நான் மரு.ருத்ரனிடம் இருந்து ஒரு புத்தகம் வாங்கிப் படித்தேன். ID என்ற புத்தகம் சூசன் கிரீன்ஃபீல்ட் என்ற நியூரோ சைக்காலஜிஸ்ட் எழுதியது. அந்த நூல் இதைத்தான் முக்கியமாகக் கையாள்கிறது. 21-ம் நூற்றாண்டு, அதற்குப் பிறகு இளைஞர்கள், படிக்கும் முறை எல்லாம் எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பேசுகிறது. அது ஒரு மிகப் பெரிய மூளை ஊனத்திற்கு இந்தச் சமூகம் ஆட்படப் போகிறது என்று சொல்கிறது. இதை எப்படிப் புரியவைப்பது?
நாம் நம் பெற்றோர் தலைமுறையை விடக் குறைவாக நடக்கிறோம். அவர்களை விடக் குறைவாக உழைக்கிறோம். நம்முடைய வாழ்க்கை முறை மாறி விட்டது. சுற்றுச்சூழல் மாறிவிட்டது.இதன் காரணமாக பல பிரச்சனைகள் உடலில் ஏற்படுகின்றன. டாக்டர்கள் வாக்கிங் போக உடற்பயிற்சி செய்யச் சொல்கிறார்கள். இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என்று பல பிரச்சனைகள். இதற்கெல்லாம் 40-50 வகைப்பட்ட மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொன்றையும் குறிப்பாக ஆராய்ந்து சொல்கிறார்கள். இப்படி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில் கருத்தியல் ரீதியாக ஒரு தாக்குதல் மூளைக்கு வருகிறதே இது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாதென்றா நினைக்கிறீர்கள்?
நான் சிந்தனையில் ஏற்படும் மாற்றத்தைச் சொல்லவில்லை. மூளை என்ற பருப்பொருளே காலப் போக்கில் செயலிழந்து போகிறது. உதாரணமாக, இந்தக் கையைப் பயன்படுத்தி நான் கடுமையாக உழைக்கும் பட்சத்தில் இந்தக் கைகள் வலிமையாக இருக்கும். நான் குமாஸ்தாவாக எழுதிக்கொண்டு தான் இருக்கிறேன், உழைப்பில் ஈடுபடவில்லை என்றால் இந்தக் கை இப்படித்தான் இருக்கும். உடல் அங்கமான மூளையைப் பயன்படுத்தி இந்தத் தொலைக்காட்சி ஃபிரேம் மாறுவதை பார்க்கும் போது என்ன செய்கிறார்கள்? இளைஞர்கள் சிந்திப்பதில்லை என்பதல்ல அவர்கள் சிந்திக்கும் திறனையே இழந்து வருகிறார்கள். அவர்களால் சிந்திக்க முடியாது.
அவர்கள் முற்போக்காக புரட்சி செய்யவேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை; தொடர்ச்சியாக ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி சற்று நேரம் அமர்ந்து விலகிச் செல்லாமல் ஒரு பொருள் குறித்து ஆழமாக உரையாட முடியுமா? இன்றைய இளைஞர்களிடம் முயற்சி செய்து பாருங்கள். ஒரு குறிப்பிட்டப் பொருளைக் குறித்து எழுதிக் கொடுக்க முடியுமா? கேட்டுப் பாருங்கள். இல்லை, நம்மாலேயே விருப்பமான ஒரு விஷயம் குறித்து முடிகிறதா என்று யோசித்துப் பாருங்கள். முடியவில்லை என்றால், ஏன் முடியவில்லை? படித்திருக்கிறோம், எழுத்தறிவு இருக்கிறது, ஏன் முடியவில்லை?
அதற்கு இரண்டு காரணம் இருக்கிறது. ஒன்று சரக்கில்லை. ஸ்பெக்ட்ரம் பற்றி இரண்டு பக்கம் எழுதிக் கொடுக்கச் சொன்னால் எத்தனை பேர் எழுதித் தர முடியும்? இரண்டாவது அப்படி முனைந்து சிந்திக்கும் ஆற்றலை இழந்து விட்டோம். கிருபானந்த வாரியார் வந்து உட்கார்ந்தால் அப்படியே சிஸ்டத்திலிருந்து வருவது போல வடமொழி சுலோகங்கள், இலக்கியம் எல்லாம் வந்து கொண்டே இருக்கும். அவ்வளவும் மனப்பாடம். அப்படி ஒரு நினைவாற்றல். அது பழைய கல்வி முறையின் அங்கமாக இருந்தது.
