மக்கள் பணம் வாங்கி கொண்டு வாக்களிக்கும் நிலை தொடர்ந்தால் கம்யூனிஸ்ட் கட்சி ஜனநாயகம் அல்லாத பாதை பற்றி சிந்திக்க வேண்டி வரும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறினார்.
வந்தவாசி தொகுதி அதிமுக வேட்பாளர் பி.முனுசாமியை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வந்தவாசி கோட்டை மூலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசியது:
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, எம்ஜிஆர் ஆகியோர் இலங்கை தமிழர்களுக்கு உதவினர். அப்போது திமுக மத்திய அரசில் இல்லை. ஆனால் திமுக பங்கேற்றுள்ள இப்போதைய மத்திய அரசு இலங்கையில் தமிழர்களை சுடப்போனது ஏன்?.
இலங்கை தமிழர் பிரச்னையில் நான் உண்மையை சொன்னதற்காக எனது காருக்கு தீவைக்கப்பட்டது. திமுகவுக்கு தமிழர்களை பற்றி கவலை இல்லை. ஆகவே இலங்கை தமிழர்களுக்கு ஏற்பட்ட அநியாயத்துக்கு தீர்ப்பாக வந்தவாசி தொகுதியில் அதிமுக வெற்றிபெற வேண்டும்.
மக்கள் பணம்தான் முக்கியம் என்று நினைத்தால் நாங்கள் எந்த ஆயுதத்தை ஏந்த வேண்டுமோ அந்த ஆயுதத்தை ஏந்துவோம். தமிழகத்தில் இப்போது ஜனநாயக படுகொலை நடக்கிறது. மக்கள் பணத்துக்கு விலைபோய் விடக்கூடாது என்றார் அவர்.
மாவட்டச் செயலாளர் கு.ஜோதி தலைமை வகித்தார். வந்தவாசி தொகுதி தேர்தல் பணிக்குழுத் தலைவர் எம்பி தம்பிதுரை, அதிமுக வேட்பாளர் பி.முனுசாமி, மாவட்டச் செயலாளர் முக்கூர் சுப்பிரமணியன், உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலத் தலைவர் வேட்டவலம் மணிகண்டன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட பொருளாளர் நாராயணசாமி, நகரச் செயலாளர் சாதிக்பாட்சா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாண்டியன் புதிர் போடுகிறாரா?
“அதென்ன “ஜனநாயகம் அல்லாத பாதை” ?
புரட்சி ஜனநாயகமில்லாததா? போராட்டங்கள் ஜனநாயகமில்லாதனவா?
இப்போ இருப்பன ஜனநாயக ஆட்சிகளா?
அதிமுக வெற்றி எப்படி ஜனநாயகத்தை மீட்டுத் தரும்?
“இந்திரா காந்தி ராஜீவ் காந்தி எம்ஜிஆர் ஆகியோர் இலங்கை தமிழர்களுக்கு உதவினர்.”
இந்திரா விசயமே சந்தேகம். அதில் ராஜீவ் வேறே!
“அப்போது திமுக மத்திய அரசில் இல்லை. ஆனால் திமுக பங்கேற்றுள்ள இப்போதைய மத்திய அரசு இலங்கையில் தமிழர்களை சுடப்போனது ஏன்?”
தோழியர் ஜெயலலிதா இலங்கையில் தமிழர்களை ஆதரித்தவரா?
சி.பி.எம் சிபிஐ நிலைப்பாடு மாறியது நல்ல விசயம். ஆனால் இன்னமும் இந்திய மேலாதிக்க வேலைத்திட்டம் தான் மனதில் உள்ளது.
பாண்டியன் யாரை முட்டாளாக்கப் பார்க்கிறார்?