கடந்த வாரா சண்டே லீடர் பத்திரிகையில் யாழ் குடாநாட்டில் மக்கள் பயப் பீதியில் வாழ்வதாகவும், கப்பம் கடத்தல் என்பன அதிகரித்திருப்பதாகவும் செய்தி வெளியாகியிருந்தது. வியாபாரிகளிடம் அரச சார் கட்சியொன்று அதிக கப்பம் அறவிடுவதால் அரிசியின் விலை கொழும்பில் 25 ரூபாவாக இருக்கும் போது யாழ்ப்பாணத்தில் 100 ரூபாவாக இருப்பதாக அப்பத்திரிகை மேலும் தெரிவித்திருந்தது.
இதேவேளை லங்கா நியூஸ்வெப் தனது இன்றைய செய்தியில் பத்திரிகைகள் மிரட்டப்பட்டதாகத் தெரிவிக்கிறது.
யாழ். தினக்குரல், உதயன் மற்றும் வலம்புரி பத்திரிகை அலுவலகங்களுக்கு, கறுப்பு தலைக்கவசமணிந்து மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் கடிதங்களைக் கையளித்துச் சென்றுள்ளனர். அன்றைய தினம் (24) செவ்வாய் மாலை ஏழு மணியளவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
பயங்கரவாதிகள் தொடர்பான செய்திகளைப் பிரசுரித்து யாழ்.குடாநாட்டு மக்களை தடுமாற்றத்திற்கு ஆளாக்க வேண்டாம் என்றும் அதனை மீறி நடப்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் அச்சுறுத்தப்பட்டுள்ளது.
தமிழர்களைப் பாதுகாக்கும் கூட்டமைப்பு என்ற பெயரிலான அக்கடிதத்தில் 2002இல் எடுக்கப்பட்ட பிரபாகரன் மற்றும் பொட்டம்மான் போன்றோருடைய படங்களை இந்திய ஊடகங்கள் பிரசுரிப்பதை இங்குள்ள ஊடகங்களும் செய்யுமானால் அவற்றிற்கெதிராகத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மைச் செய்திகளைப் பிரசுரிக்காமல் தவறான தகவல்களைத் தொடர்ந்து பிரசுரித்து இப்பத்திரிகைகள் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவதாகவும் அக்கடிதம் குற்றம் சாட்டியுள்ளது.
சம்பவம் தொடர்பாக யாழ் பத்திரிகை அலுவலகங்களை தொடர்புகொள்ள முடியாவில்லை.