திராவிடக் கொள்கை வழி வந்த திமுகவினர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். ஆர்.எஸ்.எஸ் விழாக்களில் பங்கேற்பது, காஞ்சி விஜயயேந்திரரை சந்திப்பது என்று அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாக தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் தமிழக அரசு சார்பில் பாரத மாதா சிலையை திறந்து வைத்துள்ளார் தமிழக அமைச்சர் சுவாமிநாதன்.
கடந்த அதிமுக ஆட்சியில் தியாகி சிப்பிரமணிய சிவாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டது. அதில் பாரத மாதாவின் சிலையும் அமைக்கப்பட்டது. அப்போதைய அதிமுக அரசுக்கு பாஜக கொடுத்த அழுத்தத்தின் பேரில் சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் பாரத மாதா சிலை அமைக்கப்பட்டது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கிய பணிகள் இப்போது முடிவடைந்த நிலையில் அந்த சிலையை திமுக அமைச்சர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்துள்ளார்கள். பாரதம், பாரத மாதா போன்றவை இந்துத்துவ பரிவாரங்களால் உருவாக்கப்பட்ட சொற்கள். இந்தியா என்ற சொல்லை இந்துத்துவர்கள் பயன்படுத்துவதில்லை. பாரத மாதா, பாரதம் என்ற சொற்களை பயன்படுத்தும் நிலையில் அவர்களின் கருத்துக்களுக்கு வலுச் சேர்ப்பது போன்று திமுக அமைச்சர் செயல்பட்டிருப்பது அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது.