சென்னையில் சிகிச்சை பெறவந்த விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளைth திருப்பி அனுப்பியது குறித்து மத்திய அரசை உடனடியாகப் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபாகரன் தாயார் பார்வதியம்மாள் சிகிச்சைக்காக மலேசியாவில் இருந்து சென்னை வந்தார். அவர் விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார். இதை எதிர்த்து வழக்கறிஞர் கருப்பன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.
மனுவில், “மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கடந்த 16ஆம் திகதி மலேசியாவில் இருந்து சென்னை வந்த பார்வதி அம்மாளை குடியுரிமை அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர்.
விசா உள்ளிட்ட உரிய அனுமதியுடன் வந்த பார்வதி அம்மாளை, இந்தியாவுக்குள் அனுமதிக்காதது சர்வதேச மனித உரிமை மீறல். இதனால் பார்வதி அம்மாளை தனி விமானம் மூலம் மீண்டும் சென்னை அழைத்து வர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். மேலும் மருத்துவச் செலவுகள் அனைத்தையும் மத்திய அரசே ஏற்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் தர்மாராவ், கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஜெயசிங் ஆஜராகி வாதாடுகையில்,
“இந்த வழக்கில் மத்திய அரசையும், மாநில அரசையும் பிரதிவாதிகளாக சேர்த்துள்ளார்கள். பார்வதியம்மாளை திருப்பி அனுப்பியதில் மாநில அரசுக்கு எந்த பங்கும் கிடையாது. வெளிநாட்டவர்கள் வருகையும், அனுமதி வழங்குவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே மாநில அரசை இந்த வழக்கில் சேர்க்க கூடாது” என்று கூறினார்.
இதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு வழக்கில் இருந்து தமிழக அரசை நீக்க உத்தரவிட்டனர்.
பின்னர் நடந்த வாதத்தில் மத்திய அரசு வக்கீல் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.ரவீந்திரன் ஆஜராகி நாளை(இன்று)பதில் அளிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை இன்று பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.