அறிமுகம்
நாம் வாழுகின்ற உலகம் அடிக்கடி புதிய திசைவழிகளில் பயணிக்கிறது. உலக வரலாற்றுப் போக்கின் ஒரு கரையிற் போர்களும் கொலைகளும் மரண ஓலங்களும் குருதி தோய்ந்தபடி வரலாற்றுப் பக்கங்களை நிரப்ப, மறுகரையில் வீரம் செறிந்த மக்கள் போராட்டங்களும் புரட்சிகளும் நம்பிக்கையை விதைக்கின்றன. 20ம் நூற்றாண்டு உலகம் இரண்டு உலகப் போர்கள், கெடுபிடிப்போர், புரட்சிகள், தொழில்நுட்ப வளர்ச்சி எனப் பலவற்றைத் தன்னகத்தே கொண்டிருக்க, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் 21ம் நூற்றாண்டு முன்னையதிலிருந்து மாறுபட்டுப் “பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம்” எனப் பயணிக்கத் தொடங்கியுள்ளது. காலத்துடன் பல மாற்றங்கள் நிகழ்ந்தாலும் சில அம்சங்களும் அடிப்படைகளும் மாறாதவையாகத் தொடர்வதையும் அவதானிக்கலாம். அவ்வகையிற், தொடர்ந்து நிகழ்வனவற்றுள் முக்கியமான ஒன்றாக பாசிஸத்தைக் கொள்ள முடியும். வடிவத்திலும் தோற்றத்திலும் வேறுபட்டாலும் பண்பியற் தன்மைகளில் மாற்றமின்றித் தொடர்வது பாசிஸத்தின் முக்கியமான ஒரு கூறுபாடு.
ஒரு வரலாற்றுப் பார்வை
பாசிஸம் 19-ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து துவங்குகிற, ஏகாதிபத்தியக் காலகட்டத்தின் ஒரு நிரந்தரமான போக்காகும். ஒரு குறிப்பிட்ட காலம் வரை, ஓரிடத்தில் மறைவாகவும் மற்றோர் இடத்தில் வெளிப்படையான தன்மையோடும், சில நேரங்களிற் சில நாடுகளில் ஆதிக்கச் சக்தியாகவும், எப்போதும் குறிப்பிட்ட நாட்டின் வரலாற்றுச் சூழ்நிலை, அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றின் பின்னணியில், பிரத்தியேக வடிவங்களில் அது தோன்றியுள்ளது. இத்தாலியர்கள் அதற்கு ‘பாசிஸம்’ என்று பெயர் சூட்டு முன், இக் கோட்பாட்டு வடிவம் ‘ஒருங்கிணைந்த தேசியம்’ என்ற பெயரில் 19-ம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் தீவிர வலதுசாரிகளின் கோட்பாடாக உருவெடுத்தது. ஐரோப்பாவின் பல பகுதிகளில், முதன்முறையாகப் பிரத்தியேக அம்சமான முறையில் உருவான இடது சோசலிஸ்டுகளின் வெகுஜன அடித்தளங்களுக்கு எதிர்ப்புடன் விளங்கியது. ஜெர்மனியிலும், பிரான்சிலும் மிகுந்த பலத்துடன் இருந்தது. 20-ம் நூற்றாண்டின் வளர்ச்சிப் போக்கில் அது ஐரோப்பிய எல்லைகளைக் கடந்து ஒரு உலக அளவிலான அம்சமாகவும் மாறியது. பரந்த அளவில் பின்பு உருப்பெற்ற அதன் தன்மைகளை நோக்குவோம்.
பாசிஸத் தத்துவம் உருவானபோது, அது அடிப்படையிற் பொருள்முதல்வாதத்திற்கு எதிரானதாகவும் மார்க்சியத்திற்கு எதிரான முறையிற் பகுத்தறிவுக் கருத்துக்களுக்கு மாறாக 19-ம் நூற்றாண்டின் இனவாதக் கோட்பாடுகளிலிருந்து பெருமளவிலான கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டதாகவும் இருந்தது. வர்க்கப் போராட்டமே வரலாற்றின் உந்துசக்தி என்ற மார்க்சிய முடிபுக்கு எதிராகத் தீவிரமான ஆன்மிகத்தன்மை வாய்ந்த தேசியத்தை பாசிஸம் முன் வைத்தது. ஒவ்வொரு தேசமும் தனக்கான குறிப்பிட்ட இனத்தையும் கலாசாரத் தன்மைகளையும் கொண்டிருப்பதால், இத்தகைய நாகரிகங்கட்கு இடையிலான மோதலே வரலாற்றில் முதன்மையானது என்ற கருத்தை முன்வைத்தது. இதன் வழி, சாமுவெல் ஹண்டிங்டன் எழுதிய நாகரிகங்களுக்கிடையிலான மோதல் ( (Clash of Civilizations) ) என்ற நூல் முக்கியமானது. வர்க்கப் போராட்டத்தின் படைப்பே அரசு என்றும் அது ஆதிக்கம் செலுத்தும் வர்க்க நலன்களுக்கானது என்றும் கூறும் மார்க்சியச் சிந்தனைக்கு மாறாக, அரசு என்பதை ஒட்டுமொத்தமான தேச ஆன்மாவின் ஒற்றுமையை வலியுறுத்தக்கூடிய உச்சகட்டமான அமைப்பு எனவும், வர்க்க மோதலைப் பற்றிப் பேசுகிற எவரும் தேசத்தின் எதிரி எனவும் பாசிஸம் பிரசாரம் செய்தது. இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின் உருவான நான்கு வகையான முக்கியமான புதிய மாற்றங்களை அய்ஜாஸ் அகமட் பின்வருமாறு விளக்குகிறார்.
முதலாவது வகை மாற்றம்
பாசிஸம் என்ற சொல் கடும் விவாதத்திற்குள்ளாகிய பின்னணியில், தங்களைப் பெருமையோடு பாசிஸவாதிகள் என அழைத்துக் கொண்டவர்களும் நாற்ஸி ஜெர்மனியை ஒரு முன்மாதிரியான தேசமாக மகிழ்ச்சியோடு அங்கீகரித்தவர்களும், பாசிசம் ஆதிக்க நிலையில் இருந்த வரை —அதாவது ஹிட்லரின் தோல்விக்கு முன்பு வரை— அவ்வாறு இருந்தார்கள். தற்போது அவ்வாறு இருப்பாதாகக் காட்டிக் கொள்வதை கைவிட்டுத் தங்களைத் தேசியவாதிகள் என மட்டும் அறிவித்துக் கொள்கின்றனர். பிரான்சின் தேசிய முன்ணணி, இத்தாலியின் தேசியக் கூட்டணி, முன்னாள் சோவியத் யூனியனிலும் யூகோஸ்லாவியாவிலும் கொலைவெறித் தன்மையுடைய தேசிய வாதமாகவும் இனத் தூய்மைக்கான இயக்கங்கள், இந்தியாவில் இந்து ராஜ்யமும் இந்து தேசியமும் இன்னும் இவை போலப் பலவாகவும் பாசிஸம் உருவெடுத்தது.
இரண்டாவது வகை மாற்றம்
இரண்டாவது உலகப்போரின் முடிவின் பின்னணியில் மிக வேறுபட்ட இரண்டு காரணங்களால், வரலாற்றில் முதலாளித்துவத்தின் பல்வேறு காலகட்டங்களில் வெளிப்படையான இனவெறியை நேரடிக் கொள்கை யாகத் தக்கவைக்க இயலவில்லை. இதற்கு ஒரு காரணம், கொலனி யாதிக்க எதிர்ப்புப் போராட்டங்கள் வெற்றி பெற்ற பின்னணியில் ஐரோப்பிய வகைப்பட்ட இனவெறி தன்னை வெளிப்படையாக அறிவித்துக் கொள்ள முடியாமலிருந்தது. மறு காரணம், லத்தீன் அமெரிக்காவிலும் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக நடைமுறைப் படுத்தப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறையின் வடிவங்கள், பாசிஸத்தால் எடுத்து வரப்பட்டு, நாற்ஸிகளின் பகுத்தறிவற்ற, மேன்மையான இயந்திரத் தொழில் நுட்பத்தால் லட்சக்கணக்கான யூதர்களை விஷவாயு அறைகளில் அடைத்துக் கொன்றமை பாசிஸ நடைமுறைக்குப் பெரிய சவாலாக இருந்தது. இங்கு, புதிய ஒரு முகத்துடன், வேறுபட்ட வடிவில் தன்னைக் காட்டவேண்டிய தேவை அதற்கு ஏற்பட்டது. இந் நிலையில் தேசியம் என்ற பெயரில் பாசிஸம் மீண்டும் எவ்வாறு தலைகாட்ட ஆரம்பித் துள்ளதோ, அவ்வாறே, இனவாதமும் மாயமான வடித்தில் ‘கலா சாரம்’, ‘தேசிய கலாசாரம்’ என்றவாறான பெயர்களிலும் மறுபடி தலைகாட்டத் துவங்கியுள்ளது.
மூன்றாவது வகை மாற்றம்
‘தேசம்’, ‘கலாசாரம்;’ ஆகியவற்றை மதத்தோடு இணைத்துப் பார்க்கிற நிலை உருவானது —ஆனால், பழைய ‘மரபு’க்குத் திரும்புகிற வகையிலல்ல. முப்பரிமாணத்தன்மை வாய்ந்த தேசம் ,கலாசாரம் ,மதம் சார்ந்த குடிமக்களாக இருப்பது அவசியம் என்று போதிக்கப்பட்டது. அடிப்படைவாத ஈரானைப் போல் ஒருவகையிலும் மிக நவீனமான இஸ்ரேல் போல இன்னொரு வகையிலும் இருப்பது புனிதமானதாகும். இதன் தொடர்ச்சியாக, வெளிப்படையாக இனவாதம் மதிக்கப்பட்ட நாட்களில் ‘மரபணுவியல்’ வகித்த இடத்தை, இப்போது ‘கலாசாரம்’ வகிக்கிறது.
நான்காவது வகை மாற்றம்
இது வர்க்கஞ் சார்ந்த கோட்பாட்டோடும் எகாதிபத்தியத்தியத்தோடும் தொடர்புடையது. புரட்சிகரமான காலகட்டத்தில், சோசலிசத் திட்டம் உருவான பின்னணியில் உருவான பழைய வகை பாசிஸம், கொலனி எதிர்ப்புத் தேசியவாதம் கொலனிகளில் உருவான பின்னணி யில் தனக்கென உருவாக்கிக் கொண்ட ஒருவகையான தேசபக்த சிந்தனைகளோடு, தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகளிலிருந்தும் குட்டி பூர்ஷ்வாக்களிடமிருந்தும் சிறிய முதலாளிகளிடமிருந்தும் ஒரு வகை யான வர்க்கத் தீவிரவாதத்தை வளர்த்துக் கொண்டது. நாற்ஸிகள் தங்களைத் ‘தேசிய சோசலிஸ்டுகள்’ எனறு அழைத்துக் கொண்டனர். முசோலினி முதலில் சோசலிஸ்ட் கட்சியின் புகழ்பெற்ற தலைவராக இருந்து, பின்னர் பாசிஸத்தின் அமைப்பாளராக மாறி, பாசிஸ அரசின் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்தவராவார். அடிப்படையில் அதன் ‘தேசியம்’ பெருமளவும் ஏகாதிபத்தியச் சார்புடையது. அதன் வர்க்கத் தீவிரவாதத்திற் பெரும் பகுதி மக்களைக் கவர்வதற்காகச் சொல்லப்பட்டதே. பாசிஸம், பின்னர் அவற்றைக் கைவிட்டு, முற்றாக ஏகாதிபத்திய மூலதனத்துடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டது.
நியாயமாகச் சிந்தித்துப் பார்த்தால், போர்கட்கு இடைப்பட்ட காலத்தில் உருவான பாசிஸத்தை உலக எதிர்ப் புரட்சியின் ஈர்ப்பு மையம் எனக் கூறலாம். எனினும் அவர்களும் தங்களைப் புரட்சி வாதிகளாகவே கூறிக் கொண்டனர். தீவிர வலதுசாரித் தன்மையோடு இணைந்து ஏகபோக முதலாளித்துவம் நம்மீது ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் காலம் வரை, பாசிஸத்திற்கெதிராகப் போராடுமாறு நாம் நிர்ப்பந்திக்கப் படுவோம். அதிகபட்ச லாபங்களை அடையும் தனது பாதையில் இதர வடிவங்களில் அமைந்த ஆட்சிமுறைகள் தடைக்கற்களாக மாறும்பொழுது ஏகபோக முதலாளித்துவம் பாசிஸத்தை ஆதரிக்கச் சற்றும் தயங்காது.
ஏகபோக முதலாளித்துவம், அதனுடைய பொதுவான நெருக்கடிக் காலகட்டத்தில், மிக உச்சமான தொழில் லாபமடையும் கொள்கைகளைப் பின்பற்ற முடியாது. அத்தகைய கொள்கைகட்கு எதிராக மக்கள் தலையிடக்கூடிய குறைந்தபட்ச சாத்தியப்பாடொன்றை ஜனநாயக அமைப்புகள் ஏற்படுத்தினாற்கூட ஏகபோக முதலாளித்துவம் அத்தகைய அமைப்புகளை ஒழித்துக்கட்ட முனையும். ஜனநாயக ஆட்சிக்குப் பதிலாகப் பிற்போக்கான ராணுவ ஆட்சிகளைக் கொண்டு வர முற்படும். பாசிஸம் என்பது அத்தகைய பெருந் தொழில், பெரு வர்த்தக சர்வாதிகாரங்களின் மிகவும் கொடூரமான, நாசகரமான, வளர்ச்சியடைந்த வடிவமேயாகும்.
பாசிஸம் என்பது ஏகபோக மூலதனத்தின் மேல்தட்டு வட்டாரங்களின் மிகவும் பிற்போக்கான பகுதியினருடைய அப்பட்டமான, அதி கொடூரமான சர்வாதிகாரம் என்று விளக்குவது அவசியம். அவ்வாறு தான் உண்மையான பகைவனைத் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டி அவனுக்கெதிரான போராட்டத்தை நடத்த இயலுமாகும். அதன் பிறகே பாசிஸத்திற்கெதிராகப் பரந்துபட்ட இயக்கத்தை அணிதிரட்ட இயலு மாகும் . பாசிஸமானது, முதலாளித்துவத்தின் தத்துவார்த்தக் கருவி களைக் கைக்கொண்டு அவற்றைப் பெரும் ஆயுதங்களாக ஆக்கியுள்ளது. ஜெர்மனியில் ஹிட்லரின் பாசிசம், கம்யூனிச எதிர்ப்பையும் யூத எதிர்ப்பையும் தன் பிரதான அரசியல், தத்துவார்த்தக் கருவிகளாக ஆக்கிக் கொண்டது. இத்தாலிய பாசிசம் கம்யூனிச எதிர்ப்பையும் இனவெறியையும் தன் பிரதான கருவிகளாகப் பயன்படுத்தியது.
பாசிஸத்தால் முதலாளித்துவத்தின் முரண்பாடுகளைத் தீர்க்க முடியவில்லை. பல காலமாக அது அவற்றை மூடி மறைத்திருந்தது. ஆனால் ஏதாவதொரு வழியில் அவை தொடர்ந்து தலை தூக்க ஆரம்பித்தன. இவ்வாறு பாசிஸத்திற்கெதிரான போராட்டங்களுக்குப் புதிய வாய்ப்புக்கள் தோன்றின. போராட்டத்திற்கான சாத்தியப்பாட்டை முரண்பாடுகள் திறந்துவிட்டாலும் அணிதிரட்டிய வெகுஜனப் போராட்டத்தின் மூலம் மட்டுமே பாசிஸத்தைத் தோற்கடிக்க முடியும்.
காலக்கண்ணாடியூடு பாசிஸத்தின் பலமுகங்கள்
புதிதாக நடைபெற்ற போர்கள், பெரும் கொலனியாதிக்கச் சக்திகள் தங்கட்கிடையே உலகைப் பங்கிட்டுக் கொண்ட பிறகு, உலகை மீளவும் மறுபங்கிடுவதற்கான போர்களாயிருந்தன. இந் நிலையில், போட்டி என்பது, யாரும் கைப்பற்றாத பகுதிகளைக் கைப்பற்றுவதுடன் அல்லாமல், கொலனியாதிக்க சக்திகள் தங்களுக்கென ஒதுக்கி வைத்திருந்த ஏற்றுமதிச் சந்தைகள், முடிவு உற்பத்திப் பொருட்களுக்கான மூலவளங்கள், முதலீட்டு வாய்ப்புகள் போன்றவற்றுக்கு மாக இருந்தது. ‘உலக மகாயுத்தம்’ என அழைக்கப்பட்ட, உலகின் மிகப் பெரிய சூதாட்டக் களமாக, அவ்வளவு நாடுகள் பங்கேற்ற போர் வரலாற்றில் இதுவரை காணாத ஒன்றான இதன் பின்ணணியிலேயே பாசிஸத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இத்தாலியில் முசோலினியின் பாசிஸ ஆட்சியின்போது அதற்கெதிராகப் போராடியவர்களில் முக்கியமான ஒருவரான டோளியாட்டி ( Togliatti) தனது அனுபவங்களின் அடிப்படையில் பின்வரும் முடிவு களுக்கு வருகிறார்.
பாசிஸம் என்பது முதலாளித்துவ நாடுகளில் ஒரு அபாயமாக உள்ளது. ஆனால் அது தவிர்க்கமுடியாத வளர்ச்சிக் கட்டமல்ல.
பாசிஸத்தால் பிரச்சினைகளையும் முரண்பாடுகளையும் முதலாளித்துவ அடிப்படையில் தீர்க்க முடியாது. எனவே அடிப்படையான வர்க்க முரண்பாடும் வர்க்கப் போராட்டமும் தொடரும்.
பாசிஸம் அதிகாரத்திலிருக்கும் பொழுது, மிக மோசமான நிலைமைகளிலும் கூட ஒரு வெகுஜன இயக்கத்தை உருவாக்கி பாசிசத்தைத் தோற்கடிப்பதற்குப் போராடுவது சாத்தியமே.
பாசிஸமானது தன்னுடைய சொந்த உள் முரண்பாடுகளால் நொறுங்கி விழுந்துவிடாது.
