உலகின் பல பாகங்களிலும் இவர்கள் ஒடுக்கப்பட்டு நரவேட்டையாடப்பட்டாலும் இவர்களது கலை,பண்பாட்டைக் காக்கவும் ,இவர்களுக்கு எனத் தனியே நாடக அமைப்பு ஒன்றை ஏற்ப்படுத்தி முன் மாதிரியாகத் திகழந்தது அன்றையசோவியத் யூனியன்அரசு. இந்த நாடக அமைப்பு 1931 ம ஆண்டு மொஸ்கோவில் ஆரம்பிக்கப்பட்டது.இதில் ஜிப்சிக் கலைஞர்களும் பெரும் பங்காற்றினார்கள்.இதுவே ஜிப்சிகளுக்கென அமைக்கப்பட்ட முதல் நாடக அமைப்பு எனவும் பெற்றது.
பல நூறு வருடங்களாக பல அரசுகளால் ஒடுக்கப்பட்டாலும் புலம் பெயந்து நாடோடி வாழ்க்கையைத்த் தொடரும் ஆவலை இவர்கள் விட்டு விடவில்லை.இக்கொடுமைக்களூடே தமது கலைகளையும்,காப்பாற்றி வந்துள்ளமையும் இவர்களது உறுதிக்குச் சான்று பகர்கின்றது. தமது சோகங்களை எல்லாம் இசை மூலம் வெளிப்படுத்தும் இவர்கள் தமது மகிழ்ச்சிக்கும் ,பொழுது போக்கிற்கும் இசையையே பயன்படுத்துகிறார்கள்.
இவர்களது கொண்டாடங்கள் எப்பொழுதும் இசையுடனேயே ஆரம்பமாகின்றன.அவை நாட்டுப்புற இசையாகவோ மெல்லிசையாகவோ அமைந்திருக்கும்.குறிப்பாக குடும்ப நிகழ்சிகளில் தமது சொந்த இசையை மாத்திரம் பாடுவார்கள்.அவை அவர்களது முன்னோர்கள் பாடிக் கேட்ட பாடல்களாகவும் பயணங்களின் போது பாடப்பட்ட பாட்டுக்களாகவும் அமைந்திருக்கும் .மற்றைய இன மக்களைக் கவர்வதற்காக இவர்கள் அநதந்த நாடுகளில் பிரபலமான போப் பாடல்களையும் பாடுவார்.ஜிப்சிகளில் பல பிரிவினர் உள்ளதால் ஒவ்வொரு பிரிவினரும் தங்களுக்கென இசைப்பாணிகளை வைத்திருக்கின்றனர்.பல்வேறு நாடுகளிலும் வாழ்வதால் அந்தந்த நாடுகளின் இசை மரபுகளை எடுத்துக் கொண்டு அதனுடன் தங்கள் இசையையும் இணைத்து இசைப்பார்கள்.நாடுப்புற இசையை இவர்கள் பெரிதும் விரும்பி இசைத்து வருகிறார்கள்.
இது பெரும்பாலும் அவர்களது சுய விருப்பமாகவே இருக்கும்.எனினும் தமது இசையால் பணம் சம்பாதிக்க விரும்பியவர்கள் தொழில் முறையாகவும் இசையைப் பயன்படுத்துகின்றனர்.இவை பெரும்பாலும் மக்கள் எப்படி விருபுகின்றார்களோ அதற்க்கு ஏற்றவாறு அமைந்திருக்கும்.
ஹங்கேரி நாட்டு ஜிப்சிகளின் இசை மிகவும் பிரபல்யமானதொன்றாகும்.இதனை ஹங்கேரியில் வாழும் ஜிப்சிகள் அந்த நாட்டு இசை மரபுடன் தமது முறையையும் இணைத்து இசைப்பதன் மூலம் ஒரு புதிய வடிவத்தை உருவாகியுள்ளனர் என இசை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த வகையான ஜிப்சி இசையை ஹங்கேரியில் ரோமுங்கிரி ( Romungiri ) இசை என அழைக்கின்றார்கள்.இந்த வகை இசையில் பயன்படுத்துகின்ற நாட்டியமும் பெயர் பெற்ற ஒன்றாகும்.இந்த நடனத்தில் ஜிப்சி இன ஆண்களும் ,பெண்களும் பங்கு பெறுவர்.எனினும் இதில் இசையே மிகவும் புகழ் வாய்ந்ததாக உள்ளது.
இந்த வகை இசையால் பாமரர் முதல் பண்டிதர் வரை கவர்ப்பட்டிருக்கிறார்கள்.பல இசை இசையறிஞர்களை இது பாதிக்கவும் ( Inspire ) செய்திருக்கிறது என்றால் மிகையாகாது.மேலைநாட்டு இசை மேதைகள் இந்த இசையால் கவரப்பட்டு தாங்கள் படைத்த இசைக் கோவைகளில் அவற்றைப் பயன் படுத்தியிருக்கின்றார்கள்.இதானால் ஏற்ப்பட்ட உணர்ச்சிகளை தமது படைப்புகளில் வெளிப்படுத்தி வெற்றி கண்ட சிம்பொனி ( Symphony ) இசைமேதைகளாக மூவரைக் குறிப்பிடலாம்.
1 .பிரான்ஸ் லிஸ்ட் ( Franz List 1811 – 1866 )
2 .ஜொஹான் ஸ்ட்ராவ்ஸ் ( Johhan strauss 1825 – 1899 )
3 .ஜோஹன்னேஸ் ப்ராம்ஸ் ( Johaannes Brahms 1883 – 1897 )
இந்த இசை மேதைகள் தமது படைப்புகளில் பயன்படுத்திய ஜிப்சி இசை அதன் சிறப்பு காராணமாக உன்னதப் படைப்புக்கள் என இன்றும் புகழப்படுகின்றன. பிரான்ஸ் லிஸ்ட் ( Franz List ) என்ற இசைக்கலைஞர் அமைத்த” ஹங்கேரி நாட்டுப்புற இசையில் கற்பனை ” Fantasia on Hungarian Folkemelodies என்ற இசைக்கோவையும் ,Hungarian Rhapsody என்னும் இசைக்கோவையும் இங்கு குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை.சிம்பொனி இசையில் இவற்றைக் கலந்துள்ளமை இவரின் மேதமைக்குச் சான்றாகும்.”Rhapsody ” என்பது “அதி உற்சாகம் தரும் கட்டுக்கடங்காத ஆக்கம் ” அல்லது ” உணர்ச்சியைத் தூண்டுகின்ற இசைத்துணுக்கு ” எனப் பொருள் படுகிறது.கர்நாடக இசையில் ஒரு ராகத்தை ஆலாபனை செய்வது போன்று நீண்ட இசைக்கோவைகளாக படைத்துள்ளார்.அவற்றில்
1.Fantasia on Hungarian Folk Melodies
2.Hungarian Rapsody no:2
3.Hungarian Rapsody no:5 என்பன முறையே 15 ,12 , 13 நிமிடங்களைக் கொண்ட நேர அளவுகளில் அமைந்த படைப்புகளாகும்.இம்மூவரும் ஜேர்மனிய இசைவிற்ப்பனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜொஹான் ஸ்ட்ராவ்ஸ் ( Johhan ஸ்ட்ராஸ்) இசையமைத்த ” ஜிப்சி பாரோன் ” ( Gipsy Baron ) என்னும் இசை நாடகமும் (ஒபேரா ) மிகவும் புகழ் பெற்றது.இந்த இசை நாடகம் 1885 ம் ஆண்டு எழுதப்பட்டது.இந்த இசைக் கோவையில் பாட்டும்,இசையும் இணைத்துவைக்கப்பட்டுள்ளதுடன் ,ஒரு பாடல் மூன்று விதமான வெவ்வேறு சூழ் நிலைகளுக்கு ஏற்ப பல்லியத்துடன் (Orchestra )இசைப்பதும் இதன் தனித்துவமான சிறப்பம்சம் என இதனை நெறியாள்கை ( Conduct ) செய்த நிகோலஸ் (Nikolas ) என்பவர் கூறுகின்றார்.
