்சிதான். மகிந்த ராஜபக்சவின் சர்வாதிகார ஆட்சிக்காலத்தில் எந்த போராட்டத்திற்கும் வாய்ப்பில்லாமலிருந்த நிலையில், ஆட்சிமாற்றத்தின் பின்னர் தமது அடிப்படையான உரிமையொன்றை தமிழ் இளையோர் நிலைநாட்ட முனைகிறார்கள் என்பதே முக்கியமானது. வளர்த்தெடுக்கப்பட வேண்டியது. தமது உரிமைகளிற்காக மக்கள் கூட்டம் குரல் கொடுப்பதும், ஜனநாயகவழியிலான போராட்டங்களில் ஈடுபடுவதும் அத்தியாவசியமான அரசியல்உரிமை. ஒருமக்கள் கூட்டத்தின் பிரக்ஞை விழிப்புடனுள்ளதென்பதன் ஒரே அடையாளம் அதுதான். இதனை நமது இளையவர்கள் நிலைநாட்டியுள்ளனர்.
நல்லூர் முன்றலில் கூடிய இளையவர்களின் போராட்டம் தன்னெழுச்சியானதென நான் வரிக்குவரி வலியுறுத்துவதன் ஒரே நோக்கம்- தமிழர்களின் விடிவிற்காக தினம்தினம் செத்துச்செத்து போராடிவரும் பேஸ்புக் போராளிகளும், பேஸ்புக் பத்திரிகையாளர்களும் இந்தப் போராட்டம் பற்றி செய்துவரும் புறணிதான்.
தமிழ்ப்பத்திரிகைச்சூழல் பற்றி இங்கு விசேடமாக சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தற்போதைய நிலையில் தமிழ்பத்திரிகைச் சூழலில் ஒருவருடைய அடிப்படை தகமையாக அவர் தேசியவாதியா, எதிர்த்தேசியவாதியா என்பதையே பார்க்கிறார்கள். இந்த ஒரே தகைமைக்கப்பால் அவர்கள் வேறொன்றை எதிர்பார்ப்பதுமில்லை, எதனை கற்றுக் கொள்ள விரும்பவதுமில்லை. கொழும்பு ஆட்சியாளர்களை தோற்கடித்து தமிழர்களின் சுதந்திரதேசத்தை ஸ்தாபிப்பதற்கு உள்ள வழிமுறைகளில் ஒன்றாகவே இந்த வகையானவர்கள் பத்திரிகைதுறையையும் பார்க்கிறார்கள்.
அண்மையில் யாழ்ப்பாணத்தின் மூத்த ஊடகவியலாளர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, “யாழ்ப்பாண பொடியளுக்கு வகுப்புக்கள் வைத்து வளர்த்தெடுக்க வேண்டும்” என கவலையோடு சொன்னார். அப்பொழுது ஒரு முக்கிய விடயத்தை சொன்னார். “பொடியள் வயதுக்கு வந்ததும் வேலைதேடி கடைகளுக்கும், மேசன் வேலைகளிற்கும் செல்வதைப் போல இங்கு வந்துள்ளார்கள். அவர்களிடம் ஒரு கமராவை கொடுத்து ஓடிப்போய் அதை எடுத்து வா என்றால் கச்சிதமாக செய்வார்கள்” என்றார். இதுதான் வடக்கு பத்திரிகைசூழலின் அடிப்படை.
இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். கடந்த வாரம் ஒரு சிறுகுழுவால் யாழ்ப்பாணத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் சில தலைவர்களது உருவப்பொம்மைகள் எரிக்கப்பட்டிருந்தன. பெண்கள் மீது சில தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் காமப்பாய்ச்சல் பாய்கிறார்களாம். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்ற பெயரில், எழுந்து நடக்கவே சிரமப்படும் சம்பந்தனினதும், மாவையினதும் உருவப்பொம்மைகளை எரித்தார்கள். அதனை யாழ்ப்பாணத்திலுள்ள எந்த தமிழ்தேசிய பத்திரிகையும் செய்தியாக பிரசுரிக்கவில்லை. மாறாக மகிந்த ராஜபக்ச இன்று கக்காவிற்கு போனாரா இல்லையா என்பதை தினமும் அவதானித்து அறிக்கையிட்டு கொண்டிருப்பார்கள்.
இந்தவகையான போக்கு யாருக்கு வாய்ப்பாக அமைந்தது என்றால் இரண்டு தரப்புக்களிற்கு மட்டும்தான். ஒன்று தமிழ்தேசிய அரசியல்வாதிகள். தமது அரசியல் எதிரிகளை அவர்கள் கையாள சுலபமான சூத்திரம் கிடைத்துள்ளதுடன், அதனை தினம்தினம் மக்கள் மத்தியில் பிரசாரம் செய்யும் தொண்டர்களாக பத்திரிகைக்காரர்கள் வாய்த்துள்ளார்களே. தம்மை கேள்விகேட்பவர்கள், வேறு அரசியல்நிலைப்பாடுடையவர்களை துரோகியாக்கி களத்தைவிட்டு அகற்ற தமிழ்அரசியல் ஆரம்பத்தில் கண்டெடுத்தது தமிழ் ஆயுத இயக்கங்கள். தற்பேது தத்தெடுத்திருப்பது இந்தவகையான பத்திரிகையாளர்களை.
இந்தவகை போக்கினால் பயன்பெறும் இரண்டாவது தரப்பு அரசு. அவர்கள்தான் மிக அதிகமான பலனை பெறுபவர்கள். அரசியல், ராஜதந்திர செயற்பாடுகளில் மிக உயர்ந்த மட்டத்திற்கு சென்றுள்ள சிங்களதரப்புடன் சவால்விடும் சூழல் தமிழர்களிடம் தற்போதில்லை. தமிழர்களின் தற்போதைய உள்ளக களயதார்த்தம் நீடிக்கும்வரையில் அப்படியொரு சூழல் உருவாகாதென்பது அவர்களிற்கும் தெரியும். அதனால் தற்போதைய நிலையை நீடிக்கவே விரும்புவார்கள்.
தற்போது தமிழர்கள் தரப்பில் யார் போராளி யார் பொறுக்கி என்பது யாருக்கும் தெரியாது. தடியெடுத்தவன் தண்டல்காரன் என்பதைப்போல, பேஸ்புக் வைத்திருப்பவன் எல்லோரும் போராளிதான். இப்படியான போராளிகளின் “அரசியல்நிலைப்பாடுகளிற்கு” மாறானவர்கள் பொறுக்கிகள்.
இந்தப்பின்னணியில்த்தான் நல்லூர் மக்கள் போராட்டமும் அணுகப்பட்டது. இந்தப் போராட்டம் பல்வேறு தரப்பினருக்கும் உவப்பில்லையென்பது வெளிப்படையாகவே தெரிந்தது. முக்கியமாக அரசியல்வாதிகளிற்கு இடமில்லையென அறிவிக்கப்பட்டது அரசியல்வாதிகளிற்கு உவப்பில்லாமல் போனது. நமது பேஸ்புக் தமிழ்தேசிய போராளிகளையும் அதிகம் சீண்டியிருக்கும். அவர்கள் அறிந்த போராட்டமெல்லாம், இதுவரை யாழில் நடந்த போராட்டங்கள் மட்டும்தான். இவற்றில் கட்டாயம் சிறிதரனோ, அனந்தியோ, ஐங்கரநேசனோ முகத்தை காட்டியிருப்பார்கள். இந்த முகங்கள் இல்லாத போராட்டத்தை அவர்களால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. இது அரசியல்வாதிகளை பதட்டப்படுத்த, அவர்களின் தத்தப்பிள்ளைகள் ஊடகங்களின் வாயிலாக அதனை பிரதிபலித்தார்கள்.
அரசுதரப்பு பற்றி நான் பேசவில்லை. ஏனெனில், நான் தற்போது பேசிக்கொண்டிருக்கும் வட்டாரத்திற்கு எதிர்த்திசையில் அவர்கள் நிற்கிறார்கள். அதனால் அவர்களையும் இழுத்து கட்டயாமாக நாலு குத்துகுத்தி என் தமிழ்தேசிய பற்றை நிரூவிக்க எத்தனப்படவில்லை.
