நல்லூர் ஆலயத்தில் இன்று (27.08.2014 புதன்கிழமை) காலை இடம் பெற்ற பூஜை வழிபாடுகளில் யாழ். மாவட்டப்படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா தலைமையில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் கலந்து கொண்டனர்.
நல்லூர் சங்கிலியன் தோப்பில் இருந்து மங்கல வாத்தியங்களுடன் இராணுவத்தினர் காவடிகள் எடுத்துவர ஏனையோரும் ஊர்வலமாக நல்லூர் ஆலயத்தை சென்றடைந்தார்கள்.
இதன்போது ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டதுடன் தமது படைப்பிரிவுகளின் கொடிகளை வைத்து ஆசீர்வாதமும் பெற்றுச்சென்றனர்.
மக்களின் அன்றாட வாழ்க்கையை இராணுவம் ஆக்கிரமிப்பதற்கான முன்னுதாரணம் இது. மக்களின் பொருளாதார அடிப்படைகள் மற்றும் சிறு வியாபாரங்களை இராணுவம் நேரடியாகவும் மறை முகமாகவும் ஆக்கிரமித்துக்கொள்கிறது. யுத்தம் செய்வதற்காக தனது தேவைக்கும் அதிகமாக இலங்கை அரசாங்கம் விதைத்த இராணுவம் இலங்கை முழுவதையும் அரை இராணுவ ஆட்சிக்குள் இட்டுச்சென்றுள்ளது.
இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் சந்தித்து சமூகப் பிரச்சனைகள் குறித்துப் பேசுவதே கண்காணிக்கப்படும் இருண்ட சூழலில் மக்கள் வைக்கப்பட்டுள்ளனர்.
போரைக் காரணமாக முன்வைத்து சிங்களப் பகுதிகளில் மக்கள் அமைப்புக்கள், சமூக ஒருங்கிணைப்பு மையங்கள் அனைத்தும் அரசின் கண்காணிப்பிற்குள் கொண்டுவரப்பட்டிருந்தன. வடக்கிலும் கிழக்கிலும் மக்கள் ஒன்றுகூடும் அமைப்புக்களைப் புலிகள் தங்களின் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தி அடையாளப்படுத்தியிருந்தமையால் புலிகள் அழிக்கப்பட்ட போது அவை அழிந்து போயின. இவ்வாறு இலங்கை முழுவதும் வெகுஜன அமைப்புக்கள் அழிக்கப்பட்டதால் அரச பாசிசம் இலகுவாக தன்னை நிறுவிக்கொண்டது. இன்று மீண்டும் வெகுஜன அமைப்புக்களை உருவாகாமல் கண்காணிப்பதே இராணுவத்தின் பிரதான கடமையாக உள்ளது.
வடகிழக்கில் அரசியல் மாற்றங்களையும் ஆக்கிரமிப்பையும் கண்டுகொள்ளாத மக்களைச் சட்டமும் கண்டுகொள்வதில்லை. வெகுஜன அமைப்புக்களைத் தோன்றவிடாமலும் மக்கள் ஒன்றுகூடுதலைத் தடுக்கவும் வாக்குப் பொறுக்கும் கட்சிகள் ஒரு புறத்தில் தடையாகவுள்ளன. இவற்றிற்கு அப்பால் மக்கள் அமைப்புக்களை தோற்றுவிக்கும் புதிய தந்திரோபாயத்தை முன்வைக்கும் அரசியல் தலைமைகள் இங்கு இல்லை.
உண்மையில் தமிழ் மக்களிடமிருந்து அந்நியப் பட்டுள்ள இலங்கை அரச படைகளை அவர்களுடன் இணைக்கும் முயற்சி இது. இதனால் சில நன்மைகளும் பல தீமைகளும் விளையலாம்.
நன்மைகள்: இராணுவம் இனவாத அடிப்படையில் செய்த சில நடவடிக்கைகள் குறைவடையலாம்.
தீமைகள்: மக்களுடனான இராணுவ உறவு அதிகரிக்கும். இதன் விளைவாக இனி யாராவது மக்களிற்காகப் போராட முற்பட்டால் இலகுவில் காட்டிக் கொடுக்கப்படுவார்கள்.