பாசிஸத்தை உளவியல்முறையில் ஆராய்ந்த எரிக் ஃப்ரொம் ( (Eric Fromm) ) 1941ல் வெளியிட்ட தனது “விடுதலையிலிருந்து தப்புதல்” (Escape from Freedom ) என்ற தனது நூலில் முதலாளிய சமூகத்தின் விடுதலை உணர்வு மனிதனுக்குச் சில பொறுப்புகளையும் சுமத்துகிறது. முதலாளியத்தால் தனியராக்கப்படும் மனிதர் தனது தேவைகள், நலன்கள் ஆகியவற்றைத் தானாகவேதான் சாதித்துக் கொள்ள வேண்டும். சந்தையின் போட்டி, வெற்றிதோல்விகள் ஆகியவற்றை நேரடியாகத்தான் சந்தித்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு, விடுதலை மனிதரைத் தனிமனிதராக்கி விடுகிறது. தலைக்கு மேலும் காலுக்குக் கீழும் எதுவுமில்லாதது போன்ற நிலை அவருக்கு ஏற்படுகிறது. ஒரு விதமான பாதுகாப்பு உணர்வுக்கு மனிதர்கள் ஏங்குகின்றனர். தலைக்கு மேலே ஒரு பியூரர் (தலைவர்: இங்கு ஹிட்லரைக் குறிக்கும்), காலுக்குக் கீழே ஆரிய ஜெர்மானிய இனம், உடன் நடக்கவும் உரத்துக் கோஷமிடவும் ஒரு பெரிய கூட்டம், இவை யெல்லாம் மனிதருக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை, ஆதரவைத் தரு கின்றன. தனிமையிலிருந்து தப்பித்து விட்டதாக மனிதர் உணர் கின்றனர். இதுதான் பாசிஸம் என்று எரிக் ஃப்ரொம் எழுதினார்.
பாசிஸத்தை ஆய்வு செய்தவர்களில் முக்கியமானவர் ஹேர்பேட் மார்க்யூஸ் ( (Herbert Marcuse) இவர் 20ம் நூற்றாண்டின் முக்கியமான நவமார்க்சியராகக் கொள்ளப்படுபவர். பாசிசத்தின் தோற்றத்திற்கும் ஐரோப்பிய சமூகத்தில், குறிப்பாக ஜெர்மானிய வரலாற்றில் நீண்ட காலமாக வழக்கில் இருக்கும் உடன்பாட்டுக் கலாசாரத்திற்கும் ( affirmative culture) உட் தொடர்பு உள்ளதாக சொல்லும் மார்க்யூஸ் இடைக்கால ஜெர்மனியில் வழக்கிலிருந்த மேட்டுக்குடிக் கலாசாரத் தைத் தீவிரமாக மறுதலித்து ( (negate ) விமர்சிக்காமல் அக் கலாசாரத்துடன் உடன்பட்ட நிலையிலேயே நவீன ஜெர்மானிய கலாசாரம் கட்டமைக்கப்பட்டு வந்துள்ளது என்கிறார். எனவே அதனை மார்க்யூஸ் உடன்பாட்டுக் கலாசாரம் என்கிறார். கலாசார வாழ்வில், இடைக்கால மேட்டுக்குடிச் சமூக விழுமியங்கள் ஆன்மீகம் என்ற அடைமொழியுடன் தங்கிநிற்கின்றன. அவை சராசரி மனிதனின் அன்றாட வாழ்விலும் அவ் வாழவின் தேவைகளிலும் அக்கறையின்றி அவற்றை இழிநிலையில் வைத்துப் பார்க்கின்றன.
சமூக முரண்பாடுகளையும் மக்கள் பிரச்சினை களையும் இவ்வகைக் கலாசாரம் ஆன்மீகம் என்ற திரை போட்டு மறைக்கிறது. வாழ்க்கைத் தளத்தில் அல்லாது ஆன்மீகத் தளத்தில் மேற்குறித்த பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு இருப்பதாக அது பம்மாத்துச் செய்கிறது. உடல், உணர்ச்சிகள், சுய நலன்கள் ஆகியவற்றைக் கடந்த ஓர் உலகுக்குள் வருமாறு அது சகலரையும் அழைக்கிறது. சாதாரண மக்களுக்கு அது சாத்தியப் படாமற் போவதே சகல பிரச்சினைகளுக்கும் காரணம் என்றும் அது கூறுகிறது. ஆன்மீகக் கலாச்சாரம் அமைதியையும் நிம்மதியையும் சாந்தியையும் வழங்கும் என அது பிரச்சாரம் செய்கிறது. ஆன்மாவும் ஆன்மீகமும் உலகியல் ஈடுபாடற்ற, கட்டுப்பாடற்ற அதிகாரத்தின் புராதன வடிவங்கள். எந்த விதக் கேள்விக்கும் இடமின்றிச் சகலவற்றையும் ஆன்மா தனக்கு அடிமையாக்கும். பிரத்தியட்ச வாழ்க்கைக்கு அருகில் வரப் பிடிவாதமாக மறுத்து, வாழ்வால் ஒவ்வொரு கணமும் தீண்டப் படும் மனம், அறிவு ஆகியவற்றை ஏற்க மறுக்கும் ஆன்மீகத் தத்துவங்களைச் சிலாகித்துப் பாராட்டும் நாடுகளில் பாசிஸத்திற்கு வாய்ப்புண்டு என்றும் ஆன்மீகமயப்பட்ட சமூகத்தில் தனி மனிதர்கள் சர்வாதிகாரத்தை எளிதில் ஏற்றுக் கொள்ளுவர் என்றும் மார்க்யூஸ் கூறுவார். எனவே மனிதர்கள் தமது உணர்ச்சிகளைச் சமூக வரலாற்று யதார்த்தத்தோடும் சமூக மாற்ற நோக்கங்களோடும் இணைக்காமல் போகும் போது அவை பாசிஸமாக உருவெடுக்கும் என்று மார்க்யூஸ் குறிப்பிடுகிறார்.