அச்சுக் கலை வந்த பிறகு அப்படி மனப்பாடம் செய்து கொள்ள வேண்டிய தேவை போய்விட்டது. இப்போது கணினி வந்து விட்டது. வாய்ப்பாடு தேவை இல்லை கால்குலேட்டர் இருக்கிறது. தேவையான விஷயங்களை கணினி மூலம் சேமித்து வைத்துக் கொள்ளலாம். அதை நினைவில் சேமிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த மாற்று நிலை என்ன செய்கிறது? அந்த ஆற்றல்களை நம்மிடமிருந்து மெல்ல மெல்ல வெளியே கொண்டு வருகிறது. முன்பு கிராமத்தில் சாமான் வாங்கினால் “நாலு பத்து நாப்பது என்று சொல்ல வேண்டியது தானே அதற்கெதற்கு கால்குலேட்டர்” என்று கிண்டல் செய்வார்கள். “இது கூடத் தெரியவில்லையா” என்று கேலி செய்வார்கள். இந்த ஆற்றல்களை இழப்பது போல நாம் சிந்திக்கும் திறனையும் இழக்கிறோம்.
இதைச் சொல்லும்போது நவீன மாற்றங்களை எதிர்த்து நான் பேசுவதாகப் புரிந்து கொள்ளக் கூடாது. நவீன மாற்றங்கள் வாழ்க்கையைக் கெடுத்து விட்டது என்று பழமைவாதியைப் போலப் பேசுகிறேன் என்று இருந்து விடக்கூடாது. அப்படி அல்ல. ஆனால், இந்த நவீன மாற்றங்கள் கேடான முறையில் மட்டும் திட்டமிட்டு நம் மீது ஒரு ஆயுதம் போலப் பிரயோகிக்கப் படுகின்றன.
இப்படி வளர்க்கப்படுபவர்களால் கருத்தியல் (concept) ரீதியாகச் சிந்திக்க முடியாது. 2-3 வயதுக் குழந்தைகளால் எப்படி கருத்தியல் ரீதியில் சிந்தித்துப் பேச முடியாதோ அது போல் ஆகிறார்கள். குழந்தைகளால் “எனக்கு கஷ்டமாக இருக்கிறது” என்று சொல்ல முடியாது. அவர்களால் படிமங்களால் தான் சொல்ல முடியும். சுடும் என்றோ, வலிக்கிறது என்றோ சொல்லத் தெரியாத குழந்தை காலப்போக்கில் கருத்தியல் ரீதியாகக் கற்றுக்கொள்கிறது. அதற்கு முன் அந்த அனுபவத்தைத் தான் அந்தக் குழந்தை பேசுகிறது. ஏனென்றால் அதன் அறிவு காட்சிப் படிமங்களில் இருக்கிறது, அனுபவத்தில் இருக்கிறது. கருத்தியல் ரீதியான ஆற்றலே அந்தக் குழந்தையிடம் இல்லை. பின்தான் கொஞ்சம் கொஞ்சமாய் கற்றுக் கொள்கிறது. அந்தக் குழந்தையைப் போல இந்தத் தொலைக்காட்சிப் படிமங்களைப் பார்த்துப் பார்த்து கருத்தியல் ரீதியாகச் சிந்திக்கும் ஆற்றல் போய்க்கொண்டு இருக்கிறது.
ஜனநாயகம் என்றால் என்ன? கௌரவம் என்றால் என்ன? நீதி என்றால் என்ன? போன்ற கேள்விகளுக்கு நுனிநாக்கு ஆங்கிலம் பேசுபவர்களால் பதில் சொல்ல முடிவதில்லை. அது எதுவும் தொலைக்காட்சியில் பேசப் படுவதில்லை. எதுவும் நின்று விவாதிக்கப் படுவதில்லை. ஏன் இவ்வாறு என்பது முக்கியமான கேள்வி. இவ்வாறு சிந்திக்கும் திறனற்ற, சிந்திக்கும் தேவை அற்ற உழைக்கும் மிருகங்களை உருவாக்குவதற்குத் தான் உலக முதலாளித்துவம் செயல்படுகிறது.
உழைக்கும் மிருகங்கள் என்று சொல்லும் போது உடல் உழைப்பு மட்டுமல்ல மூளை உழைப்பையும் சேர்த்தே சொல்லுகிறேன். மூளை உழைப்பிலும் அவனுக்குத் தேவையானப் பணியை செய்ய முடிந்த இயந்திரத்தின் உப உறுப்புகள் மட்டும்தான் தேவை. அவன் உட்கார்ந்து கருத்தியல் ரீதியாகச் சிந்திக்கத் துவங்கினால் அது பிரச்சினை.
