வன்னியில் பொதுமக்களின் உயிரிழப்புகளை தவிர்க்கும் முகமாக இலங்கை அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் உடனடி போர் நிறுத்தமொன்றுக்கு செல்ல வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளதாக ஏ.பி. மற்றும் ஏ.எவ்.பி. செய்திச் சேவைகள் தெரிவித்துள்ளன.
பொது மக்கள் தப்பிச் செல்லக் கூடிய வகையில் உடனடியாக மோதல் நிறுத்தமொன்றுக்குச் செல்ல வேண்டுமென அமெரிக்கா, இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கவென ஏற்படுத்தப்பட்ட வலயங்கள் மீது ஷெல் தாக்குதல்கள் நடத்துவதை இலங்கை அரசாங்கம் நிறுத்த வேண்டுமென்றும் அத்துடன், பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாம்களை சென்று பார்வையிட சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டுமென்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளரான ரொபேர்ட் வூட் நேற்று வியாழக்கிழமை தெரிவித்திருப்பதாக ஏ.பி.செய்திச் சேவை தெரிவித்திருக்கிறது.
அது மட்டுமல்லாது, உதவி அமைப்புகள் முகாம்களுக்குச் சென்று செயற்படுவதற்கான அனுமதியும் வழங்கப்பட வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“நீண்டகால பிரச்சினைக்கு முடிவொன்றை வைக்கும் வாய்ப்பொன்று இலங்கை அரசாங்கத்துக்கு இருக்கிறது’ என்றும் ரொபேர்ட் வூட் தெரிவித்திருக்கிறார்.
அத்துடன், பொதுமக்கள் கொல்லப்படுவதானது, மோதல்களை முடிவுக்கு கொண்டு வராதென்றும் அது எந்த இறுதியான சமாதானத்துக்கும் இழுக்கு ஏற்படுத்துவதாகவே இருக்குமென்றும் வூட் மேலும் சுட்டிக்காட்டியிருப்பதாகவும் ஏ.பி. செய்திச் சேவை தெரிவித்திருக்கிறது.