வன்னியைப் பாதுகாப்பதில் நடத்த போராட்டத்தில் மாபெரும் அழிவுகளைச் சந்தித்து ஆயுதப் போராட்டம் நிறைவுற்றுள்ள இந்த சந்தர்ப்பத்தில் மீளவும் நிலப்பறிப்புக்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.
இவற்றைத் தடுப்பதற்கு கட்சிகளான நாம் ஒன்றுபட்டு செயற்படும்போது மக்களும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். என புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கோரிக்கை விடுத்துள்ளார்
வவுனியாவில் நேற்று அனுஷ்டிக்கப்பட்ட பண்டார வன்னியனின் 208 ஆவது நினைவு தின நிகழ்வல் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
பிரித்தானிய ஆட்சிக் காலத்தின்போது பண்டாரவன்னியன் வன்னி மண்ணைக் காப்பதற்காக வெள்ளையர்களை எதிர்த்துப் போராடினார். பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு சாத்வீக ரீதியாக வன்னி மண்ணைக் காப்பதற்காக முதலில் எமது காந்தீயம் அமைப்பின் ஊடாக, இனக்கலவரங்களால் ஏதிலிகளாக்கப்பட்டு திக்குத் தெரியாது நின்ற பெருந்தொகையான மலையகத் தமிழ்மக்களை வன்னியின் பல கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நாம் குடியேற்றினோம். அத்துடன் 90 களில் 72 கிராமங்களை உருவாக்கி தமிழ்மக்களைக் குடியேற்றி வன்னியைப் பாதுகாப்பதில் பெரும் பங்கினை வகித்தோம். வன்னியைப் பாதுகாப்பதில் நடந்த போராட்டத்தில் மாபெரும் அழிவுகளைச் சந்தித்து ஆயுதப் போராட்டம் நிறைவுற்றுள்ள இந்த சந்தர்ப்பத்தில் மீளவும் நிலப்பறிப்புக்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இவற்றைத் தடுப்பதற்கு கட்சிகளான நாம் ஒன்றுபட்டு செயற்படும் போது, மக்களும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
வவுனியா நகரசபைத் தலைவர் ஐ.கனகையா வவுனியாவில் அமைந்துள்ள பண்டாரவன்னியனின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து நினைவுதின நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். இதனைத் தொடர்ந்து வவுனியா நகரசபை மண்டபத்தில் நினைவுதினக் கூட்டம் இடம்பெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வினோ நோகதராதலிங்கம், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் சண் மாஸ்டர் மற்றும் கட்சிகளின் பிரதிநிதிகளும் ஆதரவாளர்களும் பெருமளவு பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ஒட்டிசுட்டான், மாங்குளம் மற்றும் வவுனியா பாடசாலைகளின் சிறார்கள் பங்குபற்றிய பல்வேறு கலைநிகழ்ச்சிகள் இதன்போது இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.