பல புதிய விஷயங்கள் மொழி வழக்கில் வந்திருக்கின்றன. நடிகைகள், தொலைக்காட்சி தொகுப்பாளினிகள் இவர்கள் பேசுவதைப் பார்த்தீர்களேயானால் சில ஆங்கில வார்த்தைகள் புலப்படும். நாம் சந்தோஷமாக இருந்தோம், ஜாலியாக இருந்தோம் என்று சொல்வதை இவர்கள் We had fun என்று சொல்லுவார்கள். இது மேற்கத்திய மொழி. இந்த மொழியில் என்ன பொருள் வருகிறதென்றால் அந்தக் கண நேர மகிழ்ச்சி என்பதுதான்.
மாடு போல ஒரு வாரம் முழுக்க வேலை செய்துவிட்டு சாயங்காலம் தண்ணி அடித்து விட்டு டான்ஸ் ஆடும் மகிழ்ச்சி அல்லது வேறு ஒரு நிகழ்ச்சி போன்றது. மகிழ்ச்சி என்பதன் முழுமையான பொருள்- அது ஒவ்வொருவருக்கும் வேறாகவே இருக்கட்டும், சுற்றுலா செல்லுவது மகிழ்ச்சியா? கோவிலுக்குப் போவது மகிழ்ச்சியா? அப்படியே இருக்கட்டும். ஆனால் இவர்கள் மகிழ்ச்சி ஒரு முழுமையான பொருளில் இருக்கிறதா?
உண்மையில் மகிழ்ச்சி என்பதைப் பார்க்காத ஒரு பாப்கார்ன் தலைமுறை உருவாக்கப் படுகிறது. மகிழ்ச்சியின் முழுமையைப் பற்றி ஒருவன் சிந்திக்கத் தொடங்கும் போதுதான் ஒரு நிலப்பிரபுத்துவ சிந்தனையிலிருப்பவன் கூட கம்யூனிஸ்ட்டாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பிற்போக்குவாதியாக வறட்டு கௌரவம் பார்ப்பவனாக இருக்கட்டும். அவன் அந்த விழுமியங்களைப் பற்றி வாழக் கூடியவனாக இருக்கிறான். அப்படி இருக்கக் கூடியவனோடு மோதி, சாதி, வறட்டு கௌரவம் போன்ற விஷயங்களில் போராடி இதற்கு மாற்ற முடியும்.
ஆனால் இந்த பாப்கார்ன் தலைமுறை, விழுமியங்கள் இல்லாத ஒரு விஷயத்தைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கும் திறன் இல்லாத நொறுக்குத் தீனித் தலைமுறையாக வளர்க்கப் படுகிறது. அதனால் தான் இவர்களால் ஒரு புத்தகத்தைப் படிக்க முடியவில்லை. சிலர் “புதிய கலாச்சாரம்” பத்திரிகை ரொம்ப சீரியசாக இருக்கிறது, லைட்டாக இல்லை என்று சொல்லுவார்கள். லைட்டாக என்றால் அதைப் பார்த்த உடனேயே புரிந்துவிட வேண்டும். ஒரு புத்தகத்தில் பக்கம் நிறைய எழுத்து இருந்தாலே பலருக்கு பிரச்சனையாக இருக்கிறது.
நான் இணையத்தில் ஒரு வலைப்பூ பார்த்தேன் 11 seconds blog என்று பெயர். 11செகண்டில் அதில் இருப்பதைப் படிக்க முடியுமென்றால் எத்தனை வரி இருக்க முடியும்? ட்விட்டர், SMS என்று பரிமாறிக் கொள்ளலாம். இவையெல்லாம் வடிவம் என்று நினைக்கிறோம். இல்லை. இணையத்தில் படிக்கக் கூடியவர்களுக்கோ புத்தகமாகப் படிக்கக் கூடியவர்களுக்கோ அந்த நாலு வரிக்கு மேல் கண் நிற்க மாட்டேன் என்கிறது. அந்த ஆற்றலை இழந்து வருகிறோம். பாரிய விஷயம் இது!
