பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதுவும் எதிர்பாராத வகையில் பஞ்சாப் மாநிலத்தின் 16-வது முதல்வராக சரண்ஜித் சிங் பதவியேற்றார். இவர் பட்டியலினச் சாதியைச் சேர்ந்தவர் என்பதால் இது புதிய உத்தியாக பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் கோஷ்டி மோதல் காரணமாக பதவி விலகினார். பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் காங்கிரஸ் தலைமை அங்கு நிலவும் கோஷ்டி மோதலை சமாளித்து யாரை முதல்வராக நியமிக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில், காங்கிரஸ் டெல்லி மேலிட முடிவின் படி சர்ண்ஜித் சிங் சன்னி முதல்வரானார். இவரை காங்கிரஸ் உறுப்பினர்கள் முதல்வராக தெரிவு செய்தனர்.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சீக்கிய மதப்பிரிவில் ராம்தஸியா என்ற பட்ட்டியலினமும் ஒன்று. ராஜிநாமா செய்த அமரீந்தர் சிங் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த சரண்ஜித்சிங்கிற்கு பரவலாக நற்பெயர் உள்ளது. மிக வறுமை நிலையில் மக்ரோனா காலன் என்ற கிராமத்தில் 1972-ஆம் ஆண்டு பிறந்த சரண்ஜித்சிங் காங்கிரஸ் டெல்லி மேலிடத்தின் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்தார்.
பஞ்சாப் மாநிலத்தில் மொத்த மக்கள் தொகையில் 35 சதவிகிதம் பட்டியலின வாக்காளர்கள் உள்ளனர். சரண்ஜித்சிங்கை முதல்வராக்கியிருப்பதன் மூலம் பட்டியல் சமூக வாக்குகள் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தங்களுக்கு கிடைக்கும் என காங்கிரஸ் நம்புகிறது.