ஐ.நா.மனித உரிமைகள் பேரவையுடன் இலங்கை பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கடினமாக்கியுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அவருடைய அறிக்கைகள் இந்த நாட்டு மக்களின் ஆதரவு திரட்டும் விடயத்தை எமக்கு கடினமானதாக்கியுள்ளன. அத்துடன் அவரின் அலுவலகத்துடன் நெருக்கமாக செயற்படுவதையும் கடினமானதாக்கியுள்ளது. இலங்கைக்கான அவரின் விஜயத்தையும் கடினமானதாக்கியிருக்கிறது என மனித உரிமைகள் விவகார அமைச்சர் மஹிந்த சமரசிங்க பத்திரிகை ஒன்றிற்கு கூறியுள்ளார்.
“அரசாங்கம் தனது மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்து செயற்படக் கூடிய விதத்தில் நீங்கள் எமக்கு உதவியாக இல்லையென்று நான் கூறியுள்ளேன்” என்றும் அமைச்சர் சமரசிங்க தெரிவித்திருக்கிறார்.
தற்போதைய தருணத்தில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராலயம் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என்று நான் தெளிவுபடுத்தியுள்ளேன். உயர்ஸ்தானிகராலய அலுவலகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட ஆலோசகர் ஒருவர் உள்ளார். அவர் ஐ.நா.வின் நாட்டுக்கான பிரதிநிதிகள் குழுவுடன் இணைந்து செயற்படுவதுடன் கிரமமாக உயர்ஸ்தானிகராலய அலுவலகத்திற்கு அறிக்கைகளை அனுப்பி வருகிறார் “என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார் .