1883 ம் ஆண்டு தமது நண்பர் ஒருவரின் விருந்தில் கலந்து கொண்டு பியானோவில் ஹங்கேரியப் பாடல் ஒன்றை தான் வாசித்ததாகவும் அதிலிருந்தே இந்த இசையின் மீதான ஆர்வம் தன்னிடம் வரளத் தொடங்கியது எனவும் ஸ்ட்ராவ்ஸ் கூறுகின்றார்.அத்துடன் அதே ஆண்டில் வேறு ஒரு விருந்தில் Franz List என்ற இசைமேதையை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது அவருடன் இது குறித்து நிறைய விவாதித்ததும் தமது ஆர்வம் மேலும் வளரக் காரணமாயிற்று என்று அவர் பெருமையுடன் குறிப்பிடுகின்றார்.மேற்சொன்ன சந்திப்புக்கள் ஹங்கேரியில் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.மேற்குறிப்பிட்ட இரு இசைமேதைகளை பார்க்கிலும் ஜிப்சி இசையைத் தனது சிம்போனிக்களில் பயன் படுத்திப் புகழ் பெற்றவர் இசைமேதை ஜோஹன்னேஸ் ப்ராம்ஸ் (Johaannes Brahms ) என்பவரே .அவர் இவ்விசைக் கோவைகளை நீண்ட கால இடைவெளிகளில் (1869 – 1880 ) எழுதியுள்ளார்.அவரது ஏனைய இசைப் படைப்புகளைப் போலவே இந்த இசைப் படைப்பும் மிகவும் புகழ் பெற்றது.ஹங்கேரிய நடனங்கள் ( Hangarian Dances ) என்ற பெயரில் இது இன்றும் வழங்கிவருகிறது.நெசவில் பலவிதமான நூல்களை இணைத்து இழை நயம் வெளிக்கொண்டு வருவது போல பல வர்ண இசைக் கோவைகளால் நெஞ்சை அள்ளும் வண்ணம் இந்த இசை அமைந்துள்ளது.அவர் தமது இருபதாவது வயதிலிருந்தே ஜிப்சி இசையை சேகரிக்கத் தொடங்கினார் எனவும் அவற்றில் சில அவரது சொந்தப் படைப்புக்கள் எனவும் ஜிப்சி இசையை உயிரோட்டத்துடனும் ,எழுச்சியுடனும் சுதந்திரமாக பயன் படுத்தியுள்ளார் என இசை நிபுணர்கள் கருதின்றனர்.
ஜிப்சிகளின் இன்னொரு இசை வடிவமான ப்ளமிங்கோ இசை ( Flamenco ) ஸ்பெயின் நாட்டில் வாழும் ஜிப்சிகளால் உருவாக்கப்பட்டது என்பதை வரலாற்று ஆய்வுகள் புலனாக்குகின்றன ஸ்பெயின் நாடு என்றதும் எல்லோர் மனதிலும் சட்டென்று ஞாபகத்திற்கு அங்கு பெரிய விழாவாகக் கொண்டாடப்படும் எருது அடக்கும் போட்டியும்( ஜல்லிக் கட்டு ) ,இந்த ப்ளமிங்கோ இசையுமே ஆகும்.ஸ்பெயின் நாட்டின் தென் பகுதியான அண்டலூசியனில் ( Andalausian ) தான் இந்த இசை உருவானது.
இது நடனத்துடன் இணைத்து நடத்தபடுவது.ஜிப்சிகள் இவ்விசையில் சிறப்புற்று விளங்குகின்றனர்.ஜிப்சி இன ஆண்களும் ,பெண்களும் இதில் கலந்து கொண்டு பாடி ஆடுவர்.விசேஷமாக ஜிப்சி இன பெண்கள் கண்ணைப் பறிக்கும் பலவித வண்ண ,வண்ண உடைகளை அணிந்து விறுவிறுப்பான இசையுடன் தம்மை மறந்து தாளம் பிசகாமல் ஆடுவர். இந்த ஆட்டமானது பார்வையாளர்களை பரவச நிலைக்கு இட்டுச் செல்லும் ஆற்றல் மிக்கது.
பிளமிங்கோ இசை என்பது கிட்டார் ( Guitar ) ஒலி மாத்திரம் அல்ல.உள்ளுணர்வுக்கு உத்வேகம் தருகின்ற தாளமும் ,அதன் மூலம் ஐம்புலன்களையும் ஒத்திசைவுடன் இயங்க வைக்கும் அசைவுகளையும் கொண்ட நடனமும் சேர்ந்ததே எனக் கலைஞர்கள் கூறுவர்.
ஸ்பெயின் நாட்டில் அண்டலூசியனில் ஜிப்சிகளின் வருகைக்கு முன்னர் இந்த இசைவடிவம் இருக்கவில்லை..அண்டலூசியனுக்கு
வெளியே வாழ்ந்த ஜிப்சிகளும் இந்த இசையில் ஈடுபடுவதில்லை. இந்த இசை பிறந்த வரலாறு சுவையானது.அண்டலூசியன் பகுதியில் கிரேக்க,ரோம,அரேபிய ,யூத இன மக்கள் குடியேறி வாழ்ந்தார்கள்.அப்பகுதி நாட்டுப்புற இசைகளில் கிரேக்க ,ரோம இசையின் தாக்கம் மிகத்துல்லியமானது.அப்பகுதித் தேவாலயங்களில் பாடப்பட்ட பாடலகள் கிரேக்க ,ரோம இசையின அடிப்படையிலேயே அமைந்திருந்தன.
அரேபியர்கள் அண்டலூசியன் பகுதியை கி.பி. 8 ம் நூற்றாண்டில் கைப்பற்றி கி.பி.15 ம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்தனர்.அவர்களின் வருகையோடு யூத இன மக்களின் வருகையும் ஏற்ப்பட்டது.அரேபியகள்ஆட்சியில் யூத, கிறிஸ்தவ மத உரிமைகள் பாதுகாக்கப்பட்டன.கி.பி. 8 ம் நூற்றாண்டின் புகழ்மிக்க அப்தர் ரஹ்மான் (Abdar Rahman II ) இசைத் துறையிலும் ,கவிதைத் துறையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.இவரால் கி.பி.822 ஆம் ஆண்டு அரேபியாவிலிருந்து ஸ்பெயினுக்குக் கொண்டுவரப்பட்ட இசைக்கலைஞர் ஜிர்ஜாப் பாக்தாத் அரணமனையில் மிகப்புகழுடன் இருந்தார்.அங்கே ஜிர்ஜாப் ( பெரியபறவை ) என்ற பெயரில் புகழ் பெற்றிருந்தார் இவரது இயற்ப்பெயர் அபுல் ஹசான் அலி இப்பின் நாபி ( Abul Hasan Ali Ibin Nafi ) என்பதாகும். அன்றைய அரேபிய ஆட்சி ஸ்பெயின் நாட்டின் கோர்டோபா ( Cordoba ) என்ற நகரத்தை தலைநகரமாகக் கொண்டு நடந்தது. ஜிர்ஜாப் தனது மரணகாலம் வரை அங்கேயே வாழ்ந்தார்.அவர் வரவழைக்கப்பட்டதன் முக்கியமான நோக்கங்ககளில் ஒன்று அரேபிய இசையை பரப்புவதே ஆகும்.அதனால் அந்தப் பகுதிகளைச் சுற்றிப் பயணம் செய்து தனது இசையை கற்ப்பித்ததுடன் அப்பகுதிகளில் வழங்கிய நாடுப்புற இசையை நன்றாகப் பயின்று குறிப்பிடப்படும் அளவுக்கு தனது படைப்புக்களிலும் பயன்படுத்தினார் ஜிர்ஜாப்.
இவரது பங்களிப்பின் உச்சமாக இவரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இசைக்கல்லூரியும் ,இசைக்கல்வியும் கருதப்படுகின்றன.மத்தியதரைக் கடல் பகுதிகளில் ஆரம்பித்து வைக்கப்பட்ட முதல் இசைக்கல்லூரி ஜிர்ஜாபினாலேயே ஆனது என்பது குறிப்பிடத்தக்க வரலாற்று உண்மையாகும்.
அவர் பயிற்றுவித்த கீழைத்தேய இசை அண்டலூசியன் பகுதியில் மிக முக்கியம் பெற்றதுடன் ,அண்டலூசிய இசை மரபுடனும் இணைக்கப்பட்டு விட்டது.இந்த கலப்பில் உருவாகிய இசை ,நடனம் என்பவை இன்றும் வழக்கில் உள்ளன. அவை :
1 .சாம்ராஸ் ( Zamras )
2 .சாம்ப்ராஸ் ( Zampras ) என அழைக்கப்படுகின்றன.கி.பி.15 ம் நூற்றாண்டளவில் இந்த கலப்பிசை அண்டலூசியனில் நிலைபெறவும் தொடங்கியது.
