அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பௌத்த அடிப்படைவாத அமைப்பின் தலைவர் ஒபல்மே சோபித தேரோ தாங்கள் இலங்கைத் தெசியவாதிகள் தான் என்று கூறியுள்ளார். சிங்கள பௌத்த பேரினவாத நச்சை சிங்கள மக்கள் மத்தியில் விதைக்கும் ஜாதிக ஹெல உறுமய என்ற பௌத்த அடிப்படைவாதக் கட்சியின் இலங்கைத் தேசியம் என்பது முற்போக்கு முகத்தோடு முன்னிலை சோசலிசக் கட்சியும் ஜேவிபியும் முன்வைக்கும் பேரினவாதமாகும். இந்த மூன்று கட்சிகளும் சுய நிர்ணய உரிமை கோருவதை இனவாதம் என்றும், பேரினவாதத்தைத் தேசியவாதம் என்றும் கூறி சிங்கள மக்களை ஏமாற்றி வருகின்றன. தமிழ்ப் பேசும் சிறுபான்மை மக்கள் மீதான பேரினவாத ஒடுக்குமுறையின் ஏஜண்டுகளாகத் தொழிற்பட்டு வருகின்றன.
ஆசாத் சாலியின் கைது தொடர்பாகக் குறிப்பிட்ட பௌத்த துறவி, அவர் குற்றமற்றவரானால் விடுவிக்கப்படுவார் என்றார். தவிர முஸ்லிம்கள் விசேடமானவர்கள் அல்ல என்றும் ஏனையவர்களைப் போன்றே ஆசாத் சாலியும் தேவையானால் விசாரிக்கப்படலாம் என்றார்.