பாசிஸம் இன்று புதிய முகங்களைத் தேடியபடி முதலாளித்துவ அதிகாரத்தின் ஒரு முகம் ஜனநாயகம் என்றால் அதன் மற்ற முகம் பாசிஸம் ஆகும். ஜனநாயக வரையறைக்குள் தன் சுரண்டலை மேற்கொள்ளவும் அதிகாரத்தைத் தொடரவும் இயலாமற் போகும்போது அடக்குமுறையை வெளிப்படையாகக் கையாளும் நிர்ப்பந்தம் முதலாளித்துவத்துக்கு ஏற்படுகிறது. அப்போது அது தனது ஜனநாயகப் போர்வையைத் தூக்கி எறிந்துவிட்டு நேரடியான முதலாளித்துவ இராணுவ சர்வாதிகாரமாக மாறுகிறது.
தீவிர தேசியவாத உணர்வுகளைத் தூண்டுதல், சர்வாதிகாரம், அடக்குமுறை, வலதுசாரித் தன்மை, ஜனநாயக உரிமை மறுப்பு போன்றன அதன் பொதுவான இயல்புகளாகும். முகங்கள் மாறினாலும் இப் பண்புகளை எல்லாச் சூழ்நிலைகளிலும் காணலாம். முக்கியமாக எல்லா வேளைகளிலும் பாசிஸ அரசு நேரடியாகவே முதலாளித்துவ அதிகாரத்தின் பிரதிநிதியாகச் செயற்படும். பாசிஸம் நாட்டுக்கு நாடு வேறுபட்ட வடிவங்களிலும் வேறுபட்ட வழிகள் மூலம் அதிகாரத்திற்கு வந்தாலும் இப் பண்புகள் மாறாமல் அப்படியே இருக்கும். இதைப் பழைய இத்தாலி, ஜேர்மனி, ஸ்பெயின் முதலாக 1960கள் முதல் 1980கள் வரை நீடித்த மூன்றாம் உலகின் பாசிஸவாத ஆட்சிகளைக் கொண்டிருந்த சிலி, இந்தோனீசியா, தென் கொரியா, ஆர்ஜென்டீனா போன்ற பல நாடுகளிலும் காணலாம். அவற்றையொத்த தன்மைகளையுடைய பல “ஜனநாயக” நாடுகளை இன்றைய உலக ஒழுங்கிற் காணலாம்.
இன்று பாசிஸம் ஜனநாயக முகமூடியை அணிந்தபடி வெற்றி கரமாக வலம் வருகிறது. கெடுபிடிப் போர்க் காலப்பகுதியிலும் அதைத் தொடர்ந்த ஒற்றை மைய உலக ஒழுங்கிலும் இயங்கிய பாசிஸ ஆட்சிகளுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவு எப்போதுமே இருந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் பொறுத்த வரையில் தனது தேவைகளுக்கு ஆதரவானதாக பாசிஸ ஆட்சி இருக்குமிடத்து அதற்கு ஆதரவு வழங்கப் பின்னிற்பதில்லை. அதே வேளை ஒரு நாட்டில் பாசிஸவாத ராணுவ ஆட்சியை உருவாக்கு வதன் மூலமே தனது நலன்களைக் காக்க முடியும் என்ற நிலையில் அவ்வாறன ஆட்சியை உருவாக்கவோ வழிநடத்தவோ ஒருபோதும் தயங்கியதில்லை. இன்றைய உலக ஒழுங்கிலும் இந் நிலையே தொடர்கிறது.
அரசியல் நெருக்கடி, பொருளாதார மந்தம், தலைமை இல்லாமை, முற்போக்கு சக்திகளிடையே ஐக்கியமின்மை ஆகியன மக்கள் நடுவே தோற்றுவிக்கும் விரக்தி உணர்வு பாசிஸவாதிகட்கு மிகவும் பயன்படுகிறது. இதை எவரையும் விடச் சரியாகப் பாசிஸவாதிகளே பயன் படுத்துகிறார்கள். ஒரு சமூகமாக ஒவ்வொரு சமூகமும் கவனத்தில் எடுக்கவேண்டிய அம்சம். அவ்வாறான பாசிஸப் போக்குக்கள் உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது ஒவ்வொரு சமூகத் தினதும் கடமை. தவறுமிடத்துச் சமூகமாகப் பாரிய அவலங்களைச் சந்திக்க வேண்டி வரும் என்பதை உறைக்கும்படி வரலாறு பல முறை உணர்த்தியிருக்கிறது.
ஐரோப்பிய பாசிஸம் பற்றிய அனுபவம் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் மக்கள் அது பற்றி மிகவும் விழிப்புடன் இருக்கின்றனர். ஆயினும் பொருளாதார நெருக்கடி, வேலையின்மை போன்ற பிரச்சினைகள் மோசமாகும்போது, பாசிஸ சக்திகள் தலையெடுக்கின்றன. குறிப்பாக ஜரோப்பாவில் உள்மறைந்திருந்த பாசிஸக் கூறுகள் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிராகவும் வந்தேறுகுடிகளுக்கு (குறிப்பாக ஆசியர்களுக்கு) எதிராகவும் வெளிப்பட்டதை அவதானிக்க முடியும்.
ஆனால் மூன்றாமுலக நாடுகளில் இந்த விழிப்புணர்வு இல்லை என்றே சொல்லலாம். கொலனித்துவ ஆட்சியின் தொடர்ச்சியாகப், பணிந்துபோகும் மனப்பாங்கு தலைமுறைகள் தாண்டியும் விதைக்கப் பட்டிருப்பதால் அடிப்படையான உரிமை மறுப்பும் அடக்குமுறையும் பாரிய எல்லையை எட்டும் வரை, அவை மக்களுக்குப் பிரச்சனைகளாகத் தெரிவதில்லை. அவை பிரச்சனைகளாகத் தெரியத் தொடங்கும் போது பாசிஸம் தன்னை உறுதியாக நிலைநிறுத்தியிருக்கும். இந் நிலையில் மிகச் சிறிய எதிர்ப்போ மாற்றுக் கருத்தோ சகித்துக் கொள்ளப்பட மாட்டாது.
