தன்னை உணவில் விஷம் வைத்துக் கொல்ல சிறைக்குள்ளேயே சதி நடப்பதாக பகிரங்கமாக குற்றச்சாட்டு ஒன்றை கூறியிருந்தார் நளினி.
. சென்னை: எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனக்குக் கொடுக்கப்படும் உணவில் மருந்தைக் கலந்து கொல்ல முயற்சி நடக்கிறது என்று நளினி புகார் கூறியதைத் தொடர்ந்து அதுகுறித்து விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிறைத்துறை கூடுதல் டிஜிபி ஷியாம் சுந்தருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்,கடந்த புதன்கிழமை (21-4-2010) யில் இருந்து புது குற்றவாளி தொகுதியில் இருந்த எல்லா விசாரணை கைதிகளையும் பழைய குற்றவாளி தொகுதிக்கு மாற்றிவிட்டனர்.தற்போது புது குற்றவாளி தொகுதிகள் 2, 3, 4, 5, 7, 8 ஆகியவற்றில் 200 பேர் அடைக்கக்கூடிய இடம் காலியாக உள்ளது. இதில் 6-வது தொகுதியில் நான் மட்டுமே இருக்கிறேன்.எனக்கு `ஏ‘ வகுப்பு இருப்பதால் ஒரு உதவியாளர் உண்டு. எனக்கு அது மறுக்கப்பட்டு உள்ளது. ஆனால், புது குற்றவாளி தொகுதியை கடந்த 21-4-2010 முதல் பெருக்க, சுத்தம் செய்யவோ யாரையும் அனுமதிப்பதில்லை. அந்த தொகுதிக்கான வார்டர் முதல் தளத்துக்கு வரவோ, அங்குள்ள வேலைகளை செய்யவோ தடை செய்யப்பட்டு உள்ளது.இது தவிர காலை–மாலை என்று என்னுடனே சமையல் அறையிலும், தொகுதியிலும் பணியில் இருக்கும் பெண் காவலர்கள் என் உணவில் மருந்து கலக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. என் உணவை காப்பாற்ற நான் கடும் முயற்சி செய்தும் பலன் ஒன்றும் இல்லை. இரவில் கே.சி.லட்சுமி என்ற உதவி ஜெயிலர் 27-4-2010 இரவு வருகிறார். இவர்களாக எதை வேண்டுமானாலும் கொண்டு வந்து என் தொகுதியில் போட்டு விட்டு என்னை சோதனை செய்து எடுத்ததாக சொல்ல நிறைய வாய்ப்புகள் உண்டு என்று கூறியுள்ளார் நளினி.இது தொடர்பாக இன்று சட்டமன்றத்தில் எழுப்பிய கேள்வி ஒன்றிர்கு பதிலளித்த சட்ட அமைச்சர் துரைமுருகன் கோவை சிறைத்துறை டி.ஜி.பி கோவிந்தராஜன் தலைமையில் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தி இரண்டு நாட்களுக்குள் விசாரணை அறிக்கை அரசுக்கு சமர்பிக்கப்படும் என்றார்.