வேளாண் சட்டங்களுக்கு எதிராக 72 நாட்களாக இந்திய விவசாயிகள் போராடி வருகிறார்கள். இப்போது இந்த போராட்டம் இந்தியாவையும் தாண்டி உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. சர்வதேச பாடகி ரிஹானா, நடிகை மியா கலிபா,பருவநிலை மாற்றப் போராளியும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான கிரெட்டா துன்பெர்க். உடபட பலரும் இந்த போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளநிலையில், இந்திய பிரபலங்கள் பெரும்பாலும் இந்திய அரசை ஆதரித்து ட்விட் செய்துள்ளார்கள்.
இன்னொரு பக்கம் முன்னர் ஒருமுறை இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டென்ட்லுக்கரை யார் எனத் தெரியாது என்று சொன்ன டென்னிஸ் வீரர் மரிய ஷரபோபாவை இந்திய ரசிகர்கள் முன்னர் திட்டி தீர்த்தனர். இப்போது சச்சின் இந்திய அரசை ஆதரிக்கும் நிலையில் விவசாயிகள் போராட்டத்தை ஆதரிப்போர் மரிய ஷரபோபாவின் ட்விட்டர் பக்கத்தில் முன்னர் அவரை திட்டியதற்காக வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
இவைகள் ஒரு பக்கம் இருக்க விவசாயிகள் போராட்டமும் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்துதான் வருகிறது. ஹரியானா மாநிலம் சின்க் மாவட்டம் கண்டினு என்ற கிராமத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினார்கள். அக்கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நாளை 6- ஆம் தேதி சக்கா ஜாம் என்ற பெயரில் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் டெல்லியை மையமாக வைத்து நடத்தப்படவில்லை. ஆனால் உத்தரபிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம் உட்பட தென் மாநிலங்களிலும் நடத்தப்படும் ஒட்டு மொத்த தேசத்தையும் ஸ்தம்பிக்கச் செய்யும் வகையில் இந்த போராட்டம் நடைபெறும்.
நேற்றைய மகாபஞ்சாயத்து சபைக் கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைத் பேசும் போது “எங்கள் போராட்டத்திற்கு உலக அளவில் ஆதரவு கிடைத்துள்ளது. வெளிநாட்டில் வாழும் மக்களும் பிரபலங்களும் எங்கள் போராட்டத்தை ஆதரிக்கிறார்கள்.இதில் என்ன பிரச்சனை இருக்கிறது? பாடகி ரிகானா மியா கலிபா, கிரெட்டா போன்றோரின் ஆதரவைக் குறிப்பிட்டு செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது “நீங்கள் குறிப்பிடும் இவர்கள் யாரென்று எங்களுக்கு தெரியாது. அவர்கள் ஆதரவு அளித்தால் நல்லதுதான்” என்றார்.