நிறைவாக பாசிஸம் என்பது முதலாளிய சமூகத்தின் மிக உக்கிரமான வடிவம. ஆரம்பகால முதலாளியம் தனிமனித, சிறுமுதலாளியப் போட்டிகட்குத் தனக்குள் இடமளித்தது. ஆனால் பாசிஸமோ ஏகபோக நிதிமூலதன முதலாளியம். அது உள் முரண்பாடுகளைச் சகித்துக் கொள்ளாமல் ஒரு மொத்தத்துவ ( (totalitarian) ) சர்வாதிகார வடிவை எடுக்கிறது. உள் முரண்பாடுகளை அழிப்பதற்காகத் தேசம், இனம், நாடு என்பது போன்ற ஒட்டுமொத்த அடையாளங்களைப் பாசிஸம் பயன்படுத்திக் கொள்கிறது. சமூக முழுமையின் “ஒழுங்கைக்” காப்பதற்காகத் தனி மனித சுதந்திரம், உரிமைகள் ஆகியவற்றைப் பாசிஸம் ஒடுக்குகிறது. அறிவையும் சமூக இலட்சியங்களையும் பொய்யென அறிவித்து இன உணர்ச்சிகளை மட்டும் மனிதர்களின் மரபு என்றும் சொந்த இருப்பு என்றும் பாசிஸம் கூறுகிறது. கற்பனாவாத (utopian) உறுதி மொழிகள் சிலதை அது வழங்குகிறது. இனம், மதம், தேசியம் போன்ற ஒரு பேரடையாளத்தைப் பற்றி அது பேசுகிறது. பாசிஸம் இக் கூறுகளை ஒரு பண்பாட்டு இணைவாக்கத்துக்கு ( cultural synthesis) உட்படுத்து கிறது. இப் பண்பாட்டு இணைவாக்கம் பாசிஸக் கருத்தியலுக்கு வெகுசன ஆதரவைத் திரட்டவல்லதாக உள்ளது. இந்த ஆதரவு பாசிஸ ஆட்சி தன்னை நிலைநிறுத்தப் பெரிதும் உதவுகிறது.
எதிர்ப்புகள் பாசிஸத்தால் மிகக் கவனமாக் கட்டுப்படுத்தப்படுகின்றன. நெருக்கடிகளும் வேலை நிறுத்தங்களும் அரசுக்கு எதிரான போராட்டங்களும் தேசியத்தை, நாட்டைப் பலவீனப் படுத்துவதாக பாசிஸம் கூறுகிறது. எனவே பலம் கொண்ட நாடாக உருவாவதற்கு சர்வதேசப் பொருளாதார, ராணுவப் போட்டியில் நாடு வெற்றி பெறுவதற்கு இது அவசியம் என பாசிஸம் பிரச்சாரம் செய்கிறது. இதன் அடிப்படையில் பாசிஸம் இன்றும் உலகில் வெற்றிகரமாகக் கோலோச்சுகிறது. அதற்கெதிராக போராடுவது அவசியமாகிறது. அப் போராட்டம் பரந்துபட்ட மக்கள் ஜக்கியத்தின் மூலம் மட்டுமே இயலும்.
பயனுள்ள இடுகை.
மூன்றாம் உலகின் குறிப்பான நிலைமைகளில் fascism எப்படிச் செயற்பட்டது என்றும் “fascism” என்ற சொல் எலாவிதமான அதிகாரப் போக்குக்களையும் குறிப்பிடப் பாவிக்கப் படுதல் பற்றியும் ஒரு விளக்கம் எதிர்காலத்திலே வரும் என நம்புகிறேன்.
மாமிசம் உண்பவனைக் கூட பாசிட் என்று திட்டுகிற அரசியல் கோமாளிகள் வாழ்கின்ற காலப்பகுதியில் எழுதப்பட்ட மிகத் தெளிவான ஆய்வுக்கட்டுரை. ஆங்கிலம் உள்ளிட்ட வேற்று மொழிகளில் கூட இவ்வளவு தெளிவான ஆய்வு ஏதும் வெளிவந்ததாக நான் அறியவில்லை.
இந்தக் கட்டுரை இலங்கையின் இன்றைய நிலவரத்தை தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. இதிலே கூறப்பட்டுள்ள பல விடயங்களுடன் இலங்கை மிகவும் ஒத்துப்போகிறது. நாவலனின் கருத்துடன் நான் முழுமையாக ஒத்துப் போகிறேன். மிக அருமையான பதிவு. இலகுவானதும் தெளிவானதுமான பதிவு என்பது மேலதிக சிறப்பு. அஸ்வத்தாமாவின் வேறு சில பதிவுகளையும் இனியொருவில் பார்த்திருக்கிறேன். மிகவும் ஆழமான அரசியல் கோட்பாட்டியலை இலகுபடுத்தி விளக்குகிற பாணி கண்டு வியந்ததுண்டு. தமிழில் இவ்வகையான ஆக்கங்கள் – அதுவும் குறிப்பாக அரசியல் கோட்பாட்டியலை மையப்படுத்திய – மிகவும் குறைவு.
இது போன்ற ஆக்கங்களை இவர் தொடர்ந்து எழுதவேண்டும். தொடர்ச்சியாக எழுதவேண்டும். (இவரது பதிவுகளிடையே நீண்ட இடைவெளியை அவதானித்திருக்கிறேன்). இக்கட்டுரைகள் சிறுநூலாகவாவது வெளிவரவேண்டும். ஏனெனில் கொழும்புக்கு வெளியில் இருப்பவர்களுக்கு (குறிப்பாக வடக்கு கிழக்கு) இணைய வசதிகள் குறைவென்பதால் இக்கட்டுரை செல்லவேண்டிய பலரைச் சென்றடைவதில்லை. எனவே சிறுபிரசுரமாகவேனும் இப்படியான கோட்பாட்டு ரீதியான அரசியல் அடிப்படைகளைப் பேசுகிற கட்டுரைகள் வெளியிடப்படவேண்டும். அப்போதுதான் மைய நீரோட்ட அரசியலில் இருந்து விலகிய மாற்று அரசியலைக் கட்டியெழுப்புவது இலகுவாக இருக்கும்.
Eternal Fascism:
Fourteen Ways of Looking at a Blackshirt
http://www.themodernword.com/eco/eco_blackshirt.html
//மாமிசம் உண்பவனைக் கூட பாசிட் என்று திட்டுகிற அரசியல் கோமாளிகள் வாழ்கின்ற காலப்பகுதியில் எழுதப்பட்ட மிகத் தெளிவான ஆய்வுக்கட்டுரை. ஆங்கிலம் உள்ளிட்ட வேற்று மொழிகளில் கூட இவ்வளவு தெளிவான ஆய்வு ஏதும் வெளிவந்ததாக நான் அறியவில்லை.// 🙂
கற்றது கை அளவு …..கல்லாதது உலகளவு…இதுதான் தமிழர் போராட்டதிலும்நடந்தது. :-#
எல்லா பகட்டு வாதங்களையும் மயக்கச் சொல்களையும் மீறி உள்ளேயிருக்கிற கருத்தியலை ஆராய்ந்தறிய வேண்டும் என்கிற அறிவ அடைய கட்டுரை வழிகாட்டுகிறது. நமக்கு முக்கியமான இரு விடயங்கள் இவையிரண்டும்.
