உலக வரலாற்றில் ஒடுக்கப்படும் சமூகங்கள் அதன் நிலையில் அறிவார்ந்த சமூகமாக சில தருணங்களில் இருக்கின்றன. தாங்கள் பலவீனமாக இருக்கிறோம் என்ற பிரக்ஞையிலிருந்து அதன் தாக்கம் எதிரொளிக்கிறது. ஒடுக்கப்படும் சமூகம் விழிப்படைந்த நிலைக்கு மாறும் போது அங்கிருந்து சில மாமனிதர்கள் உருவாகிறார்கள். இதன் வரலாற்று உதாரணமாக அயர்லாந்தை குறிப்பிடலாம். ஜேம்ஸ் ஜாய்ஸ், ஆஸ்கர் ஒயில்ட், பெர்னார்ட் ஷா, ஜோனதான்,வில்லியம் பட்லர் போன்றவர்கள் அயர்லாந்தின் இந்த ஒடுக்கப்படும் பின்னணியில் வந்தவர்கள். இதன் தொடர்ச்சியில் தான் நாம் பாலஸ்தீன் பிரதேசத்தையும் அணுக வேண்டியதிருக்கிறது. 1917 ஆம் ஆண்டின் பால்பர் பிரகடனத்திற்கு பிறகு 1948 ல் இஸ்ரேலிய உருவாக்கத்திற்கு பிறகு பாலஸ்தீன் ஏராளமான அறிவார்ந்த மனிதர்களை உற்பத்தி செய்திருக்கிறது. எட்வர்ட் செய்த், ஹனான் அஸ்ரவி, இப்ராஹிம் அபுலுகுத், ரோஸ்மேரி செஹலான், மஹ்மூத் தர்வீஷ், அதோனிஸ், ஹிசாம் சரபி போன்றவர்கள் குறிப்பிடதகுந்தவர்கள். இவர்களில் எட்வர்ட் செய்த்தை போலவே ஹிசாம்சரபி மத்தியகிழக்கு வரலாற்றில் தவிர்க்கமுடியாதவர். இவரின் பிறப்பு 1927 ல் பாலஸ்தீன் பகுதியான ஜபாவில் நிகழ்ந்தது.இவரின் குடும்பம் பரம்பரையான பாலஸ்தீன் பின்னணியை கொண்டது. பாலஸ்தீனின் ரமல்லாவில் பள்ளிப்படிப்பை முடித்த ஹிசாம் கல்லூரி படிப்பை லெபனானின் பெய்ரூட் நகரில் உள்ள அமெரிக்க பல்கலைகழகத்தில் முடித்தார். பின்னர் 1949 ல் அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்த ஹிசாம் சிகாகோ பல்கலைகழகத்தில் வரலாற்றில் பட்டமேற்படிப்பை முடித்தார். இதனை தொடர்ந்து அதே பல்கலைகழகத்தில் கலாசாரத்தின் வரலாறு என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். அமெரிக்க புலப்பெயர்வும், தான் படித்த படிப்பும், அறிவார்ந்த உள்வாங்கலும் சரபிக்கு அரசியல் ரீதியான செயல்பாடு மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது. அத்தருணத்தில் சிரிய சோசலிச தேசிய கட்சியில் (SSNP)இணைந்த ஹிசாம் சரபி அதன் தீவிர செயல்பாட்டாளராக மாறினார். அக்கட்சியின் நிறுவனரான அந்தன் சாதாவின் ஆளுமை குணாதிசயம் சரபியின் சிந்தனையில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரின் உறுதிபாடு, திடமான மனநிலை, சமரசமற்ற பார்வை இவை எல்லாம் சரபியை ஈர்த்தன. அந்தன் சாதா சரபியை தன் கட்சியின் தூணாக கருதினார்.ஓரு வலுவான அறிவுஜீவியாக வருவதற்கான எல்லாவாய்ப்புகளும் சரபியிடம் இருப்பதாக சாதா நம்பினார். ஹிசாம் சரபி அமெரிக்காவில் படித்து கொண்டிருந்த காலத்திலேயே பாலஸ்தீனிற்கு எதிரான இஸ்ரேலின் முதல் ஆக்கிரமிப்பு நிகழ்ந்தது. அந்த துயர நிகழ்வு சரபியின் ஆழ்மன பிரக்ஞையை அதிகப்படுத்தியது. அமெரிக்காவிலிருந்து திரும்பிய பின்னர் SSNP யின் அதிகாரபூர்வ பத்திரிகையான Al-jil al jadid இன் ஆசிரியராக சிறிதுகாலம் பணியாற்றினார். SSNP அக்காலத்தில் சிரியாவின் தேசிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்த நலன்களை முன்வைத்து போராடியது.