தமிழக மீனவர்களை நடுக்கடலில் தாக்குவதையும், இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்து கொண்டிருக்கும் மீனவர்களை கடத்தி செல்வதையும் இலங்கை கடற்படையினர் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் இந்த தொடர் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியவில்லை. இந்தநிலையில் நாகையை சேர்ந்த 13 மீனவர்கள் கடத்தப்பட்டு உள்ளனர். நாகையை அடுத்த அக்கரைப் பேட்டை மீனவ கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் விஜயகுமார்.
இவருக்கு சொந்தமான படகில் மகேந்திரன், செந்தில்நாதன், பழனிவேல், அருள், செல்வன், சற்குணன், செல்வநாதன் ஆகிய 7 பேரும், இன்னொரு படகில் 6 பேரும் கடந்த 9-ந்தேதி மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் இந்திய எல்லையில் நடுக்கடலில் வலை வீசி மீன்பிடித்து கொண்டு இருந்தனர்.
அப்போது குட்டி ரோந்து கப்பலில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். 2 படகுகளை சுற்றி வளைத்தனர். பின்னர் இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்ததாக கூறி 13 மீனவர்களையும் அவர்கள் சிறைபிடித்து சென்றனர்.
அதிர்ச்சி அடைந்த மற்ற மீனவர்கள் கரைக்கு திரும்பி இந்த தகவலை ஊருக்குள் தெரிவித்தனர். இந்த தகவல் காட்டு தீ போல பரவியது. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. மீனவர்களின் குடும்பத்தினர் கதறினர்.
தகவல் அறிந்ததும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் விரைந்து சென்று ஆறுதல் கூறினார். மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து உள்ளார்.