பலாலி ஆசிரியர் கலாசாலைக் காணியும் கட்டடத் தொகுதியும் உள்ளடங்கிய வளாகம் கல்வி அமைச்சினால் பாதுகாப்பு அமைச்சுக்குக் கையளிக்கப்பட்டுள்ளது. இது வரை காலமும் கல்வி அமைச்சின் பொறுப்பில் இருந்து வந்த 54 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட வளாகத்தைப் பாதுகாப்புத் தரப்பினர் எதிர் காலத்தில் பயன்படுத்தவுள்ளனர்.
இதேவேளை பலாலி ஆசிரியர் கலாசாலையை பாதுகாப்பு அமைச்சு கையேற்பதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டித்திருக்கிறது. கலாசாலையை மீண்டும் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் இல்லாவிட்டால் எமது கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய ரீதியில் கல்வியியலாளர்களை ஒன்றுதிரட்டிப் போராடுவோம் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜனாதிபதிக்கும் கல்வி அமைச்சருக்கும் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் இந்த முடிவு உடன் கைவிடப்பட வேண்டும். கலாசாலையை மீண்டும் பலாலியில் இயங்கவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
இலங்கையில் மகிந்த அரசின் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியே இந்த நடவடிக்கையும். இது குறித்து புலம் பெயர் நாடுகளில் வெற்று அறிக்கைகளுக்கு அப்பால் இலன்ங்கை அரசிற்கு எதிரான போராட்டங்களை ஆசிரியர் சங்கத்திற்கு ஆதரவாக ஒழுங்குபடுத்த்த வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது.