மிக அண்மைக் காலத்தில் வடக்கு அரசியல் அரங்கில் மிகுந்த வாதப்பிரதிவாதங்களை உருவாக்கி இருக்கும் சம்பவங்கள் என்று நோக்கினால் ஒன்று இரணைமடு நீர்ப் பங்கீடு, இரண்டாவது வல்வெட்டித்துறை நகரசபையின் நடப்பாண்டு வரவு செலவுத்திட்ட சமர்ப்பிப்பு. இவை இரண்டும் ஒரே நேர்கோட்டில் இயங்குகின்ற நிலைமையை ஆழந்து நோக்குபவர்கள் அறிந்து கொள்ளலாம்.
பாதிக்கப்பட்ட இனத்தின் விடுதலையும், நிவாரணமும், இருத்தலும் என்ற கோசங்களை முன் வைத்து மக்களிடம் வாக்கு கேட்ட வேட்பாளர்கள், மக்களின் அபிலாசைகளை தூண்டி அதனூடாக வென்ற பின் சராசரி மனிதர்களைவிட கேவலமாக மாறி, பதவி அதிகாரங்களை கையகப்படுத்தும் ஒரு கேவலமான நிலைமைக்கு தங்களை உற்படுத்திக் கொண்டுளார்கள் எனலாம். இந்த நிலை பாரளுமன்ற உறுப்பினர்கள் தொடக்கம் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் வரை விரவிக்கிடப்பது தான் தமிழனத்தின் இன்றைய சாபக்கேடு.
தமிழ் தேசிய கூட்டமைப்பானது இன்று ஒரு தளத்தில் இயங்குவது போலத்தோன்றினாலும், பலதிசைகளில் பிளவு பட்டு கிடப்பதனையே மேற்குறித்த இரண்டு சம்பவங்களின் தொடர்பு நிலைகளும் விளங்க வைக்கின்றன. இரணைமடு நீர்ப் பங்கீடும் சரி, வல்வெட்டித்துறை நகரசபை வரவு செலவு திட்ட சமர்ப்பிப்பு மீதான குழப்பங்களும் சரி கூட்டமைப்பின் அத்திவாரத்தின் கற்களை அசைத்துப்பார்க்கும் நிகழ்வாகவே இருக்கிறது. இரணைமடு நீர்ப் பங்கீடு குறித்ததும் அதன் விளைவுகள் குறித்ததுமான தகவல்களை அறிய நிலாந்தன் அவர்கள் அன்னமையில் எழுதிய “இரணைமடு நீர்; யாரால் யாருக்கு” கட்டுரையிலும் காணலாம்.
பிரதேசவாதத்தின் மூலம் பதவியை தக்கவைப்பதிலும், உள்ளூர்மக்களின் மனங்களை தூண்டி விடுவதன் மூலம் தனது செல்வாக்கினை நிரூபிக்கவும் துணிந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் கூட்டமைப்பின் ஒற்றுமைக்கு குந்தகமான செயற்பாடுகளை நேரிடையாகவே முன்னெடுத்து வருவதும் குறிப்பிடத்தகது. வசதியான போர்வை ஒன்றுக்குள் ஒளிந்து கொண்டுள்ளமையாலும் ஊடக செல்வாக்காலும் தனது நிலையை பூரணப்படுத்தி வெளிக்காட்டும் கூட்டமைப்பின் முக்கியமான ஒரு பதிவிநிலையை எதிர்பார்த்து தனது நகர்வுகளை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
வல்வெட்டித்துறை நகரசபை வரவு செலவு திட்ட சமர்ப்பிப்பு நிலைகளை நோக்கினால், வெறுமனே இன்னும் ஒரு வருடமும் எட்டுமாதங்களும் மட்டுமே ஆட்சிக்காலம் இருக்கும் நிலையில், 17/12 2013 இல் சமர்ப்பிக்கப்பட வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் இரு உறுப்பினர்களும் நடுநிலையாக இருக்க மேலதிக ஐந்து வாக்குகளால் வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டது, அதே வரவு செலவுத்திட்டத்தின் மீதான மறு வாக்கெடுப்பு 27/12 2013 இல் நடத்தப்பட்டது. அந்த வாக்கெடுப்பில் ஈழமக்கள் ஜனநாயகட்சியினர் ஆதரவு நிலையெடுக்க, ஒன்பது உறுப்பினர்கள் கொண்ட சபையில் வெறுமனே நான்கு வாக்குகள் செலுத்தப்பட்டு வரவு செலவுத்திட்டம் நிறைவேறியது.
இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் முதல் வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்த ஐந்து உறுப்பினர்களும் வாக்களிக்கச் செல்லவிடாமல் தடுக்கப்பட்டனர். அவர்களை தடுத்தவர்கள் தன்னிச்சையாக அங்கு கூடியிருந்த மக்கள் என்று கூறப்பட்டது. யாழ்ப்பான அரசியல் சூழலை அவதானித்தவர்களுக்கு இதுவொன்றும் புதிதான விடயமும் அல்ல. முன்னரும் பலதடவைகள் கூட்டணியினரின் அலுவலகம் மீது தீவகத்தில் இருந்து தன்னிசையான முறையில் வாகனங்களில் அழைத்துவரபட்ட மக்கள் கல்லெறிந்து தாக்குவது வழமையானதே.
ஏற்கனவே ஒரு ஏலம் விடுதலில் ஏற்பட்ட ஊழல் காரணமாக கூட்டமைப்பின் பிரமுகர்களால் அறிவுறுத்தப்பட்டமைக்கு அமைவாக உறுப்பினர் ஒருவர் பதவி விலகி இருந்தார். அவருடன் இணைந்து செயற்பட்ட குற்றச்சாட்டுடன் இன்னும் தவிசாளர் பதவியியை தக்கவைத்திருக்கும் நகரபிதா மீதான நம்பிக்ககையில்லா பிரேரணை கடந்தவருடம் முன் மொழியப்பட்டது. அதற்கும் ஆதரவாக வாக்களித்திருந்தனர் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர்.
இம்முறை வரவுசெலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டால் தவிசாளர் பதவியில் நிலைத்திருக்க முடியாத சூழல் உருவாகிவிடும் என்ற நிலையில் திட்டமிட்ட முறையில் ஈழமக்கள் ஜனநாயகட்சியினருடன் செய்துகொண்ட புரிந்துணர்வின் அடிப்படையில் பதவியினை தக்க வைக்க மேற்கொண்ட நாடகமே இந்த தன்னெழுச்சியான மக்கள் தடை.
இதன் பின்னான நிலையில் ஊடகமொன்றுக்கு செவ்வி வழங்கிய தவிசாளர், சுரேஷ் அணியினரை ஓரங்கட்டும் முயற்சியாக இந்த நடவடிக்கையை கருதலாமா என்ற கேள்விக்கு…கூட்டமைப்பின் தவறுகளை சுட்டிக்காட்டும் சுரேஷ் பிரேமச்சந்திரனை சாடுகின்ற நிலையினை தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்திருப்பதாகவும் இந்த நிலையானது காலப்போக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
கூட்டமைப்பின் இருப்பினை ஆட்டம் காணவைக்கும் இத்தகைய செவ்வியினை கூட்டமைப்பின் செயலாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஏற்றுக்கொள்கிறாரா எனபது இங்கு கேள்விக்குற்படுத்தப்பட வேண்டிய விடயம்.
இன் நிலையில் தங்களை வாக்களிக்க விடாமல் தடுத்தமைக்காகவும், தங்களின் சிறப்புரிமை மீறப்பட்டமைக்காகவும் மேற்குறித்த நகரசபையின் ஐந்து உறுப்பினர்களும் வல்வெட்டித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை செய்துள்ளதுடன், மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறையீடு செய்துள்ளார்கள். இனிவரும் காலங்களில் நகரசபை நிர்வாகமானது இயங்காமல் இருக்க தடையுத்தரவு பெறக்கூடிய சூழலும் இதன் மூலம் உறுதிப்படுகிறது.
நிலைமை இவ்வாறு கையை மீறி சென்று கொண்டிருக்கும் போதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மத்திய குழுவானது உறுதியான முடிவினை எடுத்து நகரசபையின் சிக்கலை முடிவுக்கு கொண்டுவருவதில் காட்டும் மேத்தனப்போக்கானது, இவர்கள் கொள்களைகள் குறித்த ஐயப்பாட்டினை உருவாக்கி உள்ளது எனலாம். சுமுகமாக முடிக்கவேண்டிய சிக்கல் ஒன்றினை ஊதிப்பெருப்பிக்கும் நடவேடிக்கைகளில் இருவேறு தரப்பினரும் ஈட்டுபட்டிருப்பதை தவிசாளரின் ஊடக செவ்வி புலப்படுத்துகிறது. அதற்கான நிலையமாக அடியிடல் நிலமாக வல்வெட்டித்துறை மிகைப்படுத்தி காட்டப்படுகிறது. இதற்கு முன்னரும் சில ஊடகங்களில் சம்மந்தரின் பின் கூட்டமைப்பையே வழிநடத்தும் தகைமை கொண்டவர் இந்த தவிசாளர் என்று கொம்பு சீவப்பட்டமையும் குறிப்பிடத்தகதாகும்.
பிரதேசவாதத்தின் மூலமும், குழுநிலைத்தக்கவைப்பு மூலமும் தமது இருப்புகளை நிலைத்திருத்த துணிந்த நிலையில், இவர்களிடமிருந்து ஒரு இனம் சார்ந்த, கொள்கை சார்ந்த ஒரு உறுதியான நிலையினை எதிர்பார்ப்பதென்பது இனிவரும் காலங்களில் சாத்தியமில்லாத ஒன்றாகும். இவ்வாறன செயற்பாடுகளில் ஈடுபடும் உறுப்பினர்கள் மீது ஒழுங்காற்று நடவெடிக்கைகளை எடுக்க துணியாத அல்லது கையறு நிலையில் இருக்கும் மத்திய குழுவினதும் செயற்திறனும் சந்தேகத்துகிடமானதே. தொடர்ந்தும் இவ்வாறான குழும பிரதேச வாதநிலைகளை கூட்டமைப்பின் உறுப்பினர்கள் வெளிப்படுத்துவார்களாயின் இவர்களால் உருவாக்கப்படும் அரசியல் வெற்றிடத்தில் மக்கள் மூழ்கிப்போய் எதிர்கால இருப்பினையே இழக்க வேண்டிய சூழல் உருவாகலாம்.
இதற்கான பலமான மாற்றீதான அரசியல் சக்தி ஒன்றே இன்றைய நிலையில் தமிழ் மக்களின் முன்னால் உள்ள மிக முக்கிய தேவையாகும்.
விவாத நோக்கில் இந்த ஆக்கம் பதிவிடப்படுகிறது.
வணக்கம்
தங்களின் ஆக்கம் தமிழ் தேசிய செயற்பாட்டை விமர்சன நோக்கில் சீர்படுத்த முனைவதாக எம்மால் கணிக்கப்படுகின்றது .ஆனாலும் இருவேறு விடயங்களை விமர்சிக்க முற்பட்ட நீங்கள் முதல் விடயமான இரணைமடு நீர் வினயோகத்தினை வெறுமனே அரசியல் பதவியை தக்கவைக்க முன்னெடுக்கும் பிரச்சனையாக காட்டமுனைவது இந்தவிடயத்தின் அறிவார்ந்த ஆய்வுக்கு உட்படுத்த்தாது எதிர் வாதம் புரியும் நோக்கில் விமர்சிப்பதாகவே உணரமுடிகின்றது .உலக அளவில் அரிசி உற்பத்தியின் தேவை மிகையாக காணப்படுவதால் அதனை பெருக்க பல்வேறு முனைப்புக்கள் முநேடுக்கப்படும் போது இலங்கையில் அதுவும் ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தமிழரது பொருளாதாரத்தை குறிவைத்து சிங்கள பெரும் தேசியவாதிகளால் செயல்படுத்த முனையும் திட்டமே இரணைமடு யாழ் நீர் வினயோகம் இதன் சூழசிகள் புரியாது வியாக்கியானம் செய்வது குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுவதற்கு சமன் .
அடுத்த விடயம் வல்ல்வைத் தவிசாளர் இயல்பில் ஒரு யாழ் மேட்டுக்குடி நிலப் பிரபுத்துவ சமுகத்தின் வழிவந்தவர் இதனால் தமிழரசுக்கட்சியின் விசுவாசி இந்தியபடையின் செயல்களை நூ லாக்கி பிரபலம் தேடியவர் ஓய்வுவரை அரச உத்தியோகத்தர் பின்னர் நெருக்கடிநிலையில் சர்வ தேச தொண்டு நிறுவனத்தின் அதிகம் ஊதியம் பெறும்அதிகாரி இப்பணி சேவை நோக்குடயதல்ல வருமான நோக்குடையது தமது கெளரவாதத்திற்காக அரசியல் செய்ய முன்வந்தவர் தனது கட்சியில் அவரது ஊரவருக்கே முனிருமை என்பதால் ஈ பி அர் எல் எப் இல் இணைந்து நகரசபைக்கு தெரிவானவர் கல்வியாளர் என்ற எதிர்பார்ப்பில் ஆதரவு அதிகமாக இருந்தது உண்மை ஆனால் இன்னொரு முறை வாய்ப்பு இல்லை இவர் அடிமட்ட மக்களை நேசிப்பவர் அல்ல பணம் கெளரவம் மட்டுமே இலக்கு இவரது உறவினரான ஒரு வீராப்பு பத்திரிகயாலரால் கொம்பு சீவப்பட்டு வழிநடத்தப்படுபவர் இவரைப்பயன்படுத்துபவர்களும் பதவிப்பயனாளிகளே