நாஜிகளிடமிருந்து விடுதலை பெற்ற ஐரோப்பா அவ்வப்போது அந்த நிகழ்வை நினைவு கூறிவருகிறது.அந்த விடுதலை இன்னும் ஒரு வருடத்தில் 70 ஆம் வருடத்தை நெருங்குகிறது.நாசிசம் , பாசிசம் பற்றிய செய்திகள் அத்தினங்களில் செய்தி ஊடகங்களில் அதிகமாகவும் பேசப்படுவதும் சில தினங்களில் அவை மைய நீரோட்டப் பத்திரிகைகளிலிருந்து விலக்கப்பட்டுவிடுவதும் வழமையான நிகழ்வாவதும் நடைமுறை.
ஆனாலும் இளைஞர்கள் மத்தியில் நாசிச கருத்துக்களை நாகரீகமாக புகுத்துவதும் , நாசி ராணுவ உடைகளை புதிய நாகரீகமாக்குவதும் ,அந்த ஆடைகளை அணிபவர்கள் மீதான மென்மையான் போக்குகளைக் கடைப் பிடித்து குற்றமற்றவர்கள் ஆக்குவதும் நடை முறையாகக் கொண்டிருக்கின்றார்கள்.சில வருடங்களுக்கு முன்னர் பிரித்தானிய இளவரசர் சார்லசின் இரண்டாவது மகன் கேளிக்கை நிகழ்ச்சியில் நாசி உடை அணிந்தமை சர்ச்சைக்குள்ளானது.
இவை ஒரு பக்கமிருக்க நாஜிகள் புது வடிவங்களில் இளைஞர்களை ஒழுங்கமைக்கும் அமைப்புக்களைத் திட்டமிட்டு உலகம் பூராகவும் வளர்ந்து வருகின்றனர் .முதாளித்துவ சுரண்டல் பொருளாதரத்திற்கு தேவையான போது மலிவான தொழிலாளர்களை வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்த முதலாளிகள் இன்றைய நிதி நெருக்கடிகளுக்கு பிற நாட்டவர்களே காரணம் என்று கை காட்டித் தப்பித்து கொள்ளவும் செய்கின்றனர். தாங்கள் செய்த குற்றங்களை மறைக்க மறைமுகமாக இனவாதத்தை தூண்டி விட்டும் வருகின்றனர்.
உலகப்போர் உருவானதற்க்குரிய காரணிகள் 1940 களைப் போலவே இன்றும் காணப்படுகின்றன. லாபவெறியை முன்னிறுத்தி வளர்க்கப்பட்ட முதலாளித்துவ பொருளாதாரம் தோற்றுவித்துள்ள நெருக்கடிகள் அவற்றின் ஊற்றாக இருக்கிறது.இந்த நெருக்கடிகளை மக்க புரிந்து விடக்கூடாது என்பதற்காகவே மறைமுகமாக இனவாத , நிறவாத சக்திகளை ஆளும் வர்க்கம் தூபம் போட்டு வளர்த்து வருகிறது. இந்தியா , இலங்கையில் சாதி , மதம் பயன்படுவது போல ஐரோப்பிய ஆளும் வர்க்கத்திற்கு நிறவெறி பயன்பட்டு வருகிறது.
1940 களில் ஏகாதிபத்தியத்தின் ஒற்றைக்கோபுரமாக விளங்கிய சூரியன் அஸ்தமிக்காத பிரிடிஷ் சாம்ராஜஜியத்திற்க்குப் பதிலாக இன்று பல்தேசியக் கம்பனிகள் லாப வெறி கொண்டு உலகத்தை கொள்ளையிட நடாத்தி வரும் போர்கள் இன்றைய உலகப் போக்காக உள்ளது.
1930 களில் ஏற்ப்பட்ட பொருளாதார நெருக்கடியின் விளைவாக இடது சாரிகளின் வளர்ச்சி அதிகரித்த காரணத்தால் நிதி மூலதனத்தை கைவசம் வைத்திருந்த ஜெர்மன் வங்கி முதலாளிகள் கொள்ளையடிப்பதையும் ,கொலை செய்வதையும் தொழிலாக கொண்ட கிட்லரை தலைமையாகக் கொண்ட நாஜி வெறிக்கும்பலை மறைமுகமாக ஆதரித்து ஆட்சிபீடத்தில் ஏற்றி வைத்தனர்.
