கிழக்கு மாகாணத்தில் தமது கட்சி உறுப்பினர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் சட்டத்தின் அடிப்படையில் அதற்கான தண்டனையை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது. தமது கட்சி உறுப்பினர்கள் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் தாம் பின்னிற்கப் போவதில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது. இதேவேளை வாழைச்சேனையில் வைத்து தமது உறுப்பினரான காளியப்பன் குணசீலன் என்பவர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினால் கடத்திச் செல்லப்பட்டு கடந்த 27 ம் திகதி கொலை செய்யப்பட்டிருந்தார். எனினும் இது தொடர்பாக காவல்துறையினர் உரிய நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை. இதற்கிடையில் சட்டம் ஒழுங்கை மதிப்பவர்கள் என்ற வகையில் காவல்துறையினர் கேட்டுக்கொண்டதற்கு அமைய தமது வாகனங்கள் காவல்துறையினருக்கு ஒப்படைக்கப்பட்டன. எனினும் அந்த வாகனங்கள் ஆட்கடத்தலுடன் தொடர்புடைய வாகனங்கள் என தெரிவிக்கப்பட்டமை குறித்து தாம் ஆச்சரியம் அடைந்ததாக ஈழமக்கள் ஜனநாயக கட்சி குறிப்பிட்டுள்ளது