தமிழ்ப் பேசும் மக்களின் பேரினவாத ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தை ஒரு இராணுவக் குழுவின் போராட்டமாக குறுக்கி அதனை முற்றாகச் சிதைத்தமை விடுதலைப் புலிகளின் அரசியலையே சாரும். பேரின வாதத்தின் ஒடுக்குமுறை முன்னெப்போதும் இல்லாதவாறு இப்போது உக்கிரமடைந்திருக்கிறது. இன்ன்றும் உலகம் முழுவதும் தமிழ் மகளின் ஒடுக்குமுறைக்கு எதிராக எழும் எதிர்ப்புப் போராட்டங்களைத் தாமே மேற்கொள்வதாகப் புலி சார் அமைப்புக்கள் மார்தட்டிக்கொள்கின்றன. இலங்கை – இந்திய அரசுகள் தமிழ்ப் பிரதேசங்களைச் சூறையாடிச் சிதைத்து சின்னாபின்னமாக்கி வருகின்றன.
தமது தவறுகள் குறித்து குறைந்தபட்ச சுயவிமர்சனமும் வெளிப்படைத்தன்மையும் அற்ற நிலையில் அவை குற்றங்களாக முன்வைக்கப்படுகின்றன. நெதர்லாந்தில் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் ஈழத் தமிழர்களின் போராட்டத்தை மக்கள் விரோதப் போராட்டமாக சித்தரிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் வெளிநாடுகளில் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததை நெதர்லாந்து புலனாய்வுப் பிரிவினர் ஒபரேசன் கொனிங்க் என்கிற பெயரில் அதிரடி நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்து வந்திருக்கின்றார்கள் என்று நெதர்லாந்து ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் 1983 ஆம் ஆண்டு தொடக்கம் நெதர்லாந்தில் உள்ள சுமார் 10 ஆயிரம் புலம்பெயர் தமிழர்களிடம் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளதை நெதர்லாந்து நிபுணர்கள் கண்டறிந்துள்ளதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்தில் வாழ்கின்ற புலம்பெயர் தமிழர்களின் குடும்பங்களின் மாதாந்த வருமானங்களை அறிந்து வைத்திருந்த விடுதலைப்புலிகள், அவற்றை பல்வேறு வழிகளில் வரி என்ற பெயரில் நிதி அறவிட்டு வந்துள்ளதனர். விளையாட்டுப்போட்டிகள், வைபவங்கள், அதிஷ்ட இலாப விற்பனைகள் ஆகியவற்றின் மூலமும் விடுதலைப்புலிகள் நிதி சேகரித்து இருக்கின்றனர்.
விடுதலைப்புலிகள் தமிழீழத்தை வென்றெடுப்பதற்கான போராட்டத்திற்கு 2005 ஆம் ஆண்டு தொடக்கம் மிகத் தீவிரமாக பல வெளிநாடுகளில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர். இதற்காக ஒவ்வாரு குடும்பத்தினரிடமிருந்தும் 2 ஆயிரம் யூரோ வரை கோரியுள்ளனர்.
நிதி தருகின்றவர்களுக்கு விசேட அடையாள இலக்கங்களை கொடுப்பார்கள். இந்த அடையாள இலக்கங்களுடன் இக்குடும்பத்தினர் இலங்கையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் உட்பிரவேசிக்க அனுமதிக்கப்படுவர். பணம் தர மறுப்பவர்களுக்கு அவர்களின் இலங்கையில் உள்ள உறவினர்கள் புலிகளால் அச்சுறுத்தப்படுவார்கள் என்பதையும் நெதர்லாந்தின் புலனாய்வு மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் கண்டறிந்துள்ளதாக நெதர்லாந்து ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நெதர்லாந்தை ஏழு தொகுதிகளாக பிரித்து ஒவ்வொரு தொகுதிக்கும் நிதி வசூலிப்பு தலைமை அதிகாரி ஒவ்வொருவரை நியமித்து உள்ளனர். அத்துடன் இந்நிதியை கையாள்கின்றமைக்கு வசதியாக சில ஸ்தாபனங்களை ஆரம்பித்துள்ளனர். தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (TRO), தமிழ் இளைஞர் கழகம் (TYO), தமிழ் பெண்கள் கழகம்(TVO) போன்ற ஸ்தாபனங்களை
குறிப்பிட்டுள்ளனர்.
நெதர்லாந்து நாட்டின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் இது வரை 38 பேர் புலிகளின் நிதிச் செயல்பாட்டாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் என்றும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.