1930 களில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைத்த வரவேற்ப்பை தடுத்து நிறுத்த நாஜிகள் கொல்லைப்புறமாக ஜெர்மனி வங்கியாளர்களால் ஆட்சியில் அமர்த்தப்பட்டார்கள்.
தனது இனவெறிக் கொள்கையை நடைமுறைப்படுத்த விளைந்த ஹிட்லர் “கம்யூனிச எதிர்ப்பு ” என்று ஒன்றைக் காட்டி மறைத்துக் கொண்டான்.முதலாளித்துவத்தின் முன்னணிப்படையாக தன்னை சித்தரித்துக் கொண்டான்.அவனை அன்றைய ” ஜனநாயக நாடுகள் ” அத்தனையும் ஆதரித்தன.அது இரண்டாம் உலகப் போரில் முடிந்தது.
1990 களின் பின்னர் சோவியத் நாட்டின் வீழ்ச்சியுடன் புத்தெழுச்சி பெற்ற நாசிச , பாசிச சக்திகள் பரவலாகத் தலை தூக்க ஆரம்பித்தன.அதன் பரிணாம வளர்ச்சி இன்று ஐரோப்பிய நாடுகளின் அரசியலிலும் துல்லியமாகத் தெரியும் அளவுக்கு வளர்ச்சியும் பெறத் தொடக்கி விட்டன.
ஐரோப்பிய நாடுகளில் நாசிச , பாசிச வளர்ச்சி என்பது 60 வருடங்களுக்கு முன் ” யூதர்கள் நாஜிகளின் சித்திரவதை முகாம்களில் கொல்லப்படவில்லை ” என்று கூறுமளவுக்கு வளர்ந்து விட்டது. ” அவுட்ச்விஸ் பொய்கள் ” [ Auswitz lies ] என்ற தலைப்பில் துணிந்து ” வரலாற்று நூல்கள் ” எழுதும் அளவுக்கு துணிந்து விட்டார்கள்.இது போன்ற நச்சு சக்திகளை தடை செய்ய ஜனநாயக நாடுகள் தயங்குகின்றன.
இத்தாலியின் புகழ் பெற்ற மூத்த திரைப்பட இயக்குனர் Ferdicco Fellini என்பவர் ” மொசொலினி காலத்தில் சட்டம் ஒழுங்கு ,நீதி எல்லாம் பாராட்டத் தக்கதாக இருந்தது ” என்று கூறி அதிர்ச்சி அலையை ஏற்ப்படுத்தினார்.” இத்தாலியின் கலாச்சாரச் சின்னம் ” என்று வர்ணிக்கப்படும் ஒருவர் இப்படி சொன்னால் இளைஞர்கள் நம்பிவிடுவர்களே என்று அரசியல்வாதிகள் 1990 களில் அங்கலாய்த்தனர்.
ஆயினும் இந்த கொலை பாதகர்களின் வரலாற்றுத் திரிப்பை , நாஜிகளின் சித்திரவதை முகாம்களிலிருந்து உயிர் தப்பிப் பிழைத்த யூதர்களும் , நாசி எதிர்ப்பாளர்களும் , கம்யூனிஸ்டுக்களும் தோலுரித்து வருகின்றனர்.
நாஜிகளின் அநீதிகளை வெளிக்கொணர்ந்த சில சினிமா திரைப்படங்கள் ஆங்காங்கே வெளிவந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உண்டாக்கின.
அந்த வகையில்1990 களில் வெளிவந்த முக்கியமான படங்களில் ஒன்று பிரபல ஹொலிவூட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய சின்ட்லேர்ஸ் லிஸ்ட் என்ற திரைப்படம்.இந்தத் திரைப்படம் வெளிவந்த காலத்தில் இரண்டாம் உலகப்போர் வெற்றியை கொண்ட்டாடிய நாடுகளில் சிறப்புத் திரைப்படமாக காண்பிக்கப்பட்டது.
ஆஸ்கார் சின்ட்லேர் [ Oskar Schindler ] என்ற ஜெர்மனியர் நாசிகளின் சித்திரவதை முகாமிலிருந்து 1,200 யூத கைதிகளைக் காப்பாற்றியது பற்றி தாமஸ் கேன்னேலி [ Thomas Keneally ] என்கிற ஆஸ்திரேலிய எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம்.
Oskar Schindler செக்கோஸ்லவாக்கியாவில் ஜெர்மன் தேசியவாதிகளான பெற்றோருக்கு 1908 ஆம் வருடம் பிறந்தவர்.பரம்பரைத் தொழிலான வியாபாரம் வெற்றியளிக்காததால் வேறு பல தொழில்கள் ஆரம்பித்து தோற்றவர்.நாஜிகள் ஆட்சியைக் கைப்பற்றிய பின் நாஜிக்கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்தவர்.
நாஜிகளால் கைது செய்யப்பட்ட யூதர்கள் சித்திரவதை முகாம்களில் கட்டாய வேளைகளில் அமர்த்தப்பட்டனர்.அது நாஜிகளின் திட்டமிட்ட , மிகப்பெரிய லாபம் தரும் முதலீடாகவும் அமைந்தது.முகாம்களில் கடுமையாக உழைத்து நலிந்தவர்களை விஷவாயுக்கள் பொருத்தப்பட்ட அறைகளில் போட்டு சாகடித்தனர்.
இப்படிப்பட்ட இலவச தொழிலாளர்களை கடுமையாகச் சுரண்ட பல ஜெர்மன் கம்பனிகள் அனுமதிக்கப்பட்டன. இந்தக்கைதிகளின் உழைப்பை சுரண்டிக் கொழுத்த கம்பனிகள் மாற்றீடாக ஏதும் செய்ததில்லை.இந்தப் பொருளாதார முதலீடு யூதர்களின் பசி, பயங்கரம் , மரணத்தினூடே நடாத்தப்பட்டது.
இப்படிப்பட்ட முகாம்களில் உள்ள யூதர்களிடம் இலவசமாக வேலை வாங்கி விரைவில் பணம் பண்ணும் நோக்கத்தோடு போலந்தில் உள்ள Krakow என்ற நகருக்கு வருகிறார் படத்தின் கதா நாயகன் சின்ட்லேர்.
Krakow பகுதியில் வாழ்ந்த செல்வந்தரின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்துடன் வந்து அவற்றை அடைந்து கொள்கிறான் சின்ட்லேர்.
யூதர்களின் மத அனுஸ்டானங்களை பின்னணியாகக் கொண்டு படம் ஆரம்பிக்கிறது.ஆழ்ந்த யோசனையுடைய முகங்கள் காட்டப்படுகின்றன.பூஜை விளக்கின் ஒளி அணைந்து யூதர்களை ஏற்றி வரும் ரயில் கக்கும் புகையாகக் காட்சி மாறுகிறது.பல்லாயிரக்கணக்கான மக்கள் சிறைக்கூடங்களில் அடைக்கப்டுகின்றனர்.செல்வந்தக் குடும்பங்களைச் சேர்ந்த யூதர்கள் வறிய யூதர்களுடன் பழைய கட்டிடங்களுக்குள் தள்ளப்படுகின்றனர்.
செல்வந்த யூதர் ஒருவரின் வீட்டில் புகுந்து , படுக்கையறையில் உள்ள வசதியான கட்டிலில் சப்பாத்துக் காலுடன் ஒய்யாரமாகப் படுத்துக் கொண்டு ” இதை விட நன்றாக இருக்க முடியாது ” என்று ஆணவத்துடன் கூறுகிறான் சின்ட்லேர்.
ஒஸ்கார் சிண்ட்லராக
பண ஆசைபிடித்த யூதர்களை தனது திட்டத்திற்கு முதலீடு செய்யும்படி வற்ப்புறுத்துவது, கறுப்புச் சந்தையில் பொட்ருகளை வாங்குவது போன்ற காட்சிகளில் சின்ட்லேரின் பண வெறி காட்டப்படுகிறது.