இன்னொன்று, இப்பொழுது போராட்டம் நடத்தப்படுவது தனியே சிங்கள ஆட்சியாளர்களை பொறுப்புக்கூற வலியுறுத்தி மட்டுமல்ல. மாறாக நம்மவர்களையும் பொறுப்புக்கூற வலியுறுத்துகிறது. இதுவும் போராளிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவர்கள் நினைக்கிறார்கள், நம்மவர்களை கேள்வி கேட்கிறார்கள் என்றால் நிச்சயம் அவர்கள் ஒட்டுக்குழுவாகத்தான் இருப்பார்கள் என.
இது ஒரு யாழ்ப்பாணத்தின் பொதுமனநிலையென்பதை ஏற்கனவேயும் பலமுறை குறிப்பிட்டிருக்கிறேன். அவர்கள் ஏரியாவுக்குள் புகாதவரை அவர்களிற்கு ஓகேதான். தப்பித்தவறி அவர்களின் ஏரியாவிற்குள் நுழைந்தால், அடுத்த கணமே பேஸ்புக புரபைல் பிக்சரில் இருந்து தண்ணீர்ப்போராட்ட படத்தை அகற்றிவிட்டு, அது ஈ.பி.டி.பியின் செயல் என பிலாக்கணமிட ஆரம்பித்து விடுவார்கள்.
பெரும்பாலான பேஸ்புக் போராளிகளின் ஒரே கேள்வி- வடக்கு முதலமைச்சர் கொடுத்த எழுத்துமூல உறுதிமொழியை ஏற்காதவர்கள், எப்படி ஆளுனரின் வாய்மூல வாக்குறுதியை ஏற்றார்கள் என்பதே. இதை சற்று தூக்கலாக கேட்க நினைத்த போராளிகள் இடையிடையே மானே தேனே போட்டுக் கொண்டார்கள். சிங்கள ஆளுனர், தமிழர்களின் ஏக முதல்வர் என தமது கற்பனை குதிரையை தட்டிவிட்டிருந்தார்கள்.
அவர் சிங்கள ஆளுனரா, பறங்கி ஆயுளுனரா என்பதெல்லாம் இரண்டாவது விடயம், அவருடன் சுமுகமான உறவுள்ளதென்றும், எல்லாம் சட்டப்படி நடக்கிறதென்றும் வடக்கு முதலமைச்சரே வாக்குமூலமளித்து விட்டாரே. பிறகெதற்கு இடையிடையெ மானே, தேனே போட்டுக் கொள்ள வேண்டும்?
நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அண்மைநாட்களாக வெளிப்படுத்திவரும் விக்னேஸ்வர பக்தி வெளிப்படையானது. அவரது இணைத்தளம் “வடக்கு முதல்வரை அவமதித்த போராட்டக்காரர்கள்” என செய்தி வெளியிட்டிருந்தது. எதனை அவமதிப்பாக அவர்கள் கருதினார்கள் என்பதை பாருங்களேன், இந்த நீரை குடிக்கலாமா முடியாதென அவரை விடாப்பிடியாக கேட்டதைத்தான் அப்படி செய்தி வெளியிட்டார்கள்.
இந்த வகையான பத்திரிகையாளர்கள் இணையத்தளங்களில் மகிந்த ராஜபக்சவின் நடத்தைகளை கண்டு வளர்ந்திருப்பார்கள் என நினைக்கிறேன். தலைவர்கள் வந்தால் சப்தநாடியும் ஒடுங்கி நிற்க வேண்டுமென அவர்கள் நினைத்திருக்கலாம். உண்மையில் அரசியல் என்பதன் அடிப்படையே பொறுப்புக்கூறல்த்தான் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளாமலிருந்திருக்கக்கூடும்.