இதை சிரிய எதேச்சதிகார அரசாங்கம் கடுமையாக ஒடுக்கியது. பிந்தைய ஆண்டுகளில் அக்கட்சியை தடை செய்தது. அதன் உறுப்பினர்கள் பலர் சிறைபிடிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இறுதியாக அந்தன் சாதாவும் கொல்லப்பட்டார். இத்தருணத்தில் ஜோர்டானுக்கு சென்ற ஹிசாம் சரபி அங்கிருந்து அமெரிக்காவிற்கு சென்றார். 1953 ல் ஜார்ஜ் டவுண் பல்கலைகழகத்தில் தத்துவவியல் துறையில் ஹிசாம் வேலைக்கு இணைந்தார். குறிப்பிட்ட சில ஆண்டுகளிலேயே அவருக்கு பேராசிரியர் பதவி கிடைத்தது. இதன் பிறகு சரபியின் தத்துவார்த்த மற்றும் அரசியல் வாசிப்பு ஆரம்பமானது. இது சார்ந்து ஆங்கிலத்தில் நிறைய எழுதினார். சரபி இந்த புலப்பெயர் வாழ்வை மௌன நாடுகடத்தல் (Silence Exile) என்றார்.1967 அரபு-இஸ்ரேல் போரும்,1968 மாணவர் இயக்கமும் சரபியை அறிவார்ந்தும், அரசியல்ரீதியாகவும் அதிகம் சிந்திக்க வைத்தது. அதே காலகட்டத்தில் அதுவரையிலான தன் தாராளவாத சிந்தனை போக்கை கைவிட்டு மார்க்சியத்தின் மீது ஈர்ப்பு கொள்ள ஆரம்பித்தார். மார்க்ஸ், பிராய்ட், லகான் குறித்து அதிகம் வாசிக்க தொடங்கினார்.
ஹிசாமின் இந்த ஆளுமைகள் மீதான வாசிப்பு அவரின் பார்வையை வெகுவாக கலைத்து போட்டது. அதுவரை அரபு சமூகம் குறித்து அவர் நம்பியிருந்த, கொண்டிருந்த பார்வை மாறியது. சமூகம் பற்றிய புரிதல் அவரின் தத்துவார்த்த வாசிப்பின் வடிவத்தில் வெளிப்பட்டது. வாசிப்பு மற்றும் சிந்தனை சார்ந்த அகப்பிரக்ஞை ஹிசாமின் போக்கில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியது. இந்த மாறுதல் பாலஸ்தீன் விவகாரங்கள் நோக்கி அவரை திருப்பியது. இது குறித்து பல்கலைகழக வட்டாரத்திலும், பிற அறிவுஜீவிகளுடனும் உரையாடல் நடத்திய ஹிசாம் சரபி 1970 ல் லெபனான் திரும்பினார். அங்குள்ள பாலஸ்தீன் திட்டமிடல் மையத்தில் இணைந்து விடுதலை போராட்டம் குறித்த செயல்திட்டங்களை வகுத்தார். அதே நேரத்தில் பெய்ரூட் அமெரிக்க பல்கலைகழகத்தில் வருகை பேராசிரியராக பணிபுரிந்தார். அந்த கட்டத்தில் அவரின் பல ஆங்கில ஆக்கங்கள் அரபு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. குறிப்பாக அவரின் Arab intellectuals and West அரபு மொழியில் வெளிவந்து அரபுலகில் மிகுந்த அதிர்வை ஏற்படுத்தியது. மேலும் பாலஸ்தீன் சுயநிர்ணய உரிமை குறித்து பாலஸ்தீன் பிராந்தியத்திலும், அரபுலகிலும் மிகுந்த விழிப்பையும், முன்னோக்கு திட்டங்களையும் உருவாக்கியதில் சரபியின் பங்களிப்பு அதிகம். அதே காலகட்டத்தில் பாலஸ்தீன் பற்றிய ஆய்விதழ் ஒன்றை சரபி தொடர்ச்சியாக வெளிக்கொண்டு வந்தார். அதன் ஆசிரியராக இருந்து ஆய்விதழை கூர்மையாக முழுமைப்படுத்தினார். ஜார்ஜ் டவுன் பல்கலைகழகத்தில் “தற்கால அரபு சமூக ஆய்வு மையத்தை” சரபி தொடங்கினார். இது அமெரிக்க பல்கலைகழகங்களிலேயே முதல் ஆய்வு மையமாகும்.
