பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் லாகூரிலுள்ள மாடல் டவுன் மசூதி மற்றும் கார்ஹி சாஹு மசூதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் தொழுகை நடந்துகொண்டிருந்தது. இரு மசூதிகளிலும் தலா 1,500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர். இதில் பெண்கள், குழந்தைகளும் அடங்குவர்.பாகிஸ்தான் நேரப்படி பிற்பகல் 1.45 மணியளவில் இரு மசூதிகளுக்குள்ளும் ஆயுததாரிகள் புகுந்தனர். மசூதிகளின் வாயிலில் நின்றுகொண்டிருந்த போலீஸôர், பாதுகாப்பு அதிகாரிகளை சுட்டுத் தள்ளிவிட்டு உள்ளே புகுந்த பயங்கரவாதிகள், தங்களிடமிருந்த அதிநவீன துப்பாக்கிகளால் கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளினர். மேலும் தங்களிடமிருந்த கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதனால் இரு மசூதிகளிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பயங்கரவாதிகள் தாக்குதலையடுத்து தொழுகை நடத்திக் கொண்டிருந்த முஸ்லிம்கள் அங்கிருந்த அறைகளுக்குள் சென்று தாளிட்டுக் கொண்டனர். ஆனால் சிலரை ஆயுததாரிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டனர். சம்பவம் அறிந்ததும் லாகூர் போலீஸôரும், பாகிஸ்தான் துணை ராணுவப் படையினரும் மசூதிகளை சுற்றி வளைத்தனர். தீவீரவாதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த துப்பாக்கிச் சண்டை பிற்பகல் 4 மணிக்கு முடிவுக்கு வந்தது. பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த முஸ்லிம்களையும் போலீசார் மீட்டனர்.