அநீதியான நீட் தேர்வு கடந்த ஞாயிற்றுக் கிழமை முடிந்தது. 18 நகரங்களில் 224 மையங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளார்கள்.
இந்நிலையில், இந்த கல்வியாண்டில் தமிழ்நாட்டில் மட்டும் மூன்று மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். தனுஷ் , கனிமொழி என இரு மாணவர்கள் மதிப்பெண் தொடர்பான கவலையால் தற்கொலை செய்து கொண்ட நிலையில் , நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த தலையாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சவுந்தர்யா என்ற மாணவி ஞாயிற்றுக் கிழமை நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால், தான் நீட் தேர்வை சரியாக எழுத வில்லை என்ற கவலையிலும் மன உளைச்சலிலும் இருந்துள்ளார்.
இந்நிலையில், மாணவி சவுந்தர்யா இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வு சரியாக எழுதவில்லை இதனால் மதிப்பெண் குறையும் என விரக்தியில் மாணவி சவுந்தர்யா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.