கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே ஆற்றூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அவர்கள் காவல்துறையினர் அனுமதி பெற்று, ஆற்றூர் சந்திப்பில் விழா மேடை அமைத்தனர்.
இந்த நிலையில், ஆற்றூரில் நேற்று பொதுக்கூட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி சார்பில் திருவட்டார் காவல்துறையில் அனுமதி கேட்கப்பட்டதாக தெரிகிறது. அப்போது, நாம் தமிழர் கட்சியினர், பொதுக்கூட்டம் நடத்த ஏற்கனவே அனுமதி பெற்றிருப்பதால், காங்கிரஸ் கட்சியினருக்கு அனுமதி வழங்க காவல்துறையினர் மறுத்ததாக கூறப்படுகிறது.
நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று மாலை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஜான்ஜேக்கப், பிரின்ஸ், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் மற்றும் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் விழாமேடை நோக்கி ஊர்வலமாக வந்தனர்.சீமான் படம் கொண்ட பிளக்ஸ் போர்டுகளையும் உடைத்து எறிந்தனர். விழா மேடையை நெருங்கியதும், அவர்கள் விழா மேடை, நாற்காலி, ஒலிபெருக்கி போன்றவற்றை அடித்து உடைத்து, முட்டைகளை வீசினர். மேலும், அங்கு நின்ற நாம் தமிழர் கட்சியினரை தாக்கி, கொடி கம்பங்களை பிடுங்கி வீசி ரகளையில் ஈடுபட்டனர்.இதனால் அப் பகுதி போர்க்களம்போல் காட்சியளித்தது. பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.
நாம் தமிழர் கட்சியினரும் திரண்டனர்: இச் சம்பவம் பற்றி அறிந்ததும் பல்வேறு இடங்களிலிருந்தும் நாம் தமிழர் கட்சியினர் ஆற்றூருக்குத் திரளாக வந்தனர். இதனால் பிரச்னை தீவிரமடைந்தது. எனவே, போலீஸார் காங்கிரஸ் கட்சியினரை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது காங்கிரஸ் கட்சியினர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் ஏராளமான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அத்துடன் ஆற்றூர் சந்திப்பில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
ரஜீவ் காந்தி கொலைசெய்யப்பட்ட வேளையில் காங்கிரசோடு கூட்டுவைத்து தேர்தலில் வெற்றிபெற்ற ஜெயலலிதா ஆயிரக்கணக்கான ஈழ ஆதரவாளர்களைச் சிறையில் போட்டார். நளினி உட்பட கைதானவர்களுக்கு மரணதண்டனை விதிப்பதற்குக் காரணமாவிருந்தார். கருணாநிதியைப் புலி ஆதரவாளர் என்றும் இலங்கையில் பிரிவினை கோரி நடக்கும் போராட்டம் பயங்கரவாதம் என்றும் சூழுரைத்தார். இன்று ஜெயலலிதாவை ஆதரிக்கும் சீமான் காங்கிரசோடும், காங்கிரஸ் ஜெயலலிதாவோடும் மோதிக்கொள்கிறது. இந்த அரசியல் வியாபாரிகளின் வாக்கு வேட்டைக்கு ஈழத் தமிழரின் கண்ணீரும் அவலமும் விற்பனைப் பொருளாகியுள்ளது.
இதுகுறித்து காங்கிரசார் கூறும்போது, “தேசத்தலைவர் ராஜீவ்காந்தியை கொலை செய்த விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்படும் எந்தவொரு கட்சியும், இயக்கமும், குமரி மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடத்த விடமாட்டோம்” என்றனர்.
இதற்கிடையே இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கே குவிக்கப்பட்டனர். இதற்கிடையே பொதுக்கூட்டமும் நிறுத்தப்பட்டது.
இந்த சம்பவத்தையடுத்து, நாம் தமிழர் கட்சியினர் திருவட்டாறு காவல் நிலையத்துக்கு திரண்டு சென்றனர். அக்கட்சியின் இளைஞர் பாசறை மாநிலச் செயலர் கல்யாணசுந்தரம் அளித்த புகாரின்பேரில், எம்.எல்.ஏ.க்கள் ஜான் ஜேக்கப், பிரின்ஸ் உள்பட காங்கிரஸ் கட்சியினர் 200 பேர் மீது 7 பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.