தன்னால் ஆரம்பிக்கப்போகும் அலுமினியக் கம்பனிக்கு தகுதியான கைதிகளை தெரிவு செய்யும் முறையும் ,அதற்காக நாஜிஅதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதும் காட்டப்படுகிறது.
தங்களுக்கு நிகழப் போகும் பேராபத்தைப் புரிந்து கொண்ட சில யூதக்கைதிகள் சின்ட்லேரின் திட்டத்திற்கு இணங்குகின்றார்கள்.அலுமினியக் கம்பனியின் கணக்காளராக நியமிக்கப்பட்ட Stern என்பவர் அதற்குத் தலைமை தாங்குகிறார்.Stern என்ற பாத்திரத்தை ஏற்று நடித்திருப்பவர் காந்தி படத்தில் காந்தியாக நடித்துப் புகழ் பெற்ற Ben Kingsley ஆவார்.
மூன்றரை மணி நேரம் கருப்பு வெள்ளையில் ஓடும் இந்தப் படத்தின் காட்சிகள் நிஜமான காட்சிகளோ என்று என்னுமளவுக்கு இயற்கையாக அமைந்துள்ளன.சில காட்சிகள் வண்ணத்திலும் ஒளிப்பதிவு செய்யப்படுள்ளன.ஒளிப்பதிவும் ,படத்தொகுப்பும் நிறைய கை கொடுத்துள்ளன.கைக் காமராவினால் சில காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளமை நம்மை கதை நடக்கும் இடத்தில் நிற்பது போன்ற உணர்வைத் தருவதுடன் அதிர்ச்சி தருவதாகவும் உள்ளன.குறிப்பாக நாஜிப்படைகள் யூதர்களை வேட்டையாடும் காட்சிகள் கொடூரம் நிறைந்தவை.இவை போன்ற வன்முறை தேவை தானா என்ற கேள்விக்கு நாசிகளின் சிறைச் சாலைகளிலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள் கூறிய கருத்துக்கள் இவை தேவை என்பதையே வலியுறுத்துகிறது.
Krakow நகர்ப்பகுதியில் Plaszow சித்திரவதை கூடத்தின் தலைமைபொறுப்பில் இருந்த அமன் கோத் [ Amen Goth ] என்பவனே இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் தாங்கியவன். தனது வீட்டு மாடியிலிருந்து கீழே நடந்து செல்லும் யூத கைதிகளை குறி பார்த்து சுட்டுக் கொள்வது அவனது பொழுதுபோக்குகளில் ஒன்று.சிறிய தவறுகளை சியும் கைதிகளை நினைவு இழக்கும் வரை சவுக்கால் அடிப்பது , இடையே நிறுத்தி எத்தனை முறை அடி விழுந்தது என்று கேட்பதும், அப்படி கூறாவிட்டால் மீண்டும் ஞாபகம் வரும்வரை அடிக்கும் கொடுங்கோலன்.
Amon Goeth உணர்ச்சிக் குழப்பமும் சித்தசுவாதீனமும் இழந்த இனவெறியன்.சிறையில் இருக்கும் ஒரு யூதப் பெண்ணை வீட்டுவேலைக்கு அமர்த்தும் அவன் அந்தப் பெண்ணின் மீது காதல் வசப்படுவதும் , அதனை சொல்ல முடியாமலும் தவிக்கின்றான்.நாஜிகளின் கோட்பாட்டின்படி ” இனக்கலப்பு ” செய்வது [ ஜெர்மானியர் + வேறு இனத்தவர் கல்யாணம் செய்வது] கடுமையான குற்றமாகும்.அது நாஜிகளின் உத்தியோகபூர்வமான கொள்கையாகவும் இருந்தது.இவ்விதமான கொள்கையை கடைப்பிடிக்கும் ஒரு ராணுவ அதிகாரி யூதப் பெண்ணிடம் மயங்குகிறான்.அவளைப் பார்க்கும் போதெல்லாம் ” நான் ஒரு ஜெர்மனியன் ! போயும் ,போயும் ஒரு யூதப் பெண்ணிடம் மயங்குவதா ? என்பதும் ,மீண்டும் ” இந்த முகத்தையா எலிகளின் மூஞ்சை ” என்கிறார்கள்? என்று மனக்குழப்பத்தில் தத்தளிப்பதும், சற்று பின் ஆத்திரம் போங்க அவளை அடித்தும் நொறுக்குகிறான்.
