தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கல்வி உரிமை மாநிலப்பட்டியலில் இருந்து மத்தியப் பட்டியலுக்குச் சென்ற பின்னர். பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் உரிமையை மத்திய அரசே எடுத்துக் கொண்டது. இதை வைத்து ஆர்.எஸ்.எஸ் இந்தியா முழுக்க இந்துத்துவ சிந்தனையாளர்களை பல்கலைக்கழகங்களில் நியமித்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் கடும் சர்ச்சைகள் நிலவி வருகிறது.
மேற்குவங்கம், கேரளம், தமிழ்நாடு என பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் இது தொடர்பாக மாநில ஆளுநர்களுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையில் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிர அரசு துணைவேந்தரை நியமிக்கும் உரிமை எங்களிடமே உள்ளது என இணைவேந்தர் என்ற பதவியை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே மணி சட்டப்பேரவையில் பேசினார்.
அதுகுறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியபோது, இதுகுறித்து சட்ட நிபுணர்களுடன் தமிழக அரசு ஆலோசித்து வருவதாகவும், விரைவில் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மார்ச் மாதம் நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டு சட்ட திருத்த மசோதாவை தமிழக அரசு நிறைவேற்றும் என்று தெரிவித்துள்ளார்.