இலங்கையில் அண்மையில் கொண்டு வரப்பட்டுள்ள 18 ஆவது அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள நாடாளுமன்ற கவுன்சில் உறுப்பினர்களில் ஒருவராகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்களை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார். ஆயினும் இந்த நியமனத்தை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இன்று நிராகரித்திருக்கின்றது.
18 ஆவது அரசியலமைப்புச் சட்டமானது, ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்த 17 ஆவது அரசியமைப்புத் திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்கின்றது. அத்துடன் தேர்தல் ஆணையாளர், மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு, பொதுச் சேவை, பொலிஸ் சேவை ஆகியவற்றிற்கான உறுப்பினர்களை நியமிப்பதற்குப் பொறுப்பாக இருந்து வந்த அரசியலமைப்புச் சபைக்குப் பதிலாக பாராளுமன்ற சபை என்ற சபையை நியமிப்பதற்கு 18 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் வழி வகுத்திருக்கின்றது.
இந்தப் பாராளுமன்றச் சபையில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், மற்றும் சபாநாயகர் ஆகியோர் அங்கம் வகிப்பார்கள். அத்துடன் பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவரும் தமக்கு விருப்பமான தமது இனமல்லாத வேறு இனக்குழுமத்தைச் சேர்ந்த இரண்டுபேரை நியமிப்பதற்கு அதிகாரம் பெற்றிருக்கின்றார்கள். இவ்வாறு நியமிக்கப்படுகின்ற இருவர் உட்பட 5 பேர் கொண்டதாக இந்தப் பாராளுமன்றச்சபை இருக்கும். இந்தச் சபையே நீதிச் சேவை, பொதுச்சேவை, காவல்துறை, தேர்தல் ஆணையகம், மனித உரிமைகள் போன்ற துறைகளுக்கான ஆணையாளர்களையும், ஆணைக்குழு உறுப்பினர்களுக்கான பெயர்களையும் ஜனாதிபதிக்கு சிபாரிசு செய்யும் அதிகாரத்தைப் பெற்றிருக்கின்றது.
இவ்வாறு சிபாரிசு செய்யப்படுகின்றவர்களை ஜனாதிபதி ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் 18 ஆவது அரதசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் இல்லை
இந்த அடிப்படையிலேயே பாராளுமன்றச் சபை உறுப்பினராக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எதிர்க்கட்சித் தihலவர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நியமனத்தை நிராகரித்துள்ளது தொடர்பாக பிபிசிக்குக் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாத நிலையிலேயே இந்த நியமனத்தைத் தானும் தமது கட்சியும் நிராகரித்துள்ளதாகக் கூறினார்.
http://www.bbc.co.uk/tamil/news/story/2010/09/100916_tnamprejectsnomination.shtml