இலங்கை உடனான வர்த்தகம், அடுத்த வருடத்தில் மூன்று மடங்காக அதிகரிக்குமென்கிறார் கொழும்பிற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் வர்த்தகபிரிவின் உயரதிகாரி மைக்கல்.ஜே.டெலானி.
ஜி.எஸ்.பி [GSP ] வரிச்சலுகை நீடிப்பு குறித்து மீளாய்வு செய்வதற்காக இவரின் விஜயம் அமைந்துள்ளது. கடந்த வருடம் இவ் வரிச்சலுகை ஊடாக அமெரிக்கச் சந்தைக்கான ஆடை ஏற்றுமதி 1590 மில்லியன் அமெரிக்க டொலர்கள்.
வேண்டத்தகாத மனித உரிமை விவாகரம் பற்றிப் பேசி , ஐரோப்பா ஒன்றியமானது ஜி.எஸ்.பீ பிளஸ் வரிச்சலுகையை நிறுத்தியது போன்று ,அமெரிக்காவும் நிறுத்திவிடுமோவென இலங்கை அரசு அச்சமடைந்திருந்த நிலையில், டெலானியின் நம்பிக்கைதரும் பேச்சு அரசுக்கு ஆறுதல் அளித்திருக்கும்.
வழமை போன்று, அமெரிக்க தொழில் சங்கங்கள் ,இலங்கையிலுள்ள தொழிலாளர் சட்டம் பற்றி கவலை கொள்கின்றன என்கிற தகவலையும் அவர் தெரிவித்திருந்தார். ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச் சலுகை இழக்கப்பட்டதால், சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள பல ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. அமெரிக்காவும் இதை நிறுத்தினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தொழில் வாய்ப்பை இழப்பர்.
ஆகவே போர்க்குற்றச்சாட்டையும், ஏற்றுமதி வர்த்தகத்தையும் தனது துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தும் அமெரிக்கா, மார்ச்சில் மேற்கொண்ட ஐ.நா.தீர்மானத்தின் பின்னர் சிறிதளவு நெகிழ்வுப் போக்கினை இலங்கை விவகாரத்தில் மேற்கொள்வதைக் காணலாம்.
இலங்கையை தனது பிராந்திய நட்பு வட்டத்துள் கொண்டுவர ,சகல விதமான அழுத்தங்களையும் பிரயோகிக்குமே தவிர, ஈரானில் மேற்கொள்வது போன்று, கடும்போக்கு தடை நகர்வினை அமெரிக்கா கடைப் பிடிக்காது.
உலகளாவிய ரீதியில் நிலைகொண்டுள்ள தமது படைபலத்தின் 60 சதவீதமானவற்றை ஆசியா-பசிபிக் பிராந்தியத்தை நோக்கி நகர்த்தப்போவதாக அண்மையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியிருந்தார். அதனை அமெரிக்க பாதுகாப்புச் செயலர் லியோன் பனேட்டாவும் சங்கரிலா மாநாட்டில் உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில், சீனாவின் கடலாதிக்கம், இந்துசமுத்திரப் பிராந்தியம் வரை விரிவடையாமல் தடுக்கும் வகையில் தனது வியூகங்களை அமைக்கும் பணியில் அமெரிக்கா ஈடுபடுவதை காணலாம். சரத் பொன்சேகாவின் ஊடாக ஆட்சி மாற்றம் ஒன்றினை ஏற்படுத்தமுடியாவிட்டால், போர்க்குற்ற அழுத்தங்களினூடாக இணக்கப்பாட்டினை ஏற்படுத்தலாமென்கிற அடுத்த நகர்வின் முதற்படியாக மைக்கல் ஜே.டெலானியின் விஜயம் அமைவதைக் காணலாம்.
அவமானகரமான நாடுகள் பட்டியலில் இருந்து இலங்கையை பாண் கி மூன் நீக்கிய விவகாரத்தின் பின்னணியில் மேற்குலகின் வகிபாகம் நிற்சயம் இருக்கும். அத்தோடு ஈரானோடு எண்ணெய் வர்த்தகம் செய்யலாம் என்கிற ‘சலுகை’ அறிவிப்பும், இலங்கை குறித்தான அமெரிக்காவின் மென்போக்கு நகர்வினை உறுதிப்படுத்துகின்றன.
இவைதவிர, திருமலைத் துறைமுகத்தைச் சூழவுள்ள பகுதியில், சிறிலங்கா கேற்வே இன்டஸ் ரீஸ் பிரைவேட் லிமிடட் என்கிற நிறுவனம் ,கனரக கைத்தொழில் மையமொன்றினை நிறுவ, 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்கிறது. இந்த வணிகக் கூட்டமைப்பில் பிரேசில்,அவுஸ்திரேலியா , ஜப்பான், சீனா இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் பல்தேசிய நிறுவனங்கள் அங்கம் வகிக்கின்றன.
போரில் இணைந்த கூட்டு, முதலீட்டிலும் இணைகின்றன. இதற்கான ஒப்பந்தம் நேற்று [வியாழன்] கைச்சாத்திடப்பட்டது.
ஆகவே வல்லரசாளர்களின் நலன் வேறு பாதையில் இருக்க, சில புலம் பெயர் அமைப்புக்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மேற்குலகின் ஆதரவோடு சுயநிர்ணய உரிமையை வென்று விடலாமென காத்திருக்கின்றன.
நவதாராண்மைவாத உலகமயமாக்களில் , சந்தைகளை பங்கிடுதலும், கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த மையங்களை ஆக்கிரமிப்பதுமே முக்கிய இடத்தை பிடிக்கின்றது. விடுதலைப்புலிகளுக்கும் ,ரணில் அரசுக்குமிடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டவுடன் , இந்தியா செய்த முதல் வேலை, திருமலை சீனன்குடா எண்ணெய் சேமிப்புக் குதங்களை 33 வருடக் குத்தகைக்கு எடுத்தது.
போர் முடிவடைந்ததும் இவர்கள் ஓடிவருவது புதிய வர்த்தக மற்றும் உட்கட்டுமான நிர்மாண ஒப்பந்தங்களை பெறுவதற்கே.
யாழ்.குடாவில் நடைபெறும் இராணுவத்தின் நில ஆக்கிரமிப்புப் பற்றி இவர்களுக்கு கவலை இல்லை.
அதற்கெதிராக அவர்கள் போராட மாட்டார்கள். ராபர்ட் பிளேக்குடன் பேசினாலும் அது நிறுத்தப்படமாட்டாது. மக்கள்தான் அதற்கப் போராட வேண்டும். கடிதம் அனுப்புவது, எம்பிமாரை அணுகுவது ,நாடாளுமன்றத்தில் பேசுவது எல்லாம் ஓட்டைக் குடத்தில் நீர் ஊற்றுவது போலாகும்.
Sri Lanka is indeed Singapore. Where worlds meet.