‘சூத்திரதாரிகள் சட்டத்தின்பிடியிலிருந்து தப்பக்கூடாது’- மகளிர் அமைப்புகள்
இலங்கையின் வடக்கே சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துச் செல்வதைக் கண்டித்து மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இத்தகைய சமூக விரோத செயல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். நெடுந்தீவில் சிறுமி ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றபோதே இத்தகைய எதிர்ப்பு காட்டப்பட்டது. ‘வடக்கில் அண்மைக்காலமாக சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்திருக்கின்றன, வன்முறைகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து இலகுவாக தப்பிச் செல்வதைத் தடுக்கவேண்டும் என்பதற்காகவே இந்தப் போராட்டத்தை நடத்தினோம்’ என்று போராட்டத்தில் கலந்துகொண்ட ரஜனி சந்திரசேகரம் சுட்டிக்காட்டினார். பாதிக்கப்பட்ட பெண்களை பாதுகாக்கவும் அவர்களுக்கு உரிய நீதியை வழங்கவும் தொடர்ந்தும் போராட்டம் நடத்தவேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தச் சம்பவத்தில் கண்டெடுக்கப்பட்ட தடயப் பொருட்களை பகுப்பாய்வுக்கு உட்படுத்துவதற்கான உத்தரவை வழங்கிய நீதிமன்றம், இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருக்கின்றது
பாலியல் வதைக்குட்பட்டு சாகடிக்கப்பட்ட சிறுமியின் ஈரம் காயமுன்பே அரசியல் காவடிகள் கொலைக்காரனைக் காக்கப் பேரம் பேசிவிட்டார்கள். இதனைதட்டிக்கேட்ட பலரும் பேசாமடந்தைகளாக்கப் பட்டநிலையிலும் தொடர்கிறது போராட்டம் என்கின்ற செய்தி மகிழ்வைத்தருகின்றது. பேசாப்பொருளை பேசவல்ல புலம்பெயர் சொகுசுப்பெண்ணியவாதிகள் கண்களில் இந்தச்சிறுமியின் கொடிய மரணம் கன்ணில் பட்டும் மெளனித்திருந்த வேளையில் அடக்குமுறைக்குள்ளும் புலத்துப்பெண்ணிய வாதிகள் நடாத்திய இப்போராட்டம் கண்களை ஈரமாக்குகின்றது.