அந்த கதாபாத்திரத்தில் நடித்த Ralph Fiennes என்ற நடிகர் மிகுந்த பாராட்டைப் பெற்றார்.
படத்தின் ஆரம்பத்தில் பணத்தை மட்டும் குறியாக செயப்படும் சிண்ட்லர் , யூதர்கள் மீது நடக்கும் கொடுமைகளை கண்டு மனம் மாறுகிறார். அமன் கோத் மற்றும் பிற நாஜி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தனது தொழில் சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களைக் காப்பாற்ற முயற்ச்சிகள் எடுக்கிறார்.யூதர்கள் மீது அனுதாபமும் கொள்கிறார்.அவரது பிறந்தநாள் விழாவில் மலர் கொடுக்கும் யூத குழந்தையை முத்தமிட்டதற்காக சிறையில் தள்ளப்படுகிறார்.
இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் இந்த சம்பவங்களும் நடை பெற்றுக்கொண்டிருக்கின்றன. இவ்வேளையில் ரஷ்யாவின் செம்படை போரில் மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.நாஜிகள் ஆக்கிரமிப்புக்கு எதிரான போரில் கணிசமான வெற்றிகளை தம் வசம் கொண்டு செம்படை முன்னேறுகிறது.இதனால் போலந்தில் உள்ள சித்திரவதை முகாம்களை நாஜிகள் இடம் பெயர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.ஆனால் படத்தில் இடம் பெயர்சசிக்கான காரணம் சொல்லாமல் விடப்படுகிறது.இதே போன்று வேறு சில முக்கியமான விடயங்கள் மறைக்கப்பட்டுள்ளன.
யூதக்கைதிகளை அடிமைகளாகப் பயன்படுத்திய Siemens , Basf , Afga , I .G Farben , Bayern போன்ற கம்பனிகள் லாபமீட்டின.அனால் இன்று இல்லாத கம்பனியான I . G .Farben கம்பனி மட்டும் படத்தில் குறிப்பிடப்படுகிறது. இவை ஏகபோக முதலாளிகள் உருவாக்கிய உலகப்போர் என்பதை மறைப்பதாகும்.
Bayern என்கிற மருந்து உற்பத்தி செய்யும் கம்பனியும் பரிசோதனைக்கென மிருகங்களுக்குப் பதிலாக யூதர்களை விலைக்கு வாங்கியது.இன்றுவரை இந்தக் கம்பனிகள் ஒன்று கூட பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்கியது கிடையாது.Bayern என்ற கம்பனி இன்றுவரை மருந்து உற்பத்தியில் குறிப்பிடத்தக்க அளவு ஆதிக்கம் செலுத்திவருகிறது.
நாஜி வதைமுகாமிலிருந்து தப்பிய Premo Levi [ 1919 – 1987 ] என்கிற யூதக்கைதி ” எமது உயிர் கொடிய கனவுகளாலும், மீளமுடியாத துயரங்களாலும் மூழ்கடிக்கப்பட்டும் , பல லட்சம் மக்களின் உயிர்களை பலியிட்டுமே காப்பாற்றப்பட்டது ” என்று எழுதினார்.ஆனால் படத்தில் நாஜிகளின் உலகப் போர் முக்கியமாக சொல்லப்படவில்லை. படத்தின் இறுதிக் காட்சியில் ” உங்களுக்கு சோவியத் செம்படை விடுதலையளித்துள்ளது ” என்று கூறப்படுகிறது.
சிண்ட்லரின் உதவியால் உயிர் தப்பும் யூதக்கைதிகள் தங்கள் நன்றிக்கடனாக தமது பற்களில் அடைத்து வைத்திருந்த தங்கத்தினால் மோதிரத்தைப் பரிசாக வழங்குகின்றனர்.அது சிண்ட்லரை மெய்ச்சிலிர்க்க வைக்கிறது.
சிண்ட்லராக நடித்துள்ள Liam Neson அந்தப் பாத்திரமாகவே ஒன்றி நடித்து பெரும் புகழ் பெற்றார்.
படத்தின் இறுதிக்காட்சி ஹாலிவூட் பாணியில் முடிகிறது.சிண்ட்லர் தனது மனைவியுடன் காரில் பயணிக்கிறார்.சிண்ட்லர் காப்பாற்றிய யூதர்கள் அஞ்சலி செலுத்துவது கலரில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.அவரின் விருப்பப்படி அவரது உடல் இஸ்ரேலில் உள்ள Yad Vasheem என்ற இடத்தில் தகனம் செய்யப்பட்டது.
அமன் கொத் [Amen Koth ] சம்பந்தப்பட்ட காட்சிகள் Krakow நகரில் அவன் வாழ்ந்த மாளிகையிலேயே ஒளிப்பதிவு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பான கதையமைப்பும் , படப்பிடிப்பும் , சூழ்நிலைகளுக்குப் பொருத்தமான யூத இன மக்களின் இசையும் ஒப்பற்ற வகையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
1000 வருடங்களாக ஐரோப்பாவில் சிறுபான்மையினமாக வாழ்ந்த ஒரு மக்களை பெரும்பான்மை இன வெறியர்கள் எப்படியெல்லாம் அநாகரீகமாக ஒழித்துக் கட்டினார்கள் என்பதை சொல்லும் காவியம் இந்தப் படம்.நாஜிகளால் 5 மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்டார்கள்.
இன்று ஐரோப்பாவில் குடியேறிய புலம் பெயர் தமிழர்கள் தலைக்கனத்துடனும் , இறுமாப்புடனும் இந்த வாழ்வு நிரந்தரம் என்ற கனவில் வாழாமல் ஐரோப்பாவின் இருண்ட பக்கங்களையும் அறிய முயல வேண்டும். இது போன்ற படங்களையாவது பார்த்து ஐரோப்பாவின் இன வெறியின் வேர்களையும் , அவற்றை எதிர்க்கும் சக்திகளையும் தேடி இனம் காண வேண்டும்.
இது போன்ற படங்கள் அவற்றிற்கு உதவும்.
ஒஸ்கார் சிண்ட்லர் [ 1908 – 1974 ] சில குறிப்புக்கள்:
1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் சிண்ட்லர் அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதியி விசாரணை செய்யப்பட்டார்.krakow சித்திரவதை முகாமில் மட்டும் 1200 யூதர்களைக் காப்பாற்றியதாள் மாத்திரம் விடுதலை செய்யப்பட்டார்.
1949 ஆம் வருடம் ஆர்ஜண்டீனாவுக்குச் சென்று மீண்டும் 1956 இல் ஜெர்மனிக்குத் திரும்பினார்.இறுதிவரை பெண் பித்தராகவும் ,குடிகாரனாகவும் விளங்கினார். இவை படத்திலும் கூறப்படுகிறது.குடிப்பழக்கத்தை இறுதிவரை விடவில்லை என்பதும் அதற்காக யூதர்க வழங்கிய தங்க மோதிரத்தையும் விற்றார்.”நான் குடிப்பதற்காக அதனை விற்றேன் ” என்று தனது இருத்தி பேட்டியில் [1974] பிராங்க்பர்டில் கூறினார்.1974 ஆம் ஆண்டு தனது 66 ஆவது வயதில் இறந்தார்.
என்ன சொல்ல வருகிறீர்கள் என்றே புரியவில்லை. ஹிட்லரைப் பற்றி பள்ளிச் சிறுவன் கூட சொல்லும் கருத்துக்கள், நாசி கொடுமை, யூத எதிர்ப்பு பிறகு சின்ட்லர்ஸ் லிஸ்ட் படத்தைப் பற்றிய அரைவேக்காட்டுத்தனமான பதிவு. என்ன ஆச்சு சவுந்தர்? பேசாமல் இளையராஜாவை உயர்த்திப் பிடிக்கும் பதிவை “தமிழ்த்திரையின் ராக அதிசயங்கள்’அல்லது” ராக தேவனின் கீதங்கள் ” என்று எதோ ஒரு தலைப்பிட்டு எழுத வேண்டியதுதானே?
