இன்று பஞ்சாப் மாநிலத்தில் தனது தலைமையில் நடைபெற இருந்த நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி. இது தொடர்பாக பல செய்திகள் வெளியாகி உள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் பிரதமர் மோடி கலந்து கொண்டு 42,750 கோடி செலவில் திட்டங்களை துவங்கி வைப்பதற்காக இன்று காலை தனி விமானம் மூலம் பஞ்சாப் மாநிலத்திற்குச் சென்றார் பிரதமர் மோடி. விமான நிலையத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் நிகழ்ச்சி நடைபெறும் ஃபெரோஸ்பூர் இருக்கும் நிலையில், நிகழ்ச்சி நடைபெறும் மேடைக்கு அருகில் பிரதமர் இறங்குவதற்கான ஹெலிபேட் அமைக்கப்பட்டது.
ஆனால் கடைசி நேரத்தில் குன்னூர் விமான விபத்தை சுட்டிக் காட்டி வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயணத்தை ரத்து செய்யுமாறு அவரிடம் பாதுகாப்பு அதிகாரிகள் சொல்ல அதை ஏற்றுக் கொண்டு சாலை மார்க்கமாக பயணம் மேற்கொண்டார் பிரதமர் மோடி.
சாலைமார்க்கமாக மோடி சென்று கொண்டிருந்த போது ஒரு இடத்தில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் பிரதமர் சென்ற வாகனத்தை மேம்பாலம் ஒன்றில் நிறுத்தினார்கள். சுமார் 20 நிமிடங்கள் வரை பிரதமரின் வாகனம் அங்கிருந்து நகர்ந்து செல்ல முடியவில்லை. இதனால் உடனடியாக பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டு விமானம் வழியாக டெல்லி திரும்பினார் பிரதமர்.
பஞ்சாப் செல்லும் வழியில் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் நடந்தது அதிர்வலைகளை உருவாக்கியுள்ள நிலையில் உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக பஞ்சாப் மாநில அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. மாநில அரசு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை என குற்றம் சுமத்தியுள்ளது.
ஆனால், வேளாண் சட்டங்கள் தொடர்பாக பாஜகவுக்கும் அதன் பிரதமர் மோடிக்கும் மக்களிடம் இருக்கும் எதிர்ப்பலையைத்தான் இது காட்டுவதாக எதிர்க்கட்சியினர் குறிப்பிட்டுள்ளார்கள்.