வாக்குறுதிகளை மக்கள் நம்புகிறார்களோ இல்லையோ, வாக்குக்களைத் தருமாறு கோருகிறவர்கள் வாக்குறுதிகளை அள்ளி அள்ளி வழங்குகிறார்கள். வேறு பொருட்களையும் வழங்குவார்கள். தேர்தலின் தன்மையையும் வென்றவருக்கு வருகிற நன்மையையும் பொறுத்து அவை வேறுபடலாம். இப்போது நடப்பது முழு நாட்டின் மீதும் கட்டுப்பாடற்ற அதிகாரம் செலுத்தப் போகிறவராக ஒருவரைத் தெரிந்தெடுப்பதற்கான தேர்தல்.
இரண்டு லட்சம் வரையிலான தமிழர் அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்கும் உரிமையற்று இருக்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் ஏறத்தாழ எல்லாருமே அகதி முகாங்கள் எனப்படுகிற திறந்த வெளிச் சிறைக் கூடங்களில் உள்ளனர். அவர்களை விட, ஆதாரமற்ற ஐயங்களின் பேரில் மறியலில் வாடுகிற பல ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். அவர்களிற் குறிப்பிடத்தக்க தொகையினர் சிங்களவரும் முஸ்லிம்களும் மலையகத் தமிழருமாவர். இவர்களெல்லாரும் போரையும் பயங்கரவாதத்தையுங் காரணங் காட்டி வாக்குரிமை மறுக்கப்பட்டவர்கள். வெறும் இனத் துவேஷத்தாலும் அதிகாரத் துஷ்பிரயோகத்தாலும் அரசியல் தலைவர்களது அசட்டையாலும் வாக்குரிமையற்றோராக்கப்பட்டுப் பத்தாயிரக் கணக்கானோர் மலையகத்தில் உள்ளனர். அவர்களைப் பற்றிய அற்ப அக்கறையும் அற்றவர்களாகவே இந்தச் சனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிற பிரதான வேட்பாளர்கள் மட்டுமல்லாமல் பிற வேட்பாளர்களும் இருக்கிறார்கள். ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதையோ ஒரு பொது வேலைத்திட்டத்தை முன்வைப்பதையோ பற்றிய அக்கறை சிறிதுமற்று மூளை வரண்டு கிடக்கும் மூன்று இடதுசாரி வேட்பாளர்களிடமிருந்தோ முற்றிலும் சுயலாபத்துக்காகத் தேர்தலில் நிற்கிற பிற தமிழ், முஸ்லிம், சிங்கள வேட்பாளர்களிடமோ நாம் எதை எதிர்பார்க்க முடியும்?
அந்த வேட்பாளர்கட்காகப் பிரசாரத்தை முன்னெடுக்கிறவர்கள் இடத்துக்கேற்றவிதமாக ஒவ்வொரு வாக்குறுதிப் பட்டியலாக வழங்கிக் கொண்டு போகிறார்கள். சனாதிபதியாக இருக்கிறவர் ஏ-9 பாதையைத் திறந்து விட்டதோடு முகாம்களில் இருந்து ஏழாயிரத்திற்கு மேற்பட்டோரை விடுவித்துமிருக்கிறார். இன்றும் எத்தனையோ அற்புதங்கள் நிகழலாம். எல்லாச் சிறைக் கைதிகளையும் விடுவித்து எல்லா அகதி முகாம்களையும் மூடி எல்லாரையும் தங்கள் இருப்பிடங்களுக்கு அனுப்புவது கூட இயலாததல்ல. ஆனால் திறக்கப்பட்ட பாதையை மூடவும் விடுவிக்கப்பட்ட கைதிகளை மறுபடியும் சிறைப்பிடிக்கவும் மக்களைத் தமது காணிகளிலிருந்து விரட்டவும் எத்தனை நாட்கள் எடுக்கும்? எனவே இந்த நாடகங்கள் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் வரை நடக்கும்.
சரத் பொன்சேகா தமிழர் தேசியக் கூட்டணித் தலைவருக்கு வாக்குறுதிகளை வழங்கியுள்ளாராம். அந்த வாக்குறுதிகளைப் பற்றி அவரை ஆதரித்துப் பிரசாரம் செய்யும் ஜே.வி.பி. அறியுமா? அல்லது ஜே.வி.பிக்கு வேறுவிதமான வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளனவா?நம்பி ஏமாந்து விட்டோம் என்பதே தமிழ்க் குறுந்தேசியவாதத் தலைவர்களது பாட்டாக ஒரு நூற்றாண்டுக் காலமாக இருந்து வந்திருக்கிறது. ஒவ்வொரு தருணத்திலும் நம்பக்கூடாதவர்களை நம்புவதும் ஏமாந்த பிறகு அழுது புலம்புவதும் அவர்களுடைய வரலாறாகிவிட்டது.
