மனித உரிமைக் களம் என்ற அமைப்பின் சார்பில் திருநெல்வேலியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களிடையே தீண்டாமை குறித்து நடத்தப்பட்ட பொது விசாரணையில், கடந்த இரண்டாண்டுகளில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த 1,680 மாணவ-மாணவியர் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தியிருக்கும் உண்மை அம்பலமாகியிருக்கிறது.
இந்த மாணவர்கள் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே கைவிட்டு ஓடியதற்குப் படிப்பின் மீது நாட்டமின்மையோ, ஏழ்மையோ காரணமாக அமையவில்லை. பள்ளிக்கூடத்தில் இம்மாணவர்களிடம் காட்டப்பட்ட சாதிப் பாகுபாடும் தீண்டாமைக் கொடுமையும்தான் முதன்மையான காரணமாக உள்ளது.
‘‘நான் வீட்டுப் பாடம் எழுதவில்லை; அதற்கு ஹெட்மாஸ்டர், ‘உன் அப்பா கக்கூஸ் அள்ளுறவன்தானே, பின்னே உனக்கு மட்டும் எப்படி படிப்பு வரும்’ எனச் சாதிவெறியோடு கிண்டல் செதார். தினம் தினம் சாதியைச் சோல்லித் திட்டி யதால் பள்ளிக்கூடமே வெறுத்துவிட்டது. இப்பொழுது நான் மதுரையில் லாரி கிளீனராக இருக்கிறேன்” என தேவர்குளத்தைச் சேர்ந்த 14 வயதான அருந்ததியர் சாதியைச் சேர்ந்த அஜித்குமார் அப்பொதுவிசாரணையில் சாட்சியம் அளித்திருக்கிறான்.
பள்ளிகளில் நிலவும் தீண்டாமையைத் தனது பார்வையைப் பறிகொடுத்துத் தமிழகத்திற்கு எடுத்துக் காட்டினாள், தனம் என்ற சிறுமி. அச்சம்பவம் நடந்து பத்தாண்டுகளுக்கு மேலாகிவிட்ட பின்னும் தமிழகப் பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் இழிவுபடுத்தப்படுவது எவ்வித உறுத்தலும் அச்சமுமின்றித் திமிரோடு தொடர்ந்து கொண்டிருப்பதை இப்பொது விசாரணை அம்பலப்படுத்திக் காட்டியிருக்கிறது. இவ்வன்கொடுமையைத் தடுக்க முயலாமல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு, பள்ளிப் பாடப் புத்தகங்களில் தீண்டாமை மனிதநேயமற்ற செயல்-பெருங்குற்றம்” என அச்சடித்துப் போதிக்க மட்டும் தவறுவதில்லை. இம்மோசடியை, பகல்வேடத்தை இன்னுமா நாம் பொறுத்துக் கொள்ளுவது?
நன்றி : புதிய ஜனநாயகம்