ஹிசாம் சரபியின் ஆய்வு நூல்களில் குறிப்பிடதகுந்தது Neopatriarchy: A theory of distorted change in arab society . வெளிவந்த தருணத்தில் மத்தியகிழக்கு அரபுலகிலும், மேற்கத்திய அறிவுத்துறை வட்டாரங்களிலும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அதில் புரட்சிக்கு பிந்தைய சமூகத்தில் சமூக மாற்றம் என்பது உடனடியான புரட்சியின் மூலமோ அல்லது வேறு நடவடிக்கைகள் மூலமோ சாத்தியமில்லை. அது மிகுந்த சிக்கலானதும், நுட்பமானதுமான நடவடிக்கை. ஆக சமூக மாற்றத்தை நீண்ட கால , கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட, அறிவார்ந்த வழிகளில் நாம் அடைவது அவசியம் என்றார். நவ தந்தைவழி சமூகத்தில் ஆண் முதன்மை பெறும் போது குடும்பத்தில் ஆணாதிக்கம் என்பது தர்க்க பூர்வமாக நீட்சியடைந்து சமூக மேலாண்மையாக மாறுகிறது என்றார் சரபி. இது அரபுலகில் ஏற்படுத்திய தாக்கம் குறித்த சர்பியின் பார்வை ஆழமானது. வேறொரு அர்த்தத்தில் சொன்னால் அரபு சமூகத்தையே தந்தை வழி சமூகமாக சரபி பார்த்தார். மேற்கில் நவீனத்துவம் பரிணாமம் அடைந்த போது மத்திய கிழக்கில் அதன் எவ்வித தாக்கமும் ஏற்படாததற்கு காரணம் அரபுலகின் கெட்டியான தந்தைவழி சமூக அமைப்பே என்றார் சரபி. மேலும் இது குறித்து அரபுலகின் அறிவுஜீவிகளுக்கு சரபியின் எச்சரிக்கை முக்கியமானது. அரபுலக அறிவுஜீவிகள் தங்களின் அறிவார்ந்த கோட்டை கவனமாக தேர்வு செய்யவேண்டும். அது சுதந்திரமாக இருப்பதுடன் கருத்துருவங்களையும், மற்ற கருவிகளையும் உள்ளடக்கியதாக நவீனத்துவத்திலிருந்து பின்நவீனத்துவத்திற்கு மாறுவதை பற்றி இருக்க வேண்டும் என்றார் சரபி. புதிய விமர்சன சொல்லாடல் தானே நேரடியாக சமூக அரசியல் மாற்றத்திற்கு உட்படாது. அது தொடர்ச்சியான முரண்களுடன் பயணம் செய்து மாற்றத்தை அடையலாம் என்றார். அறிவுஜீவிகள் இந்த சமூக அரசியல் போராட்டத்தின் மீது அதிகம் தாக்கம் செலுத்த வேண்டும் என்றார் ஹிசாம் சரபி. தந்தைவழி சமூகம் என்பது வெறுமனே சடங்குகளாலும், சம்பிராதயங்களாலும் நிரம்பியது. அங்கு உரையாடல்களுக்கோ அல்லது விவாதத்திற்கோ இடமில்லை. ஆகவே அறிவுஜீவிகள் தங்களின் வாசிப்பு, சிந்தனை, எழுத்து ஆகியவற்றின் மூலம் மாற்று சமூகத்திற்காக போராட வேண்டும் என்றார். சமூகம் குறித்த பிரக்ஞை உடனடியாக வருவதில்லை. அது இயற்கையை அவதானித்தல் மூலமும், கலாசார ரீதியான பல்வேறு மனிதர்களின் மனவோட்டங்களை வாசிப்பதன் மூலமும் உருவாகிறது. சமூகம் பற்றிய அக மற்றும் புற பிரக்ஞையே ஓர் அறிவார்ந்த நபரின் ஆளுமை உருவாக்கத்தின் காரணி.