அவர்கள் ஏமாறுவது ஒருபுறமிருக்க, அவர்கள் செய்து கொள்ளுகிற உடன்படிக்கைகளால் பாதிக்கப்பட்டோர் சாதாரண மக்களாகவே இருந்து வந்துள்ளனர்.
இவ்வளவு காலமும் நம்புவதற்கு ஒரு அடிப்படை இருக்கிறதாகச் சொல்லவாவது ஏதோ ஒரு நியாயத்தைக் காட்ட முடிந்தது. இப்போது? எந்தவிதமான அடிப்படையுமே இல்லாமல் எதிர் பார்ப்புக்களைப் பற்றி ஏதேதோ சொல்லப்படுகிறது. இவர்களுக்குத் தமிழ் மக்கள் பற்றிய அக்கறை இருந்திருந்தால், தமிழ் மக்களின் சார்பான கோரிக்கைகளைப் பட்டியலிட்டு அவற்றைப் பூரணமாக ஏற்கும் வேட்பாளரையே ஆதரிப்போம் என்று எப்போதோ சொல்லியிருக்கலாமே ஏன் செய்யவில்லை?
புதிய ஜனநாயகக் கட்சி பொது வேட்பாளர் பற்றிப் பேசிய போது, தமிழ் மக்கள் சார்பான கோரிக்கைகளை எடுத்துக் கூறியிருக்கலாமே ஏன் செய்யவில்லை?
ஏன் செய்யவில்லை என்று கேட்பது தவறான கேள்வி, ஏன் செய்ய வேண்டும் என்ற கேள்வி கூடப் பொருத்தமானது. அவர்கள் யாருடைய நலன்களை முன்னெடுக்கிறார்கள் என்று அறிந்தவர்கட்கு அவர்களுடைய அக்கறைகள் விளங்கும். அந்த அக்கறைகள் தமிழ் மக்களின் நலன் சார்ந்தவை அல்ல. என்னென்ன பொய்யைச் சொல்லித் தமிழரின் வாக்குக்களைப் பெற முடியுமோ அதையெல்லாம் கூசாமற் சொல்வார்கள். கடந்த ஓராண்டுக்குள் மட்டும் தமிழர் தேசியக் கூட்டணித் தலைவர் அடித்த அரசியற் குத்துக்கரணங்கள் இன்னும் இரண்டு தலைமுறைக்குப் போதும். இந்தவிதமான சேர்க்கஸ் கோமாளிகள் என்ன சொல்லுகிறார்களோ அப்படியே செய்யுங்கள் என்று சொன்னவர் வேறெவருமல்ல, தமிழ்ப் பழமைவாதத்தின் தூணாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ள ஒரு முன்னாள் உயர்நீதிமன்ற நீதவான். தமிழர் தேசியக் கூட்டணி அங்கே இருப்பதா இங்கே வருவதா எங்கேன் மறைவதா என்று தடுமாறிக் கொண்டிருப்பதாக எல்லாரும் எண்ணிக் கொண்டிருந்த போது தான் அவர்கள் சொல்லுகிறபடி வாக்களியுங்கள் என்று நீதியின்றிப் பேசுகிறார் நீதிபதியார். அவர்கள் என்ன சொல்வார்கள் என்று தெரிந்து சொன்னாரா, அல்லது என்ன சொல்ல வைக்கக் கொழும்புக் கனவான்கள் திட்டமிடுகிறார்கள் என்று அறிந்து சொன்னாரா?
யாழ்ப்பாணக் கத்தோலிக்க ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் தமிழ் மக்கள் தமது வாக்குக்களை வீனாக்கக் கூடாது என்பதனால் வாக்களித்தே தீர வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் அப்படியானால் எந்தக் கொலைகார ஆட்சி வந்தாலும் பரவாயில்லை. அதைத் தெரிவு செய்வதில் தமிழருக்கு ஒரு பங்கு வேண்டும் என்பது தான் அவரது அக்கறையா?
