22.03.2009.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இரு நாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தியா செல்கிறார். இந்த விஜயத்தின் போது தேசிய, பிராந்திய, சர்வதேச மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாக அரசாங்க அதிகாரிகளுடனும் இந்திய மனித உரிமை ஆணைக்குழு பிரதிநிதிகளுடனும் விரிவான பேச்சுவார்த்தைகளை அவர் நடத்தவுள்ளதாக ஜெனீவாவிலுள்ள அவரின் அலுவலக உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவுக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தின் முதற்கட்டமாக கடந்த 17 ஆம் திகதி நவநீதம்பிள்ளை நேபாளத்திற்கு சென்றிருந்தார். அங்கு ஜனாதிபதி, பிரதமர் பிரசண்டா, ஐ.நா. அலுவலர்கள், மனித உரிமைப்பிரதிநிதிகளைச் சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
இலங்கையில் மோதல் பகுதிகளிலுள்ள மக்களின் மனித உரிமைகள் தொடர்பாக அண்மையில் கடுமையாக விமர்சித்திருந்த நவநீதம்பிள்ளையின் இந்திய விஜயம், அரசியல் அவதானிகளாலும் மனித உரிமை ஆர்வலர்களாலும் கூர்ந்து அவதானிக்கப்படுவதுடன் எதிர்பார்ப்புகளையும் தோற்றுவித்துள்ளது.
இலங்கையின் அயல்நாடும் பிராந்தியத்தில் வல்லரசுமான இந்தியாவுடன் இலங்கையின் மோதல்பகுதியில் சிக்கியுள்ள மக்களின் மனித உரிமைகள் , மனிதாபிமான நெருக்கடி என்பன தொடர்பாக இந்திய அதிகாரிகளுடன் நவநீதம்பிள்ளை ஆராய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்படுகிறது.
நேபாளம் தொடர்பாக தனது பிந்திய அறிக்கையில் கருத்துத் தெரிவித்துள்ள ஐ. நா. மனித உரிமை ஆணையாளர், “நேபாளத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. முடியாட்சிக்குப் பதிலாக அங்கு குடியாட்சி மலர்ந்துள்ளது. ஆயினும் சமாதான நடவடிக்கைகளை வலுப்படுத்தும் விடயத்தில் சவால்கள் உள்ளன. மனித உரிமைகள் விவகாரத்தின் தனது ஈடுபாடுகளை அமுல்படுத்துவதற்குரிய வரலாற்றுரீதியான வாய்ப்பு நேபாளத்திற்கு கிட்டியுள்ளது’ என்று நவநீதம்பிள்ளை கூறியுள்ளார்.