கலை உலகில் மற்றும் ஒரு அருமையான கட்டுரை. படத்தைப் பார்க்கத் தூண்டுகிறது. ஹிட்லர் வெறும் நாசி ஜேர்மனியை உருவாக்கினார் என்பது தெரிந்த ஒன்று. ஹிட்லரையே அமரிக்க அரசும் ஐரோப்பிய அரசுகளும் சேர்ந்து தான் உருவாக்கினார்கள் என்பது தமிழர்கள் மத்தியிலிருந்து வெளிவருவது இன்றைய சூழலில் முக்கியமானது.
ஜெர்மன் வங்கி முதலாளிகளும் , ஐரோப்பிய ,அமெரிக்க முதலாளிகளும் சேர்ந்து உருவாக்கிய அமைப்பு தான் நாசி அமைப்பு என்பது பட்டவர்த்தனமாக தெரியாத உண்மை. “கம்யூனிச எதிர்ப்பு ” என்ற அடிப்படையில் மறைக்கப்பட்ட உண்மை.
Siemens , Basf , Afga , Bayern பற்றியும் அதிகம் பேசப்படுவதில்லை.அந்தக் குறிப்பு இங்கே சொல்லப்பட்டது வரவேற்கத் தக்கது.எலிகளுக்குப் பதிலாக யூதர்களை பரிசோதனை செய்தது Bayern கம்பனி.
யூதர்களுக்கு நேர்ந்த கதி நமக்கோ அல்லது நமது பிற்க்கால சந்ததிக்கோ நேரலாம்.நம் கண் முன்னாலேயே முள்ளிவாய்காலில் ஒரு லட்சம் மக்களை கொல்ல உதவி புரிந்தவர்கள் அல்லவா ?
செம்படையின் வீரமிக்க தியாகத்தால் தான் நாஜிகள் ஒழிக்கப்பட்டார்கள் எனபதை சொல்ல தவறி விட்டீர்கள் சௌந்தர்.
மதனகோபாலன் பெரிய மேதாவி.அவரை விட்டுத்தள்ளுங்கள்.அது ஒரு வைக்கோல் பட்டடை..!
இசை என்று ஓடோடி வைத்தேன் ஏமாற்றி விட்டீர்களே சவுந்தர்.ஆனாலும் கட்டுரை மிக நன்று.இந்த படத்தை பார்க்கத் தூண்டி விட்டது.
thank you
.
நாஜpக்களின் கொடுமையை அழுத்தமாக பதிவு செய்த திரைப்படங்களில் சிண்ட்லர்ஸ் லிஸ்டும் ஒன்று. படம் 1993 ல் வெளியான போது சிலர் படத்தை எதிர்த்தார்கள். ஹிட்லர் காலத்தில் நாஜpக்களால் ஒடுக்கப்பட்ட யூதர்கள் படம் வெளியான காலகட்டத்தில் நாஜpக்கள் செய்த அதே அதிகார அடக்குமுறையை பாலஸ்தீனத்தின் மீது செய்து கொண்டிருந்தனர். இஸ்ரேலின் இரத்த வெறியை அம்பலப்படுத்த வேண்டிய காலகட்டத்தில் அவர்களின்பால் கருணையை உருவாக்கும் சிண்ட்லர்ஸ் லிஸ்ட் தேவையா என்பதே படத்தை எதிர்த்தவர்களின் கேள்வியாக இருந்தது.
சவுந்தாpன் கட்டுரை இந்த கேள்வியையும் உள்ளடக்கிய திசையில் பயணித்திருந்தால் இன்றைய நவீன நாஜpக்களின் தலையெடுப்புடன் நவீன யூதர்களின் அதிகார அடக்குமுறையை பற்றியும் வந்திருக்கும், கட்டுரையும் முழுமையடைந்திருக்கும்.