24.09.2008.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரிய வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், சிறைத்துறை விதிகளுக்கு உட்பட்டு மனுவை மீண்டும் மறு பரிசீலனை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டதோடு, நளினியை விடுதலை செய்ய முடியாது என்ற தமிழக அரசின் முந்தைய உத்தரவையும் நீதிமன்றம் ரத்து செய்தது.
1991ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூருக்கு வந்தபோது மனித வெடிகுண்டுக்கு அவர் பலியானார். இந்த வழக்கில் சென்னையை சேர்ந்த நளினிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
பின்னர் கருணை அடிப்படையில் மரண தண்டனை ரத்து செய்துவிட்டு, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதிகளை அரசு முன்கூட்டியே விடுதலை செய்து வருகிறது என்றும், ஆனால், 16 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் என்னை மட்டும் விடுதலை செய்யவில்லை என்றும் மனுவில் கூறியிருந்தார்.
நன்னடத்தை அதிகாரி பரிந்துரை செய்தும் ஆலோசனை ஆணையம் அதை பரிசீலிக்காமலேயே என்னை விடுதலை செய்ய மறுத்துவிட்டது என்று மனுவில் கூறியிருந்தார்.
இதேபோல, இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரும் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யவேண்டும் என்றும் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த இரு மனுக்களையும் நீதிபதி நாகமுத்து விசாரித்து வந்தார். நளினி உள்ளிட்ட மூன்று பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய இயலாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் விவாதம் முடிந்ததால் வழக்கின் தீர்ப்பை கடந்த 19ஆம் தேதி நீதிபதி நாகமுத்து தள்ளி வைத்தார்.
இந்த வழக்கில் இன்று நீதிபதி நாகமுத்து அளித்த தீர்ப்பில், நளினி முன்கூட்டியே விடுதலைக் கோரி தாக்கல் செய்த மனுவை ஆலோசனை குழு சிறை விதிகளுக்கு உட்பட்டு பரிசீலிக்கவில்லை. இந்த வழக்கில் நன்னடத்தை அதிகாரியானவர் நளினியை முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்று கூறியிருந்தும் ஆலோசனைக்குழு அதனை நிராகரித்ததற்கான காரணத்தை குறிப்பிடவில்லை.
அதனை அடிப்படையாக கொண்டு தமிழக அரசு நளினியை விடுதலை செய்ய முடியாது என்று உத்தரவிட்டது சரியானது அல்ல. எனவே அரசின் உத்தரவை ரத்து செய்கிறேன். ஆலோசனைக்குழு சிறை விதிகளுக்குட்பட்டு மீண்டும் ஒன்று கூடி நளினியின் கோரிக்கை மனு மீது முடிவு எடுக்க வேண்டும். அப்போது அனைத்து அம்சங்களும் ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்.
பிறகு ஆலோசனைக்குழுவின் பரிந்துரையின்பேரில் அரசு சட்டவிதிகளுக்குட்பட்டு நளினியை விடுதலை செய்வது குறித்தோ அல்லது மறுத்தோ முடிவெடுக்கலாம். மீண்டும் தண்டனை குறைப்பு செய்ய இந்திய அரசியலமைப்புச் சட்டம் 161வது பிரிவின்படி ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.
நளினியின் கோரிக்கை மீது முடிவெடுக்க மாநில அரசுக்கும் அதிகாரம் உள்ளது. இவ்விடயத்தில் அரசும் ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் என்று நீதிபதி நாகமுத்து தீர்ப்பளித்தார்.
webdunia.com