பாசிஸப் போக்குக்கள் உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது ஒவ்வொரு சமூகத் தினதும் கடமை. தவறுமிடத்துச் சமூகமாகப் பாரிய அவலங்களைச் சந்திக்க வேண்டி வரும் என்பதை உறைக்கும்படி வரலாறு பல முறை உணர்த்தியிருக்கிறது.
…விளக்குவது அவசியம். அவ்வாறு தான் உண்மையான பகைவனைத் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டி அவனுக்கெதிரான போராட்டத்தை நடத்த இயலுமாகும். அதன் பிறகே பாசிஸத்திற்கெதிராகப் பரந்துபட்ட இயக்கத்தை அணிதிரட்ட இயலு மாகும் .
. டோளியாட்டி ( வுழபடயைவவi) தனது அனுபவங்கள ; தற்காலத்திற்கும் பொருந்துமா ?
இவ்விடயம் தொடர்பாக எங்களுடைய அறிவியல் போதாமைகளை ஏற்றுக்கொள்வதுடன் தற்கால நிலைமைகள் தொடர்பாக குறிப்பாக ஆசியா – இந்தியத் துணகை;கண்ட நிலைமைகள் தொடர்பான விளக்கங்களை எதாpபார்க்கிறோம்
பாஸிசம் முதாலித்துவம் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே!.முதாலித்துவம் நெருக்கடிக்கு உள்ளாகும் போது பாஸிசத்தைக் கொண்டு வருகிறது. முதாலித்துவத்தின்
சுயரூபத்தை பார்க்க வேண்டு மென்றால் கார்ல்மாக்ஸின் மூலதனத்தை பொறுமையுடன்
படித்தாக வேண்டும்.அதை முழுமையாக படிப்பதற்கு வாய்ப்பு கிட்டாதவர்களுக்கு டி.ஜே.டனிங்கின் உதாரணத்தை தருகிறார்…..
மூலதனம் இலாபம் இன்மையோ அல்லது சொற்ப லாபம் என்ற நிலையை வெறுத்து ஒதுக்கிறது.போதுமான லாபம் கிடைத்தால் மூலதனம் துணிவு பெறுகிறது.மூலதனம் சுமார் பத்துவீதம் கிடைக்குமென்றால் அது எங்கு வேண்டுமானாலும் முதலீடு செய்யப்படுவது உறுதி.20 சதவீதம் கிடைக்குமென்றால் அதன் ஆர்வம் தூண்டப் படும்.
50 சதவீதம் கிடைக்குமென்றால் வலியவே திமிராக நடந்து கொள்ளும்.100 சதவீதம் கிடைக்மென்றால் எல்லா மனித நீதிகளையும் துவம்சம் செய்யத் தயாராகிவிடும்: 300 சதவீத ஆதாயம் கிடக்குமென்றால் குறுகுறுப்பே இல்லாமல் எந்த குற்றமும் செய்யும.
அதன் உடமையாளர் தூக்கிலிடப்படும் அபாயம் இருந்தாலும் எந்த நச்சு பரீச்சையிலும்
இறங்கிவிடும்.
இது 150 வருடங்களுக்கு முன்பு முதாலிததுவத்தை பற்றி வரையப் பட்ட வர்ணனையை
கடந்த இருமாயுத்தங்களும் யாருக்காக நடத்துப் பட்டன.இரண்டாம் உலகமாக யுத்தத்தில் மாத்திரம் எழுபது மில்லியன்மக்கள் மறுஉலகிற்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவர்கள்களால் உற்பத்தி செய்ய பட்ட
கருவிகளாலே அவர்களின் வர்க்கசகோதரர்கள் அழிவைத் தேடிக் கொண்டது தான்.இதுவே முதாலித்துவமும் அதன் நெருக்கடியால் தோற்றிவிக்க படும் பாஸிசமும்.
2010-ல் பாஸிசத்தின் நுளைவாயிலாக பிரான்சில் சிந்துரோம பலாத்காரமாக நாடுகடத்தைப்பட்டதையும் ஐரோப்பிய-அமெரிக்க மூலதனத்தின் கூட்டு முயற்சியில்
முஸ்லீம் துவேசத்தையும் இன்று தரிசனம் செய்து கொண்டிருக்கிறோம்.
சந்திரன் ராஜா முதலில் வகுப்பெடுப்பதை விட்டுப் பாசிசம் குறித்து மார்க்சே எட்டதா எல்லைகளைக் தொட்டுவிட்ட வேறுபலரிடம் போங்கோ.சும்மா மார்க்ஸ்-ஏங்கில்ஸ் என்று இன்றைய அனைத்துக்கும் கோலமிடாமல் வேறு பலரையும் பாருங்கோ.அங்கே>அவர்கள் காலத்தில் நடைபெறதா விரோதங்கள் குறித்து மேலும் பல தகவல்களை>உம் பேட்டோ எக்கோ முதல் பலர் தருவினம்….
நீங்கள் சுத்த போர் அடிக்கும் பேர்வழி.உங்களுக்கு மார்க்சியமும் புரியவில்லை-முதலாளியமும் புரியவில்லை.சுத்த தேவாங்கு மாதிரி பின்னூட்டத்தில் தொங்கி நிற்கமால் ஏதாவது உருப்படியா ஒரு கட்டுரையை எழுதித் துலையுமென்! :- )
அல்லது மகிந்தாவுக்கு ஒரு காவடியெடுத்துச் சுத்துமன்! சரியானவொரு கழுத்தறுப் பேர்வழி
ஐ சே நீர்! 😉
பாசிஸத்தைப் பற்றி பேசுவதாக இருந்தால் பாட்டாளிவர்க்கத்தைப்
பற்றி பேசி ஆகவேண்டும். பாட்டாளிவர்கத்தை பற்றி பேசுவதாக இருந்தால் முதலாளிக்கும்-பாட்டாளிகளும் உள்ள உறவு பற்றி பேசி
ஆகவேண்டும். இந்த உறவைப் பற்றி ஆய்வு செய்வது மாக்ஸியம் மட்டுமே! இதை விளங்கிக் கொள்வதால் மட்டுமே இலங்கை பாட்டாளி
மக்கள் தாம் போகும் பாதையை வகுத்துக் கொள்ள முடியும்.