கி.பி.1425 ம் ஆண்டு ஏற்பட்ட ஜிப்சிகளின் குடியேற்றம் இந்த இசைக்கு மேலும் மெருகூட்டியது.ஆரம்பத்தில் ஜிப்சிகள் நன்கு வரவேற்கப்பட்டனர்.மத்திய காலத்தில் ஏற்பட்ட கிறிஸ்த்தவ எழுச்சியின் வெற்றி கி.பி.15 ம் நூற்றாண்டில் அரேபிய ஆட்சியின் வீழ்ச்சி அரேபிய ,யூத ஜிப்சி இன மக்களை கடுமையான ஒடுக்குமுறைக்குள்ளாக்கியது.ஜிப்சிகள் பலவந்தமாக மதமாற்றம் செய்யப்பட்டனர்.மத்திய ஸ்பெயின் யூதர்கள் மத அனுஸ்டானங்களை மிக ரகசியமாக நடத்தி வந்ததை 1990 களின் மத்த்தியில் டென்மார்க் தொலைக்காட்சி ( Danmarks Radio) வெளிக்கொண்டு வந்தது.
ஜிப்சிகள் தாம் எந்த இடத்தில் குடியேறுகிறார்களோ அந்த இடங்களில் உள்ள இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து தமையும் அர்ப்பணிப்பர்.அத்துடன் தமது பாணியில் அவற்றை இசைத்து தனி முத்திரை பதிப்பதையும் தமது பண்பாகக் கொள்வார்கள்.அரேபிய ,யூத இன மக்களைப் போலவே ஜிப்சிகளும் ஒடுக்குமுறைக்குட்பட்டதால் அவர்களது இசையும் அரேபிய, யூத இன மக்களின் இசைக்கு மிக நெருக்கமாக இருந்தது.
முன்னயவை
பாகம் 1
இன்னும் வரும்..
எங்கள் வீட்டு கிரம் போனில் பெயரைக் கூட மறந்து விட்டேன் …..அந்த ரெக்கோட்டில் பாடிய அன்பாலே தேடிய……என் அழகுச் செல்வம் தங்கம்…..ஊடல் நான்…காதல் ஊடல் நீ என்……இன்னும் என் நினைவில் நிற்கிறது.இந்தப் படம் பார்த்ததும் அந்த நாள் நினைவே வந்தது.லண்டன் வாழ்க்கையில் அராபியர் இசை கேட் கும் இனிய வாய்ப்பு வாய்த்தது அது போல மெக்ஸ்ஸீக்கோ இசையும் கிடைத்தது லண்டனில் மோட்டார் சயிக்கிளீல் கூட்டம்,கூட்டமாக சென்றூ டெண்ட் அடித்டு ஒவ்வொரு ஊராக தங்குபவரும் டவலர்ஸ் ஜிப்சியா தெரியாது ஆனால் இரைச்சலுடான இசை அவர்களூடையது.
மிகவும் பயனுள்ள தகவல்களைத் தந்துள்ளீர்கள்.
நன்றி.
இப்போதைய ரஷ்யாவில் ஜிப்சிகளின் நிலை என்ன? ஐரோப்பாவில் அவர்களது இசை ஆர்வத்துடன் கேட்கப்பட்டதெனில், அவர்கள் மீதான பகைக்குக் காரணங்கள் என்னவாயிருக்கும்? வெறும் இனவாதம் மட்டுமா? மதமுமா?
தமிழ்மாறன்
நீங்கள் இடும் கருத்துக்களும் இரச்சல்லாகவும்,சில வேளை எரிச்சலாகவும் இருக்கிறது. என்ன செய்வது.?
இரைச்சலுடான இசை அவர்களூடையது.அவர்கள் பெயர் ரோக்கேர்ஸ்.
ஆர்வத்தை தூண்ட கூடிய கட்டுரை.அவர்களின் தோற்றம் வெள்ளைக்காரர்கள் போன்றும் இருக்கிறது.சிலர் அரேபியர்கள் போலவும்,சிலர் நீங்கள் முன்பு குறிப்பிட்டது போல இந்தியர்கள் போலவும் இருக்கிறார்கள்.
ஈழ தமிழரும் புது வகையான நாடோடி இனமாக இன்னும் சில வருடங்களில் கணிக்கவும் படலாம்.மொழியையும் ,மதத்தையும் விட்டால் அந்த நிலை வரும்.