அந்த இணைத்தளம் வெளிநாட்டை தளமாக கொண்டது. சுன்னாகம் எண்ணெய் அவர்கள் வீட்டு கொல்லையை எட்டும்வரை அவர்களிற்கு அது பிரச்சனையான விடயமல்ல. அந்த மக்கள் தண்ணீரை குடித்தாலென்ன, கழிவெண்ணையை குடித்தாலென்ன.. ஓட்டுப்போட உயிருடனிருந்து தமக்கு வாழ்வளிக்கும் அரசியல்வாதிகளை வெற்றியடைய செய்தால் சரியென நினைக்கிறார்கள்.
போராட்டக்காரர்கள் வடமாகாணசபை கொடுத்த வாக்குறுதியை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லையென தெரியவில்லை. அவர்கள் தரப்பிற்காக நான் வாதிட முடியாது. ஆனால் சில தர்க்கபூர்வமான காரணங்களினடிப்படையில் அதனை நியாயம் சொல்ல முடியும்.
முதலாவது, நான்கு நாள் அவகாம் கேட்கும் முதல்வர், இத்தனைநாள் என்ன செய்தார்?. அவர் முதல்வராக உள்ள பிராந்தியத்தில் குடிக்க முடியாமல் நீர்மாசடைந்து வருவதாக மக்கள் அலறிக் கொண்டிருக்கிறார்கள், அன்றாடம் வழங்கப்படும் சொற்பநீரில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள், பேராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர் உணர்வுபூர்வமான, ஜீவனோபாய பிரச்சனைக்கரிய முன்னுரிமையை அதற்கு கொடுக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்கவுடன் அவருக்கு ஏற்பட்ட லடாயிற்கு கொடுத்த முக்கியத்துவத்தை இந்தப்பிரச்சனைக்கு அவரும் கொடுக்கவில்லை, தமிழ்தேசிய ஊடகங்களும் கொடுக்கவில்லை. இதில் அவர் மட்டும் குற்றம்சாட்டப்படக்கூடியவரல்ல. வடக்கு விவசாய அமைச்சரும் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியவர்.
அவர்கள் தூயநீருக்கான செயலணி ஒன்றை நிறுவினார்கள். அந்த செயலணி அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கை பற்றி நாம் விமர்சிக்கப் போவதில்லை. எனினும், அந்த செயற்றிட்டத்திலிருந்த குறைபாடுகள் பற்றி பேச வேண்டும்.
முதலில் அந்த ஆய்வு எப்படி, யாரால், எங்கு நடத்தப்பட்டது என்பது பற்றியோ அதன் நம்பகத்தன்மை பற்றியோ சரியான தெளிவுபடுத்தல்கள் செய்யப்பட்டிருக்கவில்லை. அந்த குழு வெளியிட்ட ஆய்வுமுடிவுகளை உள்ளூர் மருத்துவ ஆய்வுகளும், தனிப்பட்ட மருத்துவர்களும் நிராகரிக்கும் நிலையே இருந்தது. அதன் செயற்றிறன் பற்றிய கேள்விகளை இவர்கள் எழுப்பியிருந்தார்கள்.
மிக அத்தியாவசியமான பிரச்சனையொன்றில் காத்திரமான திட்டமிட்ட செற்பாட்டை ஏன் வடமாகாணசபையினால் செய்ய முடியாமல் போனது? இப்படியான வாழ்வாதார பிரச்சனையொன்றிலேயே சரியாக திட்டமிட்டு செயற்பட முடியாதவர்களை நம்புமாறு மினரல் வோட்டர் அருந்திக் கொண்டு செய்திகள் எழுதுவதில் எந்த நியாயமுமில்லை.
இப்பொழுது ஆட்சியில் மகிந்த இல்லை. தமிழர்களினால்த்தான் ஆட்சியில் வந்தேன், உங்களை மறக்க மாட்டேன் என வாய்க்குவாய் சொல்லும் மைத்திரியின் நல்லாட்சி. நல்லாட்சிக்கு வாக்களிக்க கோரியவர்கள்தான் கூட்டமைப்பும், வடக்கு முதல்வரும். வடமாகாணசபை இந்த காரியத்தை செய்ய திணறுகின்றதென்றால், தமிழ்தேசிய கூட்டமைப்பு ஏன் மத்தியஅரசுடன் பேசி இதனை சரி செய்யவில்லை. மத்தியஅரசின் ஆய்வைக் கூடவா இந்த ஆட்சியில் பெற முடியாது?