அதே நேரம் 10வதிலிருந்து தொடங்கி இன்ஜினியரிங் வரை உயிரைக் கொடுத்து படிக்கிறார்கள். தொழிலுக்காக, வாழ்க்கைக்காக, வருவாய்க்காக என்று 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் படிக்கிறார்கள். ஆனால் அதற்கப்பாற்பட்ட சமூகம் குறித்த இலக்கியம், அது என்னவாவது இருக்கட்டும்- வைரமுத்து கவிதைகள் கூடப் படிப்பதில்லை. வைரமுத்து 6000 பாட்டு எழுதியிருக்காராம் அதில் 1000த்தைப் புத்தகங்களாகப் போட்டிருக்கிறாராம். இன்று ஹிந்து பத்திரிக்கையில் ஒரு பெண் எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரை இப்படித் துவங்குகிறது: போன தலைமுறையைச் சேர்ந்த Tamil speaking youth காதலிப்பதென்றால் வைரமுத்து இல்லாமல் காதலித்து இருக்க முடியாது. எதற்கு Tamil speaking youth என்று எழுதவேண்டும். Tamil youth என்று எழுதினால் போதாதா? தமிழ் பேசும் இளைஞர்கள் என்று ஏன் எழுத வேண்டும்? தமிழ் இளைஞர்கள் என்று எழுதினால் போதாதா? அதற்கு ஹிந்துவிற்கு பிரச்சினை இருக்கக்கூடும்.
பிறகு யோசித்துப் பார்த்தால் சரி என்றே தோன்றுகிறது. தமிழ் இளைஞர்களில் தமிழ் பேசும் இளைஞர்கள் எத்தனை பேர்? வைரமுத்து கவிதையைப் படிப்பவனோ ரசிப்பவனோ எத்தனை பேர்? தமிழ் இளைஞர்களில் தமிழ் பேசும் இளைஞர்கள் குறைவாகிக் கொண்டே வருகிறார்கள். இப்படி சிந்திக்கும் திறனை இழந்தவர்கள் ஆகி வருகின்றோம்.
இடையே புத்தகக் கண்காட்சி முன்னிட்டு நடக்கும் பல புத்தக வெளியீட்டு விழாக்களில் பலர் பேசக் கூடும். தினமணி வைத்தியநாதன் உள்ளிட்டு “நாம் பழையவற்றைப் படிக்க வேண்டும், பாரதியார் படிக்கவேண்டும், கம்பராமாயணம் படிக்க வேண்டும், நம்முடைய இலக்கியச் செல்வங்களைப் படிக்கவேண்டும், மரபைப் படிக்க வேண்டும்” என்றெல்லாம் நிறைய உபதேசங்கள் கொடுக்கப்படும். அது அல்ல நான் சொல்வது. பொதுவாகப் படிப்பது இதற்கு தீர்வு அல்ல. அல்லது இது வெறும் தொழில் நுட்பத்தின் தாக்குதல் அல்ல. அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இது முதலாளித்துவத்தின் தாக்குதல். அதைப் புரிந்து கொள்வதற்கு அதனை முறியடிப்பதற்கு அதிலிருந்து விலகி நின்று தற்காத்துக் கொள்வதற்கு ஆற்றல் தருபவற்றைப் படிக்க வேண்டும். படிக்காதவரையிலே இதிலிருந்து விடுபட முடியாது. புரட்சி செய்வதற்காக நான் படிக்கச் சொல்லவில்லை. புரட்சி என்று தனியாக ஒன்றுமில்லை. நாம் அறியாமையினால் இப்படி மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பிள்ளைகள் ஏன் எப்படி மாறுகின்றனர் என்று பெற்றோருக்குத் தெரியவில்லை.
இளைஞர்கள் மனநல மருத்துவம் நாடி வருவது அதிகரித்துக் கொண்டு வருகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் மன அழுத்தத்திற்கான மருந்துகளை நம்மூரில் சாரிடான், ஆஸ்பிரின் வாங்குவது போல அங்கே விற்பனைக்கு
அனுமதித்திருக்கிறார்கள். அந்த அளவிற்கு இருக்கிறது அந்தப் பிரச்சனை. ஏன், எதனால் இது? இங்கும் அது அதிகரித்து வருகிறது.
40000-50000ரூ சம்பளம் கொடுக்கக்கூடிய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் ஒரு யோகா டீச்சர். எல்லோரும் பிராணாயாமம் செய்கிறார்கள். வேலை நடக்க ஊழியன் உயிரோடிருக்க கம்பெனி செலவில் இது நடத்தப்படுகிறது. கம்பனி செலவில் அவனைப் பேண வேண்டியிருக்கிறது. காலையில் அடித்து ரிப்பேர் செய்துவிட்டு மாலையில் இது. எதற்காக இது நடக்கிறது? இது முதலாளித்துவத்தின் தாக்குதல் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
26.12.2010 அன்று சென்னையில் நடந்த கீழைக்காற்றின் நூல் அறிமுக விழாவில் தோழர் மருதையனின் உரையிலிருந்து சில பகுதிகள்.
இதன் முழுமை வினவில் கிடைக்கும் :