மாநிலக் கட்சிகளை உடைத்து தன்னை பாஜக மிருகத்தனமாக வளர்த்து வரும் நிலையில் இதில் காங்கிரஸ் கட்சியைப் போல அதிகம் பாதிக்கப்பட்டது மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ்.
கடந்த இரு ஆண்டுகளாகவே அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் 30-க்கும் மேற்பட்டோரை தன் பக்கம் இழுத்தது பாஜக. அதில் பிரபல முக்கிய தலைவர்களும் உள்ளனர். அந்த வகையில் பாஜக மம்தாவின் பக்கம் இருந்து இழுத்த முதல் தலைவர் முகுல்ராய். அவர் பாஜக சென்றதுதான் மம்தாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. பின்னர் சுவேந்து அதிகாரியும் சென்றார். குட்டிக் குட்டி தலைவர்களும் சென்றார்கள். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எப்படியும் வென்று விடுவோம் என்று நம்பிக்கொண்டிருந்த பாஜக படு தோல்வியடைந்தது. முந்தைய தேர்தலை விட மம்தா பானர்ஜி கூடுதல் தொகுதியில் வென்றாலும் நந்திகிராம் தொகுதியில் மம்தா தோல்வியடைந்தார். இப்போது முதல்வராகியுள்ள மம்தா பானர்ஜி 6 மாதங்களுக்குள் ஒரு சட்டமன்ற தொகுதியில் வெல்ல வேண்டும்.
இந்நிலையில் மம்தா கட்சியில் இருந்து பாஜக சென்றவர்களுக்கு பாஜகவின் உரிய பதவிகள் கிடைக்காததாலும், உரிய மரியாதை இல்லை என்றும் பலரும் மம்தாவிடமே திரும்ப வருகிறார்கள். 2017-அக்டோபர் மாதம் மம்தாவை விட்டு விலகிய முகுல்ராய் மீண்டும் இப்போது மீண்டும் மம்தாவுடன் இணைந்திருக்கிறார்.
பாஜகவில் தனக்கு முக்கியத்துவம் இல்லை என்று அவரது ஆதரவாளர்களுடன் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பியிருக்கிறார்.