மாகாணசபையின் செயற்பாடுகளில் கூட்டமைப்பு பங்குகொள்வதில்லை என்று ஏற்கனவே கொடுத்த உறுதிமொழி, மற்றும் அண்மைநாட்களில் கூட்டமைப்பு- வடமாகாணசபை அபிப்பிராய பேதங்களால் கூட்டமைப்பு ஒதுங்கியிருக்கிறது. ஒரு கட்சியின் உள்ளக விவகாரங்களிற்காக ஒரு மக்கள் கூட்டத்தையே பலி கொள்ளத் தயங்காத மனநிலையை என்னவென்பது? இதனை நான் கூட்டமைப்பு, வடமாகாணசபை மீதான விமர்சனமாக வைக்கவில்லை. பேஸ்புக் போராளிகள் மீதே வைக்கிறேன்.
நல்லூர் முன்றலில் போராட்டம் ஆரம்பித்த அன்று வடக்கு மாகாணசபையில் நீர்ப்பிரச்சனை பற்றி விசேடஅறிக்கை சமர்ப்பித்து விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் உரையாற்றினார். அவரும் தமிழ்தேசிய ஊடகப்பரப்பில் நீண்டகாலம் பங்கெடுத்திருந்தவர். இந்த பழக்கதோசம் அறிக்கையில் தென்பட்டது. வடமாகாணசபைக்கெதிரான சில தீயசக்திகள் மக்களைதிசைதிருப்பியுள்ளதென குற்றம்சுமத்தினார்.
உண்மையில் ஐங்கரநேசன் அன்று செய்திருக்க வேண்டியது என்ன? அந்தநீரை பருகலாமா முடியாதா என்பதை பட்டவர்த்தனமாக சொல்வதே. அதைவிடுத்து மணிரத்தினம் படப்பாணியில் யாருக்கும் புரியாமல் பேச வேண்டிய அவசியமெல்லாம் கிடையாதே.
அந்த சமயத்தில் இன்னொரு உறுப்பினர் கேசவன் சயந்தன், வடக்கு நீர் ஆய்வை கேள்விக்குட்படுத்தினார். அதாவது அனுமதியில்லாமல் யாரோ புகுந்து ஆய்வு செய்துள்ளார்கள் என்ற சாரப்பட கூறினார். முதல்வரும் அதனை ஏற்றுக் கொண்டார்.
இந்தநீரில் மாசுள்ளதா? குடிக்கலாமா முடியாதா என்பதே மக்களின் கேள்வி. அதனை வடமாகாணசபை கூற வேண்டும். அந்த பொறுப்பை ஏற்க முடியாதென்றால், மத்தியஅரசு அதில் தலையிடுவது தவிர்க்க முடியாததே. மக்களின் ஜீவனோபாய பிரச்சனையிலேயே திட்டமிட்டு சரியான இவர்களால் நடந்து கொள்ள முடியாதென்றால், காணி,பொலிஸ் அதிகாரங்களை கொடுத்தால் என்ன நடக்குமென அண்மைக்காலமாக தமிழ்தேசியத்தை நிராகரிப்பவர்கள் அண்மைக்காலமாக கேட்கும் கேள்வியாக உள்ளது.
