பயங்கரவாதிகளை அரசியல் கைதிகளாக வர்ப்பணிப்பது முட்டாள்தனமான நகைச்சுவையாகவே கருதப்பட வேண்டுமென சிறைச்சாலைகள் அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார்.
ஈழப்போரின் போது பல்வேறு படுகொலைகளையும் நாச வேகைளையும் மேற்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் பயங்கரவாதிகளை இல்லாதொழித்திருக்காவிட்டால் இன்னமும் படுகொலைகளையும், சிறுவர் போராளிகளை படையில் இணைத்து கொள்ளும் நடவடிக்கைளும் தொடர்ந்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்திற்கான பல்கலைக்கழக பேராசிரியர் அமைப்பின் உறுப்பினர் குமார் டேவிட்டின் கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்கவும், புலம் பெயர் தமிழர்களை கிளர்ச்சியடைச் செய்யும் நோக்கிலும் இவ்வாறான அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது அரசியல் கைதிகளாக வர்ணிக்கப்படும் நபர்கள் கடந்த காலங்களில் எவ்வாறு செயற்பட்டார்கள் என்பதனை வடக்கு கிழக்கு வாழ் அப்பாவி தமிழ் மக்களிடம் கேட்டால் அறிந்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
சிறைக் கைதிகள் மனிதாபிமான முறையில் நடத்தப்படுவதாகவும் சில எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.