முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்து, சுப்ரீம் கோர்ட், சமீபத்தில் உத்தரவிட்டது. இவர்களுடன் சேர்த்து, 23 ஆண்டுகளாக சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்வது குறித்து, தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்றும், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய, தமிழக அமைச்சரவை முடிவு செய்தது. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை விடுதலை செய்வதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இவர்களை விடுதலை செய்வதற்கு, சுப்ரீம் கோார்ட் தடை விதித்துள்ளது.
தேர்தல்காலத்தில் ஜெயலலிதாவிற்கு வாய்ப்பாகப் போன நீதிபதி சதாசிவத்தின் பரிந்துரை அவரை அதிரடித் தீர்மானம் எடுக்கத் தூண்டியது. மரணதண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட மூன்று பேரை மட்டுமல்ல ஏழுபேரையும் மத்திய அரசு மூன்று நாட்களுக்குள் விடுதலை செய்யவேண்டும் தவறினால் தான் அவர்களை மானில அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் விடுதலை செய்வேன் என அறிவித்தார். மாநில அரசிற்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய அதிகாரம் வழங்கும் குற்றப்பிரிவு 432 இன் அடிப்படையிலேயே அந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாக அறிவித்தார்.
குற்றவியல் பிரிவு 432 ஐ பின்னதாகச் சேர்த்துக்கொள்ளப்பட்ட பிரிவு 435(1) கட்டுப்படுத்துகிறது என்பது ஜெயலலிதாவிற்குத் தெரியாததல்ல. அடிப்படையில் பிரிவு 435 இன் அடிப்படையில் மத்திய அரசு அல்லது அதனுடன் தொடர்புடையவர்கள் சார்ந்த வழக்குகளில் மாநில அரசு சுயாதீனமாக முடிவெடுக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் 4 பேரை விடுதலை செய்வதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதி ரஞ்சன் கோகோய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சித்தார்த் லூத்ரா ஆஜரானார்.
புதிய மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. இவ் வழக்கு ஆயுதச் சட்டம், வெடிபொருள்கள் சட்டம், வெளிநாட்டினர் சட்டம், பாஸ்போர்ட் சட்டம் ஆகியவை தொடர்பானது. இதுபோன்ற வழக்குகளில் மாநில அரசுகள் குற்றவாளிகளை விடுதலை செய்தது கிடையாது.
நாட்டின் முன்னாள் பிரதமர் கொலை செய்யப்பட்ட இந்த வழக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. குற்றவாளிகள் 7 பேரும் தங்கள் செயலுக்காக இதுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் இந்த விவகாரத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்ட விதிகளை ஆராயாமல் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே தமிழக அரசு கடந்த 19-ம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி பி. சதாசிவம் தலைமையிலான அமர்வு வரும் 27-ம் தேதி விசாரணை நடைபெறும் என்று அறிவித்தது.
ரஜீவ் கொலையின் சூத்திரதாரிகளும் ஜெயலலிதாவும் கோமாளிகளும்:ரமணா