இதை தெளிவாக வெளிப்படுத்திய ஹிசாம் அரபு அறிவுஜீவிகள் இதை பிரதிபலிக்க வேண்டும் என்றார். மேலும் அந்நிய மொழி ஒன்றை அறிதல் அவசியம். அதன் மூலம் மட்டுமே பிரபஞ்சம் பற்றிய நம் அனுபவ எல்லையை விரிவாக்கி கொள்ள முடியும் என்றார் சரபி. தந்தைவழி சமூகம் பற்றிய சரபியின் கோட்பாட்டு ஆய்வு முறையில் பெண்ணியம் முக்கிய இடத்தை வகித்தது. பெண்கள் மீதான ஒடுக்குமுறையை சரபி தந்தைவழி சமூகத்தின் மைல்கல்லாக பார்த்தார். அந்த சமூகத்தின் இதயத்தில் பெண் என்பது ஒரு கால வெடிகுண்டாக இருக்கிறது என்றார் சரபி. ஆக தந்தை வழி சமூகத்தின் மேலாண்மையை தகர்ப்பதற்கு பெண் விடுதலை சாத்தியப்பட வேண்டும் என்றார். இதை பற்றிய எல்லா அறிவுஜீவிகளின் செயல்பாடுகள் மற்றும் சிந்தனைகள் வெறும் உதட்டளவிலேயே இருக்கிறது. இது உடைபட வேண்டும் என்பது சரபியின் முக்கிய கருதுகோளாக இருந்தது.
ஹிசாமின் மற்ற நூல்களில் குறிப்பிட தகுந்தது Embers and Ashes: Memoirs of an Arab Intellectual என்ற சுயசரிதையாகும். இந்நூலில் ஹிசாம் தன் பள்ளி படிப்பு முதல் அமெரிக்காவின் உயர்கல்வி அனுபவம் வரை நுட்பமான அனுபவ ரீதியில் விவரிக்கிறார். அவரின் பள்ளிப்படிப்பு விசனகரமான, துயர நெடிவுகளால் நிரம்பியது. பாலஸ்தீன் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு தருணத்தில் இவரின் அமெரிக்க உயர்படிப்பு நிகழ்ந்தது. கல்லூரி படிப்பிற்கு வெளியே இஸ்லாம், கிறிஸ்தவம், யூதம் குறித்த ஆழ்ந்த வாசிப்பு மற்றும் செமிடிக் நாகரீகம் குறித்த உள்வாங்கல் இவற்றோடு ஹிசாம் நகர்ந்தார். அதன் பிறகான தத்துவவியல் சார்ந்த தீவிர அறிவுத்துறை நண்பர்களின் தொடர்பு காரணமாக அவரின் வாசிப்பு மறுமலர்ச்சி கால தத்துவம், அறிவுவாதம், நவீனத்துவம், மார்க்சியம், பெண்ணியம் பக்கம் திரும்பியது. காண்ட், தெகார்தே,ஹெகல், கேகார்ட், மார்க்ஸ், பிராய்ட் போன்றவர்களை அதிக உள்ளார்வத்தோடு வாசித்தார். தெகார்தேயின் அறிவுவாதம், ஹெகலின் கருத்துமுதல்வாதம், கேகார்ட்டின் உள்நோக்கிய எதார்த்த தன்னிலை போன்றவை அவரின் சிந்தனையாக்கத்தில் பொறியை தட்டியவை.மார்க்சின் கோட்பாடான “வரலாற்றை விஞ்ஞான பூர்வமாக அறிதல் மற்றும் வர்க்க போராட்டம் ” அவரின் நேர்கோட்டில் மிகுந்த இடையீட்டை ஏற்படுத்தியது. அந்த தத்துவார்த்த அனுபவம் தனக்கு உயிரோட்டமாக இருந்ததாக ஹிசாம் இதில் குறிப்பிடுகிறார். இதன் தொடர்ச்சியில் பல தத்துவார்த்த நண்பர்கள் அவருக்கு உருவாயினர். அவர்களுடன் ஹிசாம் பலவிஷயங்கள் குறித்து விரிவாக விவாதித்தார்.மனித சமூகம் ஒரு நிரந்தர போராட்டத்தின் பகுதியே. அதனை அவதானித்து எதிர்கொள்வது மூலமே நிரந்தர விடுதலை சாத்தியம் என்பது ஹிசாமின் சிந்தனையில் ஆழ்ந்து உறைந்து போனது. இதனை தொடர்ந்து ஹிசாமின் ஈடுபாடு மேற்கத்திய இலக்கிய படைப்புகள் மீது திரும்பியது. ஆல்டஸ் ஹக்லி, எர்னஸ்ட் ஹெமிங்வே, கிரஹாம் கிரீன், எவ்லின் வா சோமர்ஸெட் மாஹம்போன்றவர்களை அதிகம் விரும்பி படிக்க தொடங்கினார். ஹக்ஸ்லியின் point counter point அவரை அதிகம் பாதித்த நூலாகும். சாக்ரடீஸின் புகழ்பெற்ற வாக்கியமான ” அறிவின் தொடக்கம் என்பதே ஒருவரின் அறிவாகும்” என்பதன் மீது ஹிசாம் நம்பிக்கை கொண்டு தன் அறிவார்ந்த தேடலை விரிவுபடுத்திக்கொண்டார். பாலஸ்தீன் சுயநிர்ணய உரிமை போராட்டத்திற்கான ஹிசாம் சரபியின் பங்களிப்பு மிகப்பெரியது. உசிதமானது. எட்வர்ட் செய்த், இப்ராஹிம் அபுலுகத் போன்றவர்களுடன் இணைந்து செயல்பட்டார். தொண்ணூறுகளில் யாசர் அரபாத் தலைமையிலான அரசாங்கம் விரோதிகள் என்று சில அறிவுஜீவிகளை கைது செய்த போது அதை கடுமையாக கண்டித்ததுடன், மற்றவர்களுடன் இணைந்து அவர்களை விடுதலை செய்ய வேண்டுகோள் விடுத்தார். அரபு மற்றும் மேற்குலகிற்கு அறிவுரீதியாகவும், செயல்பாட்டு ரீதியாகவும் பல பங்களிப்புகளை செய்த சரபியின் இறுதிகாலம் பெய்ரூட்டில் கழிந்தது. அங்குள்ள அமெரிக்க பல்கலைகழக மருத்துவமனையில் 2005 ஆம் ஆண்டு புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார். இவரின் நூல்கள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
ஹிசாமின் நூல்கள்
· Theory, Politics, and the Arab World: Critical Responses
· Governments and Politics of the Middle East in the Twentieth Century
· The Next Arab Decade: Alternative Futures
· Nationalism and Revolution in the Arab World (the Middle East and North Africa)
· Palestine and Israel: The Lethal Dilemma
· Arab Intellectuals and the West
· Palestine Guerillas: Their Credibility and Effectiveness
· Embers and Ashes
· Images of the Past: An Autobiography
· Neopatriarchy: A Theory of Distorted Change in Arab Society
தோழர் எச்.பீர்முஹம்மது நிங்கள் சொல்வதுபோல் உலக வரலாற்றில் ஒடுக்கப்படும் சமூகங்கள் அதன் நிலையில் அறிவார்ந்த சமூகமாக சில தருணங்களில் இருப்பது உண்மைதான்.ஆனால் இலங்கை போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட தமிழ்பேசும் மக்கள் ஒரு அறிவார்ந்த சமூகமாக தென்படுவதை எந்த தருணங்களிலும் நிரூபிக்கவில்லையே. என்ன காரணம்?. பாலஸ்தீனம் உருவாக்கிய அறிவார்ந்த மனிதர்கள் தமிழ்பேசும் சூழலில் இருப்பதாக நான் கருதவில்லை. தமிழ் ஈழப்போராட்டத்தை முன்னெடுத்த இயக்கத் தலைமைகளில் எவராவது சொந்தமாக ஒரு நுhலையோ ஒரு கட்டுரையையோ எழுதியதாக நான் அறியவில்லை.( நீங்கள் அறிந்துள்ளீர்களா? வேறு யாராவது அறிந்துள்ளார்களா?) இதற்கான காரணம் என்ன? தமிழ் ஈழப்போராட்டம் தொடங்கப்பெற்று சுமார் 30 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. தமிழ் ஈழம் தொடர்பான சமூக பொருளாதார அரசியல் ஆய்வுகள் ஏதாவது வெளிவந்துள்ளதா? தமிழ் பிரதேசங்களின் சமூக பொருளாதார அரசியல் வாழ்வு சரியான திசைவழிநோக்கி ஆய்வு செய்திருந்தால் போராட்டம் இத்தனை பின்னடைவகளையும் குழப்பங்களையும் கொண்டிருந்திருக்க முடியாது.