பொண்ணு தியாகினி! உங்கள் காறித்துப்பல்கள் பலதை கடந்து வந்தவன் நான்.
முப்பதுவருடங்கள் எந்த இஸத்தை நம்பி போராடி இறுதியில் முள்ளி
வாய்கால்லில் சேறும்-சந்தனமுமாகி கோணவணத்துடன் குப்பற விழுந்தீர்கள் என்பதை எண்ணிப் பார்த்தால் உங்கள் அலட்சிய துப்பல்
உங்கள் முகத்தில் விழுவதைக் கண்டுகொள்வீர்கள்.
மகிந்தாராஜபக்சாவை ஒரு பாட்டாளியாக ஒரு தொழிலாளியாக இலங்கைமக்களின்-தமிழ்மக்களின் அடக்கியொடுக்கப்பட்ட பிரதிநிதியாக நின்று உங்கள் விமர்சனங்களை வையுங்கள் அதற்கு அர்த்தமுண்டு.அதைவிட்டு தமிழ்மக்களின் பிற்போக்குதனத்தின் பிரதி
நிதியாக-புலியாக-புலத்தில் திண்டுகொழுப்பேறிய மண்டுவன்களாக
மகிந்தாவுக்கு மேல் விமர்சனங்களை வைப்பீர்களே யானால் இதில்
யாருக்கு என்ன சுகம்?.ஒரு புலம்பல் மட்டுமே!.
தியாகினியின் நிந்தனையான தாக்குதல் ஆரோக்கியமான விவாதத்துக்கு உதவாது.
தான் சொல்ல நினைத்ததை மேலும் பண்பாகச் சொல்லும் ஆற்றல் அவரிடம் உண்டு என நம்புகிறேன்.
செய்யக் கூடியவை பலவுண்டு.
தனி மனிதர்களக அல்ல. ஒரு சமூகத்தின் ஏகப் பெரும்பான்மையாக, அமைப்புக்களாக, இயக்கங்களாக.
முதலில் யார் நம்மை எமாற்றினார்களோ அவர்கள் பற்றி மக்களிடம் திரும்பத் திரும்ப எச்சரிப்பது. யாரும் நம்மைப் பயன்படுத்துவது பற்றி எச்சரிக்கையாயிருப்பது.
நம்முடைய நிலையில் உள்ள உலகின் அனைத்து மக்களிடனும் இணைவது. அநீதிக்கெதிராக எல்லாவிடத்தும் குரல் கொடுப்பது.
இவற்றைச் செய்யத்த் தவறியதாலேயே தமிழர் தனிமைப்பட நேர்ந்தது.
இந்தக் களத்தைநண்பர்களை யும் எதிரிகளையும் பிரித்தறியவும் நேச சக்திகளை அடையாளம் காணவுமான ஒரு சந்திப்பிடமாகப் பயன்படுத்துவோமே.
நாம் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்கலாம்.
நன்றி உங்களின் நேர்மையான பதிலுக்கு.
அத்துடன் இந்திய அமெரிக்க சீன அதிகாரப் போட்டியால் சிங்கள இனவெறியரின் தமிழின அழிப்பையும் கண்கூடாகப் பார்க்கிறோம்.
சரி, அதைப் பற்றி நாமென்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்.
இவர்களின் நிகழ்சி நிரலை மீறி உண்மையில் எம்மாலொன்றுமே செய்யமுடியாது. இந்தப் பதிலுக்கு நீங்கள் கேட்தலாம் இங்கு எழுதிக் கிழிப்பதைவிட என்ன பிரயோசனம் என. இல்லையென்றால் நீங்கள் சொல்லுங்கள், எம்மால் என்ன செய்யமுடியுமென்று?
பாசிசம் பற்றிய தெளிவை இக்கட்டுரை வாயிலாக நன்றாக விளங்கிக் கொண்டேன். ஒரு ஊடகவியலாளன் என்ற வகையில் இனியொருவில் வெளிவரும் கட்டுரைகள் என் அறிவுத் தாகத்துக்கு பெரு விருந்தாய் அமைவதுண்டு. அந்த வகையில் இதுவும் ஒன்று.
தான் நினைத்தபடியெல்லாம் எழுதிக் கிறுக்கி விட்டு அதை ஊடகவியல் என்று சொல்பவர்களுக்கு மத்தியில் இப்படியான ஒரு இணையத்தளமும் கட்டுரையாளர்களும் இருப்பது எமது அதிர்ஷ்டமே.
நன்றி… பாராட்டுக்கள்.
சிறந்த பதிவு – பாராட்டுகள்
ஏகபோகத்தை எதிிர்க்கின்ற சுதேசியமும் —-உள் முரண்பாடுகளைச் சகித்துக் கொள்ளாமல் ஒரு மொத்தத்துவ ( (totalitarian) ) சர்வாதிகார வடிவை எடுக்கிறது. உள் முரண்பாடுகளை அழிப்பதற்காகத் தேசம், இனம், நாடு என்பது போன்ற ஒட்டுமொத்த அடையாளங்களைப் பாசிஸம் பயன்படுத்திக் கொள்கிறது—- வரையறுத்துக் கொள்வது சரியானதா?????
ஏகபோகத்தை எதிிர்க்கின்ற சுதேசியமும் —-உள் முரண்பாடுகளைச் சகித்துக் கொள்ளாமல் ஒரு மொத்தத்துவ ( (totalitarian) ) சர்வாதிகார வடிவை எடுக்கிறது. உள் முரண்பாடுகளை அழிப்பதற்காகத் தேசம், இனம், நாடு என்பது போன்ற ஒட்டுமொத்த அடையாளங்களைப் பாசிஸம் பயன்படுத்திக் கொள்கிறது—- வரையறுத்துக் கொள்வது சரியானதா?????