ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று ஐ. ம. சு. முன்னணி அர சாங்கம் வெற்றி நடை போடுகின்றது. மஹிந்த ராஜபக்ஷ என்ற நாமம் இன்றும் உலகம் முழுவதும் பரவிவிட்டது. உலகின் முன்னணி பத்திரிகைகள் எல்லாம் அவரை பாராட்டுகின்றன. ஆசியாவின் சிங்கம் இலங்கை ஜனாதிபதியென புகழ்பாடுகின்றன. பயங்கரவாதத்தை தோற்கடிப்பதில் ஏனைய நாடுகளுக்கு இலங்கை ஜனாதிபதி சிறந்த உதாரணமாவார். அமெரிக்காவே ஜனாதிபதியை பாராட்டுகின்றது.இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாண சபை வேட்பாளர் துமிந்த சில்வா தெரிவித்தார். கொழும்பு ஜிந்துப்பிட்டி மைலன் தியேட்டர் சந்தியில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் முன்னிலையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு ஒரு சில வார்த்தைகளை தமிழில் பேசிய அவர் மேலும் தெரிவித்ததாவது:-
இன்று இலங்கையில் மூவின மக்கள் மத்தியிலும் இன, மத, பேதம் இல்லை. நாம் எல்லோருமே சகோதரர்கள். எமது மத்தியில் இனவாதிகளால் பிளவுகளை உருவாக்க முடியாது. ஐந்து வருடங்களுக்கு முன்னர் நான் அரசியலுக்கு வந்தபோது, மக்கள் எனக்கு பெருவாரியான விருப்பு வாக்குகளை அளித்து முதலாவதாக தெரிவு செய்தார்கள்.
இப்பகுதி மக்களுக்கு சேவை செய்ய முடிந்தது எனது பாக்கியம். ஐ. ம. சு. மு. எப்போதோ வென்றுவிட்டது. இந்த தேர்தலிலும் வெற்றி நிச்சயம். ஐ. தே. க. தனது ஆட்சியின் போது மக்கள் மத்தியில் குள்ள நரித்தனமாக பிளவையும் பேதத்தையும் ஏற்படுத்தியது. நான் இன, மத பேதமில்லாமல் கடந்த 5 வருடங்களாக மக்களுக்கு சிறந்த சேவையை ஆற்றியதன் காரணமாகவே இன்று இந்தளவு மக்கள் கூட்டம் இங்கு கூடியுள்ளது.
இன்று ஐ. தே. க. சிறிகொத்தாவில் முடங்கிவிட்டது. இன்று ரணில் உட்பட எவருமே வெளியில் தலை காட்டுவது இல்லை. இந்த தேர்தல் பந்தயத்தில் என்னு டன் போட்டிபோட ஒருவரும் இல்லை. நான் தனி ஒருவ னாக முன்நோக்கி போய்க் கொண்டிருக்கின்றேன். திரும்பி பார்த்தால் எனது பின்னால் யாருமே இல்லை. அவர்களில் யாருக்கும் மக்களை சந்திக்கும் தைரியமில்லை. மக்களை அவர்கள் சந்தித்ததும் இல்லை. நான் மக்களுடன் நெருங்கிப் பழகியதன் காரணமாகவே மக்கள் என்னை அரவணைக்கின்றனர்.
கொழும்பு மாவட்ட மக்களுக்கு ஐ. தே. க. என்னதான் செய்தது? ஐ. தே. க.வுக்கு மக்களுக்கு தேசவை செய்யக் கூடிய எவ்வித திட்டங்களும் இல்லை. ஜே. வி. பி.யை எடுத்துக் கொண்டால் ஐ. தே. க. வை விடமோசமான நிலையை அடைந்துவிட்டது. அக்கட்சியின் சின்னம் மணி.
ஆனால் அந்த மணியை அடிக்கக் கூட இன்று அங்கு ஆள் இல்லை. அவர்கள் இப்பகுதிக்கு வந்தால் அடிபட்டுத்தான் போவார்கள். மக்களுக்கு சேவை செய்ய எமக்கு வாகனம் எதுவும் வேண்டாம் என்றார்கள். எம். பி.மார்களுக்குரிய சம்பளம் வாங்கமாட்டோம் என்றனர்.
ஆனால் இன்று ஆடம்பர வாழ்க்கை வாழ்கின்றனர். பாட்டாளி மக்களுக்காக ஜே. வி. பி. செய்த சேவைகள் என்ன என்று நான் கேட்க விரும்புகிறேன். வெறும் சும்மா தம்பட்டம் அடிப்பதுதான் அவர்களது வேலை. முன்னர் அவர்கள் சந்திகள் தோறும் உண்டியல் குழுக்கினார்கள். இன்றைக்கு அவர்களுக்கு அந்தத் தேவை இல்லை. ஏனென்றால் அவர்கள் இன்று சம்பாதித்துவிட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்