தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி தமிழகம் முழுவதிலும் வழக்கறிஞர்கள் போராடி வருகின்றனர். கோவையில் செம்மொழி மாநாடு நடைபெறும் போது தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி போராடுவதை தனக்கு எதிரான போராட்டமாகப் பார்க்கிறார் கருணாநிதி. இதனால் திமுக வழக்கறிஞர்களை ஏவி விட்டு போராட்டத்தை சீர்குலைக்கும் வேலைகளைத் துவங்கியுள்ளார் கருணாநிதி. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி கீழமை நீதிமன்ற வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு எடுத்த தீர்மானத்தின் படி நாளை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதென்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இன்றிலிருந்தே நீதிமன்ற புறக்கணிப்பை திருச்சி வழக்கறிஞர்கள் அறிவித்துள்ளனர்.
மார்க்ஸ்சிஸ்ட் கட்சி ஆதரவு.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சென்னை உயர் நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையிலும் தமிழ் மொழியில் வழக்காடுதல், தீர்ப்பளித்தல் மற்றும் நிர்வாக மொழியாக நடைமுறைப்படுத்தவும் வலியுறுத்தி கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மதுரையில் வக்கீல்களின் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் தமிழ்மொழி அனைத்து மட்டத்திலும் அங்கீகரிக்கப்பட வேண்டும். நடைமுறையில் செயல்படுத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்ழூனிஸ்டு கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.தமிழ்வழக்காடு மொழியாக இருக்க வேண்டும் என்று 4 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இன்னும் செயல்படுத்தப்படாமலேயே உள்ளது. இந்த நிலையில் இதை செய்திட வலியுறுத்தி வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.எனவே, தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அனுமதிக்கும் வகையில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செயல்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.