இவை அனைத்தையும்விட, முதல்வரின் உறுதிமொழியை போராட்டக்காரர்கள் ஏற்காமலிருந்ததற்கான வேறொரு முக்கிய காரணமுமிருந்தது. அதனை எந்த ஊடகங்களும் வெளியிடவில்லை. முதல்நாள் இரவு அங்கு சென்ற முதல்வர் தலைமையிலான குழுவினர் மிக குழப்பகரமாக பேசினார்கள். முதல்வர் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார்- இதுபற்றி தனக்கெதுவும் தெரியாதென. அந்தநீரை குடிக்கலாமா, குடிக்க முடியாதா, நீரில் மாசுள்ளதா இல்லையா என்பது பற்றி தனக்கு ஒன்றுமே தெரியாதென அவர் பகிரங்கமாக கூறினார். அப்பொழுது அருகில் நின்ற சிவாஜிலிங்கம், அந்தநீரில் மாசுள்ளது குடிக்க வேண்டாம் என்றார். மறுபக்கத்தில் நின்ற அமைச்சர் டெனீஸ்வரன், இருக்கிறதா இல்லையா என்பதை பின்னர் பார்த்து கொள்ளலாம், நாம் இப்பொழுது சமாதானமாக போவோம் என்றார். அவர் நினைத்தார், இது வடமாகாணசபைக்கு எதிரான போராட்டமென.
அந்த சமயத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவன் ஒருவர் கேட்டுள்ளார்- “இதுபற்றி ஒன்றும் தெரியாமல் எப்படி முதல்வராக இருக்கிறீர்கள்” என. அதற்கு முதல்வர் சொன்னார், தானும் சாதாரண மனிதன்தானேயென.
போராட்டக்காரர்களிற்கு வடமாகாணசபை முன்வைத்த பிரதான வாக்குறுதி, நீரில் மாசிருப்பது கண்டறிப்பட்டால் அதற்கு நடவடிக்கை எடுப்போம் என்பதே. மாறாக ஆளுனர் மற்றும் அரசஅதிபர் கொடுத்த வாக்குறுதி- நீரில் மாசுள்ளதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. அந்த நீரை பருக முடியாது. அந்த விடயத்தில் நடவடிக்கை எடுப்போம் என்பதே.
நீரில் மாசுள்ளதா என்பதை கண்டறிய வடமாகாணசபைக்கு நான்குநாள் கொடுப்பதைவிட, நீரில் மாசுள்ளதை கண்டறிந்துள்ள ஆளுனருக்கு ஏழுநாள் அவகாசம் கொடுக்கலாமென போராட்டக்காரர்கள் எடுத்த முடிவு தர்க்கரீதியானதுதானே.
இவை அனைத்தையும் விட முக்கியமானது, வடமாகாணசபை நிபுணர்குழு அறிக்கை பற்றிய முன்பின்னான குழப்பகரமான தகவல்கள், அதிகார மட்டத்தில் வெவ்வேறான அறிக்கைகள் வைத்திருப்பது எல்லாம் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. இந்த விடயத்தில் வடக்கு விவசாய அமைச்சர் பற்றிய காரசாரமான குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அவர் இனி வெளிப்படையான செயற்பட்டு அவற்றை களைய முயற்சிக்க வேண்டும்.
இந்த போராட்டம், முடிவு பற்றி இன்னொரு விடயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இது இளைஞர்களால் தன்னெழுச்சியாக திட்டமிடப்படாமல் ஆரம்பிக்கப்பட்டது. அதாவது நமது ஆயுதப்போராட்டத்தின் ஆரம்பத்தை உதாரயமாக சொல்லலாம். அதிக உணர்ச்சிவசப்படும் இளையவர்கள் அவர்கள். அரசியல்நிகழ்ச்சிநிரலிற்கு அப்பாலானவர்கள். அரியல்நிகழ்ச்சி நிரலிற்கு அப்பாலான இப்படியான இளைஞர்களின் செயற்பாடுகளே வளர்ச்சியடைந்து மக்கள் கூட்டத்தின் அரசியல்நிகழ்ச்சி நிரலாக மாற்றமடையுமென்பதே வரலாறு. இந்தவகையானவர்களின் ஆரம்ப களங்களில் எடுக்கப்படும் முடிவகளெல்லாம் நூறுவீதமும் விமர்சனத்திற்கு அப்பாலானவையாக இருக்குமென்பதுமல்ல. ஆனால் மக்களின் பிரச்சனையொன்றிற்காக களமிறங்கியுள்ளார்க் என்பதே இதில் முக்கியமான அம்சம்.
நன்றி : தீபம் தொலைக்காட்சி இணையம்