ஒய்வு பெற்ற பேராசிரியர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஒரு வேட்பாளரையும் பேராசிரியர் சிவத்தம்பி இன்னொருவரையும் மனதில் வைத்துக் கொண்டு அதை வெளியே சொல்லாமல் தமிழரை வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். சில மாதங்கள் முன்பு தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடர்பாகச் சிவத்தம்பி அடித்த குத்துக்கரணங்கள் சம்பந்தனையும் மலைக்க வைத்திருக்கும்.
என்றாலும் இந்தத் தமிழ்ப் பெருங்குடி மக்கள் எல்லாருக்கும் மட்டுமன்றி ஊடகத்துறை எசமானர்கட்கும் உள்ள அடிப்படையான கவலை, தமிழ் மக்கள் யாழ்ப்பாண நகராட்சித் தேர்தலின் முன்னுதாரணத்தைப் பின்பற்றிவிடக் கூடும் என்பது தான். இம்முறையும் கொழும்பு வாழ் தமிழ் நடுத்தர வர்க்கம் வழமையாக வாக்களித்தது போலவே வாக்களிக்கும் என்பதில் அவர்களுக்கு ஐயமில்லை. வடக்கு-கிழக்கில் முக்கியமாக வன்னியிலும் குடா நாட்டிலும் மக்கள் பகிஷ்கரிப்பதை அவர்கள் அஞ்சக் காரணம் அவர்கள் விரும்பிய வேட்பாளர் வெல்லுவாரோ தோற்பாரோ என்ற கணிப்புக்கும் அப்பாற்பட்டது.
பகிஷ்கரிப்பும், அதைவிட முக்கியமாக, வாக்குச் சீட்டுக்களைப் பழுதாக்குவதும் வழமையான ஒரு அரசியல் நடத்தையாகி விடலாம் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். அவ்வாறு நடந்தால் மக்கள் தேர்தல் அரசியலிலிருந்து விலகி மாற்று அரசியல் ஒன்றை நோக்கிப் பெயர்வார்கள் என்று அஞ்சுகிறார்கள். பகிஷ்கரிப்பு என்பது அரசியலிருந்து விலகி நிற்பது என்று அவர்கள் சொன்னாலும், அது உண்மையில் அவ்வாறானதல்ல என்று அவர்கள் நன்கு அறிவார்கள். மக்கள் பங்களாதேஷ் தேர்தல்களைப் பகிஷ்கரித்தார்கள் நேபாளத் தேர்தல்களைப் பகிஷ்கரித்தார்கள். பகிஷ்கரிப்பு என்பது காத்திரமான ஒரு அரசியல் நடவடிக்கையாக அமைவது எப்போதென்றால் மக்கள் முழுமையான மனத் தெளிவுடன் அதில் ஈடுபடுகிற போது தான்.
2005 முடிவில் அவ்வாறு நிகழவில்லை. விடுதலைப் புலிகள் அதற்கான வாய்ப்பை வழங்கவில்லை. எனவே தான் இம்முறை பகிஷ்கரிப்புக்கும் பழுதாக்கலுக்குமான வேண்டுகோளைப் புலிகளின் கட்டளையுடன் ஒப்பிட முடியாது. ஒப்பிடுவதானால் யாழ்ப்பாண நகராட்சித் தேர்தலில் மக்கள் மனம்விரும்பி விலகி நின்றதுடன் ஒப்பிடலாம்.
எங்கள் பெருங்குடி மக்களும் ஊடக எசமான்களும் இவற்றை அறியாதவர்களல்ல. அவர்கள் அஞ்சுவது ராஜபக்ஷ ஆட்சி மீளுவதையோ சரத்பொன்சேகா சனாதிபதியாவதையோ அல்ல. இரண்டுக்கும் அப்பால் இன்னொரு அரசியல் சக்தி எழுச்சி பெறுவதைப் பற்றியே அவர்கள் அஞ்சுகிறார்கள். அதனாலே தான் மக்களை இன்னமும் தேர்தல் அரசியலில் ஒரு பகுதியாகப் பேணுவதில் அவர்களுடைய கவனம் குவிந்துள்ளது.
விவேகமான பார்வை.ஆனால் இடதுசாரிகள் பாராளுமன்ற வாதத்துக்கூடாகப் பொதுவேட்பாளரை நிறுத்துவது குறித்து எனக்கு முரண்பாடுண்டு.