தமிழ் தேசிய பேராட்டத்திற்கான பின்னணிக் குறித்து ஆராய்ந்தவர்கள் அப்போராட்டத்தை ஊக்குவித்த முக்கிய காரணிகள் இரண்டைக் குறிப்பிடுவர். ஒன்று 1974 ஆம் ஆண்டு ஐனவரி மாதம் யாழ்பாணத்தில் நடைப்பெற்ற நான்காவது அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாட்டின் போது ஏற்பட்ட அசம்பாவிதங்களையும் அதனையொட்டி ஏற்பட்ட ஒன்பது பேரின் உயிரிழப்பையும் கூறுவர். மற்றைய காரணி 1970களில் கொண்டு வரப்பட்ட பல்கலைகழக தெரிவில் தரப்படுத்தல் முறையாகும்.
நான்காவது அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாட்டை யாழ்பாணத்தில் நடத்தியமையே தமிழ் புத்தி ஜீவிகளின் உன்னதமான பங்களிப்பாக கூறுவர். அரசியல், சமூக, பொருளாதார துறைகளில் அமெரிக்கா தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக பல கலாசார நிறுவனங்களை கீழைத்தேய நாடுகளில் தேற்றுவித்திருக்கின்றது. இந்தப் பின்னணியில் இலங்கையில் தோற்றுவிக்கப்பட்ட கிளையே நிறுவனமே அனைத்துலக தமிழாராய்ச்சி மன்றமாகும். அம்மன்றத்தினர் ஆரம்ப கால முதலாகவே பிரிவினைவாத சக்திகளுக்கு ஆதரவளித்து வந்துள்ளனர். அவர்கள் மார்க்சிட்டுகளையும் முற்போக்காளர்களையும் ஒதுக்கியதுடன் தமிழ் துரோகிகளாகவும் காட்டமுனைந்தனர்.
மக்களின் உணர்வுகளை மதித்துப் போற்றினார்கள் என்பதை விட மக்களை; குறுந் தமிழ் தேசிவாத அரசியலுக்கு பகடைகாயாய் பயன்படுத்தவே முனைந்தனர். இனவாதமும் சிங்ளப் பெருந்; தேசியவாதமும் எவ்வாறு தமிழர் வாழ்வை சிதைவுக்குள்ளாக்கியதோ, அவ்வாறே தமிழ் குறுந்தேசிய உணர்வுகளும் போக்குகளும் அம்மக்களின் வாழ்வை சிதைவுக்குள்ளாக்கியது. இவ்வாறு அமெரிக்க ஆசிர்வாதத்தில் பெருந்திட்டத்துடன் ஒழுங்கமைக்கப்பட்டதே நான்காவது அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாடு. இம்மாநாடு; குறித்து பலரும் பல தளங்களிலிருந்தும் கோணங்களிலிருந்தும் பல கட்டுரைகளை எழுதியுள்ளனர். அக்கட்டுரைகள் யாவும் அன்றைய தமிழ் குறுந்தேசியவாதிகளுக்கு சார்பாகவே அமைந்திருந்தன.
இம்மாநாடு குறித்து பக்கச்சார்ப்பற்று எழுதிய கட்டுரைகள் யாவும் ஊடகங்களால் மறைக்கப்பட்டதை அறிய முடிகின்றது. இவ்வாறானதோர் சூழலில் தமிழ் ஆராய்ச்சி மன்றம் குறித்தும் அதன் பின்னணயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நான்காவது அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாடு குறித்தும் கைலாசபதி (வாமனன் என்ற புனைப்பெயரில்) ‘உலகத் தமிழாராய்ச்ச்சி மாநாடு – பின்னணியும் பின்நோக்கும்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை வரலாற்று முக்கியத்துவம் உடையது. இது தொடர்பில் அவரது பின்வரும் கூற்று கவனத்திற்குரியதாகும்.
‘…பல்வகைப்பட்ட சதிகார ஸ்தாபனங்களில் ஒன்றுதான், அண்மைக்காலத்தில் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம் என்னும் பெயரில், இந்தியா, இலங்கை, மலேசியா, மொரிசஸ், பிஜித்தீவு முதலிய தேசங்களில் தமிழ் மக்கள் பலரைக் கொண்டு நடாத்தப்படும் கழகம்.இனம், மொழி, மதம் முதலிய உணர்ச்சிக்குரிய விசயங்களில், ‘ஆராய்ச்சி’ என்ற பெயரில் மோசமான, விபரீதமான கருத்துக்களைத் தூவுவதும், தனிநாடு, சுயாட்சி என்ற எண்ணங்களைத் தூண்டுவதும், இம்மன்றத்தின் தலையாய குறிக்கோள்களில் ஒன்றாக இருந்து வந்திருக்கின்றது. இதை இலகுவில் சாதிப்பதற்காக, இம்மன்றத்தின் தலைமைப்பீடம் வெகுசாதுரியமாக, முற்போக்குச் சிந்தனை படைத்தவர்களை அணுகுவதில்லை. அவர்களை முக்கியமான விசயங்களுக்கு அனுமதிப்பதுமில்லை.
தென்னகத்தில் இரண்டாவது மாநாடு நடந்த பொழுது, தி.மு.க வின் ஒத்துழைப்புடனும், பக்க பலத்துடனும் அது வழி நடத்தப் பெற்றது. நான்காவது மாநாடு, இந்நாட்டில் தமிழர் கூட்டணிச் சக்திகளின் முழுப் பலத்துடனும் நடத்தப் பெற்றது. இதில் நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டியது, திட்டமிட்டே சோசலிஸ்ட்டுகளையும், முற்போக்காளர்களையும் விலக்கி வைத்து, அவர்களைத் தமிழின விரோதிகள் எனக் காட்ட முயல்வதாகும்.’
தமிழ் ஆராய்ச்சி மன்றத்தினரால் ஒருங்கமைக்கப்பட்டிருந்த நான்காவது அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாடு எத்தகைய ஏகாதிபத்திய சார்பும் மார்க்சிய முற்போற்கு எதிர்ப்பையும் கொண்டிருந்தது என்பதனையும் இவற்றிற்கு பின்னால் சர்வதேச சதி எவ்வாறு ஊடுவியிருந்தது என்பது பற்றியும் கைலாசபதின் பார்வை தீர்க்க தரிசனமானது.